search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றியது இந்தியா

    நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.
    மும்பை:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன் குவித்தது.

    லோகேஷ் ராகுல் 56 பந்தில் 91 ரன்னும், (9பவுண்டரி, 4 சிக்சர்), ரோகித்சர்மா 34 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 29 பந்தில் 70 ரன்னும் (4 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தனர்.

    கோட்ரெல், வில்லியம்ஸ், பொல்லார்ட் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 67 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் பொல்லார்ட் 39 பந்தில் 68 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), ஹெட்மயர் 24 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), எடுத்தனர்.

    முகமது‌ஷமி, தீபக்சாஹர், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது.

    இந்த தொடரின் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு கிடைத்தது. 2 அரை சதத்துடன் அவர் 183 ரன்கள் குவித்தார். வெற்றி குறித்து அவர் கூறியதாவது:-

    நான் விளையாடிய ஆட்டங்களில் இதுதான் சிறந்த இன்னிங்ஸ் ஆகும். முதலில் பேட்டிங் செய்து பெற்ற இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தொடரை முடிவு செய்யும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் முக்கிய பங்காற்றினார்கள்.

    முதலில் பேட்டிங் செய்ய தயக்கம் இருந்தது. ஆனால் இந்த ஆடுகளத்தில் எங்களால் மிகவும் இயல்பாக ஆட முடிந்தது. இது எங்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. தற்போது நாம் அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெறுவது குறித்த நிறைய பேசிவிட்டோம். களத்தில் இறங்கி திட்டங்களை செயல்படுத்துவதுதான் முக்கியம்.

    எனது பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் வழக்கமாக இப்படி ஆட மாட்டேன். கே.எல். ராகுலிடம் கடைசிவரை களத்தில் இருக்குமாறு கூறி நான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இது ஒரு அழகான சிறப்பான இன்னிங்ஸ் ஆகும்.

    அனைத்து போட்டியிலும் ரன்களை குவிக்க முடியும் என்பது எனது தன்னம்பிக்கை. எதுவாக இருந்தாலும் அதில் மனதை செலுத்தினால் போதும்.

    எனது பங்களிப்பு முக்கியமானது. நான் இரண்டு பங்களிப்புகளையும் செய்ய வேண்டும். அதிரடியாக ஆட வேண்டும். களத்தில் சிறப்பாக ஆடி நம்பிக்கை பெற வேண்டியுள்ளது.

    வர இருக்கும் உலக கோப்பை போட்டி எங்களுக்கு ஊந்து சக்தியாக இருக்கும். திட்டங்களை பற்றி பேசுவதை விட அதை களத்தில் செயல்படுத்துவதில் தான் வெற்றி காணவேண்டும்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டித்தொடர் நடைபெறுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் ஆட்டம் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
    Next Story
    ×