search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பேட்டி
    X

    பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பேட்டி

    திண்டுக்கல் அணியிடம் அடைந்த தோல்வி குறித்து பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கோபிநாத், பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டதாக தெரிவித்தார். #TNPL2018 #CSG#TNPL2018 #CSG

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

    திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த 25-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. ஆரிப் அதிகபட்சமாக 36 ரன்னும், கேப்டன் கோபிநாத் 25 ரன்னும் எடுத்தனர். சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக்நாத், வருண் தோத்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 13.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்தில் 63 ரன் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் அணி 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது தோல்வியை தழுவியது. ஒரே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்த அந்த அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கோபிநாத் கூறியதாவது:-

    இந்தப்போட்டி தொடரில் பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம். முதல் 6 ஓவர்களில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. டூட்டி பேட்ரியாட்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சரியான தொடக்கம் அமைந்ததால் 170 முதல் 180 ரன்கள் வரை குவிக்க முடிந்தது.

    தொடக்கம் சிறப்பாக அமையாததே எங்களது தவறு. இதேபோல பந்துவீச்சும் நிலையாக இல்லை. முதல் 4 போட்டிகளில் எங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்தோம். இது எங்களுக்கு பெரிய பின்னடைவு தான்.

    எங்களிடம் திறமைகள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வீரரும், தங்களை மறுபரிசீலனை செய்து மேம்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×