search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    251 ரன்கள், 8 விக்கெட்- தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்
    X

    251 ரன்கள், 8 விக்கெட்- தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்

    முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தார் சாம் குர்ரான். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முடிவடைந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 எனக்கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியாவிற்கு அதிகமான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டவர் 20 வயதே ஆன இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான். இவர்தான் இந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.



    எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது சாம் குர்ரான் களம் இறங்கினார். 24 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இங்கிலாந்த 287 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்கள் சேர்த்தது. இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சை தாக்குப்பிடித்து 13 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சாம் குர்ரான் அபாரமாக பந்து வீசி முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் இந்தியா 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டை விரைவாக இழந்தது. இதனால் 274 ரன்னில் ஆல்அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.



    13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து. அப்போது சாம் குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இவரது அரைசதத்தால் இங்கிலாந்து இந்தியாவிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஒருவேளை சாம் குர்ரான் 10 ரன்னிற்குள் ஆட்டமிழந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அரைசதம் அடித்து அணிக்கு வலுவான முன்னிலைக் கொடுக்க இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சாம் குர்ரான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட்டுக்கள், 87 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மழை ஆட்டநாயகனாக விளங்க இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. சாம் குர்ரான் 1 விக்கெட்டுடன் 40 ரன்கள் சேர்த்தார்.

    கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இருந்ததால் சாம் குர்ரான் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் களம் இறங்கவில்லை. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    3-வது டெஸ்டில் களம் இறக்கப்படாத சாம் குர்ரான் 4-வது டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் 4-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 86 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் சாம் குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 78 ரன்கள் குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார். மொயீன் அலி உடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்து விட்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா புஜாரா ஆட்டமிழக்காமல் 132 ரன்களும், விராட் கோலி 46 ரன்கள் சேர்த்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 273 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முக்கியமான கட்டத்தில் சாம் குர்ரான் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினார்.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இங்கிலாந்து 178 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அதன்பின் வந்த சாம் குர்ரான் சிறப்பாக விளையாடி 83 பந்தில் 46 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து 271 ரன்கள் குவித்து விட்டது.



    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மொயீன் அலி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 184 ரன்னில் சுருண்டது. சாம் குர்ரான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    முக்கியமான இரண்டு டெஸ்டில் அதிக ரன்கள் குவித்ததுடன், விக்கெட் வீழ்த்தியும் இந்தியாவின் தோல்விக்கு சாம் குர்ரான முக்கிய காரணமாக இருந்தார்.

    அவர் மூன்று டெஸ்டிலும் 251 ரன்கள் குவித்ததுடன், 8 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் சராசரி 50.2-ம், பந்து வீச்சில் 23.37-ம் சராசரி ஆகும்.
    Next Story
    ×