search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அணி
    X
    தமிழ்நாடு அணி

    சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை எளிதில் வீழ்த்தியது தமிழ்நாடு

    சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்கில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி பெற்றது.
    இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.

    லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. 10 அணிகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இன்று சூரத்தில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குரூப் ‘பி’-யில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதின. தமிழ்நாடு டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷா 19 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது வீரராக களம் இறங்கிய முலானி 52 பந்தில் 73 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற, மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களே அடித்தது.

    பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களம் இறங்கியது. ஷாருக்கான் 17 ரன்னில் ஆட்டமிழக்க, ஹரி நிஷாந்த் 44 பந்தில் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாபா அபரஜித் ரன்ஏதும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, விஜய் சங்கர் 20 பந்தில் 27 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு 13.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×