search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவன் சுமித்
    X
    ஸ்டீவன் சுமித்

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
    பிரிஸ்பேன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இதன்படி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது.

    டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. ஆஷஸ் தொடரில் 3 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து வியப்பூட்டிய ஸ்டீவன் சுமித் அந்த அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்டில் விளையாட உள்ளார். அவருடன் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோ பர்ன்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள்.

    பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். பிரிஸ்பேனில் 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் தோற்றது கிடையாது. அதன் பிறகு 30 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 23-ல் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம், இமாம் உல்-ஹக், ஹாரிஸ் சோகைல், ஷான் மசூட் என்று திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

    ஸ்டீவன் சுமித்தை கட்டுப்படுத்தினால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் நேற்று அளித்த பேட்டியில் ‘ஸ்டீவன் சுமித் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவதற்கு சில திட்டங்கள் வைத்துள்ளோம். ஆப்-ஸ்டம்புக்கு சற்று மேல்வாக்கில் பந்து செல்லும் வகையில் அவருக்கு பந்து வீச வேண்டும். அதுவும் இடைவிடாது ஒரே பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் அவருக்கு நெருக்கடி உருவாகி, தவறிழைக்க வாய்ப்பு உண்டு. இந்த வியூகத்தை எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×