search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேரிகோம் - நிகாத் ஜரீன்
    X
    மேரிகோம் - நிகாத் ஜரீன்

    குத்துச்சண்டை தகுதி சுற்று போட்டியில் மேரிகோம்-நிகாத் ஜரீன் மோதல்

    குத்துச்சண்டை தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் மேரிகோம், நிகாத் ஜரீனை இன்று எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதற்கான 2 நாள் தகுதி போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி ஜரீன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார். தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீனை இன்று எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்.

    மேரிகோமை தகுதி சுற்று இல்லாமல் அணிக்கு நேரடியாக தேர்வு செய்யக்கூடாது, தகுதி போட்டியில் என்னுடன் அவரை மோத வைக்க வேண்டும் என்று நிகாத் ஜரீன் அடிக்கடி வலியுறுத்தி வந்த நிலையில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மல்லுகட்ட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிகாத் ஜரீன் கூறுகையில், ‘மேரிகோமுக்கு எதிராக மோத வேண்டும் என்ற நீண்ட கால விருப்பம் இப்போது நிறைவேறுகிறது. அவருக்கு எதிராக களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். எனது 100 சதவீத திறமையை வெளிப்படுத்தி, இதை மறக்க முடியாத போட்டியாக மாற்ற முயற்சிப்பேன்’ என்றார்.

    Next Story
    ×