search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திசாரா பெரேரா ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசிய ஜிம்மி நீசம்
    X

    திசாரா பெரேரா ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசிய ஜிம்மி நீசம்

    மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் திசாரா பெரேரா வீசிய ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசினார். #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 48 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள்தான் எடுத்திருந்தது.

    49-வது ஓவரை திசாரா பேரேரா வீசினார். இந்த ஓவரில் நீசம் முதல் நான்கு பந்துகளையும் இமாலய சிக்சருக்கு தூக்கினார். ஐந்தாவது பந்து நோ-பால். இதில் இரண்டு ரன்கள் அடித்தார். நோ-பால் என்பதால் அதற்குப் பதிலாக வீசிய பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஐந்து பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசிய நீசம் கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கி சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். இந்த ஓவரில் திசாரா பெரேரா 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் திசாரா பெரேரா. இதற்கு முன் கடந்த 2013-ல் தென்ஆப்பிரிக்கா வீரர் ராபின் பீட்டர்சன் திசாரா பெரேரா ஓவரில் 35 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜிம்மி நீசம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பின் இன்றுதான் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். 13 பந்தில் 6 சிக்சருடன் 47 ரன்கள் குவித்த நீசம், அதிவேக அரைசதம் என்ற சாதனையை தவறவிட்டார்.
    Next Story
    ×