search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பெர்டென்ஸ் ‘சாம்பியன்’
    X

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பெர்டென்ஸ் ‘சாம்பியன்’

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #SimonaHalep #KikiBertens
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 7-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்சை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற சிமோனா ஹாலெப்பால் அந்த முன்னிலையை நீட்டிக்க முடியவில்லை. அபாரமாக செயல்பட்ட கிகி பெர்டென்ஸ் சரிவில் இருந்து மீண்டு வந்ததுடன் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை சாம்பியனான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பெர்டென்ஸ் ஒரு செட்டை கூட இழக்காமல் இந்த பட்டத்தை வென்று அசத்தினார். 27 வயதான பெர்டென்ஸ் வென்ற 9-வது பட்டம் இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் சிமோனா ஹாலெப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 20 வயதான கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சுடன் மோதினார். இதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரபெல் நடால் 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 4-வது முறையாக சிட்சிபாஸ்சுடன் மோதிய ரபெல் நடால் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    தோல்விக்கு பிறகு ரபெல் நடால் அளித்த பேட்டியில், ‘இந்த இரவு எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெளிவாக தெரிந்து இருந்தாலும் அதனை திறம்பட செய்ய இயலவில்லை’ என்று தெரிவித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6 (7-2), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள டோமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    Next Story
    ×