search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவ்
    X
    குல்தீப் யாதவ்

    2-வது முறையாக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் குல்தீப்

    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை குல்தீப் யாதவ் தன்வசப்படுத்தி உள்ளார்.
    இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கபளீகரம் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். அந்த ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே கோலி சூப்பராக கேட்ச் செய்து சிலிர்க்க வைத்தார். 5-வது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 6-வது பந்தில் அல்ஜாரி ஜோசப், ‘ஸ்லிப்’ பகுதியில் நின்ற ஜாதவிடம் பிடிபட்டார்.

    25 வயதான குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதிலும் 33-வது ஓவரில் தான் ஹாட்ரிக் நிகழ்ந்தது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

    இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை தன்வசப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், இலங்கையின் மலிங்கா, சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த அரிய பட்டியலில் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார். இதில் மலிங்கா மட்டும் 3 முறை ஹாட்ரிக் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களில் குல்தீப் யாதவை தவிர்த்து சேத்தன் ஷர்மா, கபில்தேவ், முகமது ஷமி தலா ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருப்பது நினைவு கூரத்தக்கது. 
    Next Story
    ×