என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ் லின்
    X
    கிறிஸ் லின்

    கிறிஸ் லின்னின் அதிரடியால் பிரிஸ்பேன் ஹீட் 212 ரன்கள் குவித்து வெற்றி

    பிக் பாஷ் டி20 லீக்கில் கிறிஸ் லின் 55 பந்தில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 212 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
    பிக் பாஷ் டி20 லீக்கில் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

    ஹோபர்ட் ஹரிகேன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது. டாம் பாண்டன், பிரியன்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    பாண்டன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரியன்ட் உடன் கேப்டன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரியன்ட் 36 பந்தில் 65 ரன்கள் விளாசினார்.

    அடுத்து வந்த ரென்ஷா 17 பந்தில் 30 ரன்களும், பென் கட்டிங் 8 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர். கிறிஸ் லின் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 88 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

    பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் டி'ஆர்கி ஷார்ட், ஜுவெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷார்ட் 25 ரன்னிலும், ஜுவெல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மெக்டெர்மோட் 23 ரன்னிலும், மில்லர் 23 ரன்னிலும், பெய்லி 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குறைந்த பந்தில் இவர்கள் ரன்கள் குவித்தாலும் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாமல் போனது.

    ஆகவே ஹோபர்ட் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புள்ளிகள் பட்டியலில் பிரிஸ்பேன் ஹீட் ஐந்து போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மூலம் நான்கு புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் 2 வெற்றிகள் மூலம் ரன்ரேட் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் நான்கில் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.
    Next Story
    ×