search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூர் குருபிரசாத் - சச்சின் டெண்டுல்கர்
    X
    பெரம்பூர் குருபிரசாத் - சச்சின் டெண்டுல்கர்

    சச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்

    கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கரால் தேடப்பட்ட நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என தெரியவந்துள்ளது.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம்  முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக  வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம்.  

    அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் செய்வதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல்  ஆக்கியுள்ளனர்.
     
    ‘எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான்  ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டல் பணியாளர் ஒருவரை சந்தித்தேன்.

    கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த ஓட்டலின் ஊழியர் அப்போது  எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் உடனடியாக பட்டையின் வடிவத்தை மாற்றினேன்.

    டுவிட்டர் பதிவு

    அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’  என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

    2001-ம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தபோது சச்சின் டெண்டுல்கர் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்தபோது அவருக்கு காபி பரிமாற வந்த ஓட்டல் பணியாளர்  அளித்த ஆலோசனை மிகப்பெரிய பலனை அளித்தது.

    2001-ம் ஆண்டு மார்ச் 18 முதல் 21-ம் தேதிவரை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அந்தப் போட்டித்தொடரில் முதல் இன்னிங்சில் சதம் அடித்திருந்த சச்சின் 126 ரன்களை குவித்து இந்திய அணி 501 ரன்களுடன் வெற்றிவாகை சூடுவதற்கு களம் அமைத்து தந்தார்.

    மேலும், ஆஸ்திரேலியாவுடனான அந்த போட்டித்தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றது.

    இந்நிலையில், சச்சின் சந்திக்க விரும்பிய நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    ’சச்சினுக்கு அன்று நான் ஆலோசனை கூறிய சம்பவம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதமான தருணமாகும். என்னை அவர் சந்திக்க விரும்புவதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என
    நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், குருபிரசாத்.
     
    Next Story
    ×