search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்

    10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

    இதுவரை 11 உலகக்கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 முறையும், வெஸ்ட்இண்டீஸ், இந்தியா அணிகள் தலா 2 தடவையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.



    12-வது உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் நுழைந்தன.

    போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1992 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும்.

    ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.



    ‘லீக்’ ஆட்டம் ஜூலை 6-ந்தேதியுடன் முடிகிறது. முதல் அரையிறுதி (1-வது இடம் பிடிக்கும் அணி VS 4-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 9-ந்தேதியும், 2-வது அரைஇறுதி (2-வது இடம் பிடிக்கும் அணி - 3-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 11-ந்தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந்தேதியும் நடக்கிறது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் தொடக்க விழா நடக்கிறது. முதல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து- டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இரு அணியும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தரவரிசையில் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5-ந்தேதி சந்திக்கிறது.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் 3-வது தடவையாகவும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளன.

    கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து இதுவரை உலகக்கோப்பையை வென்றது இல்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை நடத்துவதால் முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதேபோல தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்துக்கு காத்திருக்கின்றன.



    போட்டி அமைப்பு முறை சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருப்பதால் முன்னணி அணிகள் அரைஇறுதியில் நுழைவதில் சவால் இருக்கலாம். வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

    ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள்தான் மீண்டும் கோப்பையை வெல்லுமா? சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது.

    ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் ரசிகர்களுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    Next Story
    ×