search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘திருவாளர் அதீத நம்பிக்கை’- தினேஷ் கார்த்திக்கை டுவிட்டரில் கிண்டல் செய்த ரசிகர்கள்
    X

    ‘திருவாளர் அதீத நம்பிக்கை’- தினேஷ் கார்த்திக்கை டுவிட்டரில் கிண்டல் செய்த ரசிகர்கள்

    கடைசி ஓவரில் குருணால் பாண்டியாவை விளையாட விடாமல் செய்த தினேஷ் கார்த்திக்கை டுவிட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    விஜய் சங்கர் 28 பந்தில 43, ரிஷப் பந்த் 12 பந்தில் 28, ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 21 ரன்கள் விளாசினர். டோனி 16-வது ஓவரின் 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டோனி ஆட்டமிழக்கும்போது கடைசி 28 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது.



    7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்தி உடன் இணைந்து குருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. தினேஷ் கார்த்திக் - குருணால் பாண்டியா 22 பந்தில் 52 ரன்கள் குவித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 24 ரன்னுடனும், குருணால் பாண்டியா 12 பந்தில் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள்தானே, இந்தியா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பினர்.



    முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் இல்லை. அடுத்த பந்தை தூக்கியடித்தார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படவில்லை. ஆனால் ஈசியாக ஒரு ரன் எடுத்திருக்கலாம். குருணால் பாண்டியா ‘ஸ்ட்ரைக்கர்’ க்ரீஸ் நோக்கி ஓடினார். ஆனால் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க வேண்டாம் என்று குருணால் பாண்டியாவை தடுத்தார்.

    இதனால் குருணால் பாண்டியா விரக்தியடைந்தார். ரசிகர்களுடன் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், குருணால் பாண்டியா ஏற்கனவே 19-வது ஓவரின் கடைசி பந்தில் இமாலய சிக்ஸ் விளாசியிருந்தார். இதனால் அதிக நம்பிக்கையில் இருந்தார்.

    3-வது பந்தில் ஒரு ஓடாததால் இந்தியாவுக்கு கடைசி 3 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 3 பந்தையும் பவுண்டரிக்கு வெளியே அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 4-வது பந்தும் பேட்டிங் சரியாக படவில்லை. ஆனால், இந்த முறை தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். கடைசி இரண்டு பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை குருணால் பாண்டியா தூக்கியடிக்க முயன்றார். ஆனால் ஒரு ரன்தான் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    கடைசி பந்தில் 12 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், வைடு மற்றும் சிக்ஸ் மூலம் இந்தியாவிற்கு 7 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.



    தினேஷ் கார்த்திக் அதீத நம்பிக்கையில் இருந்ததால் அவரை ‘திருவாளர் அதீத நம்பிக்கை’ என டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ஒருவேளை 3-வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுக்கு ஓடியிருந்து, 4-வது பந்தில் குருணால் பாண்டியா சிக்ஸ் அடித்திருந்தால், இந்தியாவுக்கு கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். இப்படி நிகழ்ந்திருந்தால் நியூசிலாந்து பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பார். இதனால் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
    Next Story
    ×