search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா
    X

    டோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா

    மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாஹலின் (6 விக்கெட்) அபார பந்து வீச்சால் 230 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்தது. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது.

    ரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    விராட் கோலி - டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டோனி சிறப்பாக விளையாடியதால் விராட் கோலி நம்பிக்கையுடன் ரன்கள் அடிக்க துவங்கினார். இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு டோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 38 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 60 பந்தில் 66 ரன்கள் தேவைப்பட்டது. 42-வது ஓவரில் 2 ரன்களும், 43-வது ஓவரில் 5 ரன்களும், 44-வது ஓவரில் 1 ரன்களும் அடித்ததால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.

    36 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் டென்சன் சற்று குறைந்தது. 46-வது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 18 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் கேட்ச் பிடிக்க தவறினார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். கடைசி பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    இதனால் இந்தியாவிற்கு 48-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை சிடில் வீசினார். 2-வது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் மூன்று ரன்கள் அடித்தார். 5-வது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது.

    இதனால் கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

    டோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    Next Story
    ×