search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
    X
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

    பெண்கள் டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி தொடரை 5-0 எனக் கைப்பற்றியது.
    இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றது.

    முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.

    பிரோவிடென்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 9 ரன்னிலும், ஸ்மிரிதி மந்தனா 7 ரன்னிலும் வெளியேறினர்.

    அதன்பின் வந்த ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (50), வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ரன்களும் அடிக்க இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை நைட் (22), விக்கெட் கீப்பர் கேம்ப்பெல் (19) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்ட, 7 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் அடிக்க முடிந்தது.

    இதனால் இந்திய பெண்கள் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது. சுஷ்மா வர்மா தொடர் நாயகி விருதையும், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட்ட நாயகி விருதையும் பெற்றனர்.
    Next Story
    ×