search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை - ஹாங் காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி  வீழ்த்தியது இந்தியா
    X

    ஆசிய கோப்பை - ஹாங் காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது இந்தியா

    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி. #AsiaCup2018 #INDvHK
    துபாய் :

    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.

    தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்தும் ஹாங் காங் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்தனர்.

    அந்த அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி சீராக உயர்ந்ததால் ஹாங் காங் அணி வெற்றியை நோக்கி சென்றது, இதனால் இந்திய வீரர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 174 ரன்களை குவித்து அசத்தியது.

    ஆனால், குல்தீப் யாதவ் வீசிய 34-வது ஓவரில் அன்சுமன் ராத் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ரன்களில் அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.



    இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால், அடுத்து களமிறங்கிய கார்டர் 3, பாபர் 18, ஷா 17, ஐஷாஸ் 0, எஸ்சான் 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஹாங் காங் அணி தடுமாறியது. எனவே 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AsiaCup2018 #INDvHK
    Next Story
    ×