search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்
    X

    என்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்

    அடிலெய்டில் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என அணி விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி - டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலி 112 பந்தில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்திருந்தது. 38 பந்தில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். அப்போது டோனி 34 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.

    தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். டோனி 20 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்குப்பின் நிருபர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், தன்னை 6-வது இடத்தில் களம் இறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘டோனி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அடிலெய்டு இன்னிங்ஸ் போன்று அவர் ஏற்கனவே பலமுறை விளையாடியுள்ளார். ஆகவே. டோனி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிப்பதை பார்க்க சிறப்பாக இருந்தது. நெருக்கடியை புரிந்துகொண்டு, சரியான நேரம் வரும்போது எதிரணிக்கு பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். இதுதான் எப்போதும் அவருடைய பலம். அடிலெய்டு போட்டி அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

    அவருடைய திட்டம் அவருக்குத் தெரியும். என்னுடைய திட்டம் எனக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருந்தோம். இன்னும் 10 ஓவர்கள் இருக்கிறது. அதில் எப்படி ரன்கள் அடிப்பது என்று டோனி நினைக்கவில்லை. ஆனால், தற்போது பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசுகிறார் என்பது குறித்துதான் யோசித்தார்.

    கடைசி ஓவரில் ஒரு பந்தை வெற்றிகரமாக தூக்கியடித்தால் போதும் என்று எனக்கும் டோனிக்கும் தெரியும். அதனால் நாங்கள் நெருக்குடிக்குள்ளாகவில்லை. எங்களை ஒரு பந்தை கூட தூக்கி அடிக்க விடக்கூடாது என்ற நெருக்கடி பந்து வீச்சாளருக்குத்தான் இருக்கும். ஒரு தவறு செய்தால், அதை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கெள்வோம். அப்படித்தான் டோனி முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.



    போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கான திறமை மிக முக்கியமானது. போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். ஏராளமான அனுபவங்கள் உதவும். கிரிக்கெட் போட்டியில் மிகவும் கடினமான திறமை அது. போட்டியை வெற்றிகரமாக முடிக்கும்போது, அணியின் ஒரு பகுதியாக இருப்பது சிறப்பு.

    அணி நிர்வாகம் தற்போது போட்டியை வெற்றிகரமாக முடிப்பதுதான் வேலை என்று என்னிடம் கூறியுள்ளது. என்னால் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை அணி விரும்புகிறது. அவர்கள் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் என்ன நினைக்கிறார்களோ? அதை என்னால் முடிந்த அளவிற்கு அளிக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×