search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி காளை அணியை வீழ்த்தியும் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறிய டூட்டி பேட்ரியாட்ஸ்
    X

    காரைக்குடி காளை அணியை வீழ்த்தியும் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறிய டூட்டி பேட்ரியாட்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.



    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி மற்றும் தினேஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சுவாமிநாதன் வீசிய 4-வது ஓவரில் கவுஷிக் காந்தி பாஃப்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடித்திருந்தார்.

    அடுத்து, தினேஷ் 16 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுவாமிநாதன் வீசிய பந்தில் பௌல்டு ஆகி வெளியேறினார். சுப்ரமணியம் ஆனந்த் 32, நிதிஷ் ராஜகோபால் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஜகோபால் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அதன்பின், அபிஷேக் 7, ரங்கராஜன் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினாலும், சதீஷின் சிறப்பான ஆட்டத்தினால், 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ராஜகோபால் சதீஷ் 57 ரன்களுடனும், கனேஷ் மூர்த்தி ஒரு ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    காரைக்குடி காளை அணியின் சுவாமிநாதன் 3 விக்கெட்டுக்களையும், யோ மகேஷ், பாஃப்னா, ராஜ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். ராஜகோபால் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    இன்றைய போட்டியில் 18.4 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 165 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த டூட்டி பேட்ரியாட்ஸ் 19.2 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியதால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. #TNPL2018 #KKvTP
    Next Story
    ×