search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவரை விமர்சித்த மரடோனாவுக்கு கால்பந்து சம்மேளனம் கண்டனம்
    X

    நடுவரை விமர்சித்த மரடோனாவுக்கு கால்பந்து சம்மேளனம் கண்டனம்

    நடுவருக்கு எதிரான கருத்தை விமர்சித்த மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. #Maradona
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் இடையிலான 2-வது சுற்று ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ‘இந்த ஆட்டத்தில் நடுவர் ஜிஜெர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். அவரது சில முடிவுகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தன’ என்று கொலம்பியா கேப்டன் ராடமெல் பால்காவ் சாடியிருந்தார்.

    அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, ‘இங்கிலாந்து நினைவுகூரத்தக்க ஒரு வழிப்பறியை செய்து விட்டது’ என்று விமர்சித்தார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், கொலம்பியா வீரர் கார்லஸ் சாஞ்சசை பவுல் செய்ததற்காக கொலம்பியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்பது மரடோனாவின் எண்ணமாகும். ‘இங்கு ஒரு ‘ஜென்டில்மேன்’ தீர்ப்பளிக்கிறார். அவர் தான் போட்டி நடுவர். அவரை போன்ற ‘நேர்மையான நடுவர்’ கூகுளில் தேடிப்பார்த்தாலும் கிடைக்கமாட்டார். அந்த நடுவர் ஜிஜெர் ஒரு அமெரிக்கர்.... என்னவொரு எதிர்பாராத பொருத்தம்’ என்றும் கிண்டலடித்து இருந்தார்.

    இந்த நிலையில் மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. நடுவருக்கு எதிரான அவரது கருத்து முற்றிலும் நியாயமற்றது என்று பிபா கூறியுள்ளது. இதையடுத்து தனது கருத்துக்கு மரடோனா வருத்தம் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×