search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை
    X

    12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை

    சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது சிறுவன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான். #Praggnanandhaa #2ndYoungestGrandmaster #ChessGrandmaster

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா. இவன் கடந்த 2013-ம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். அதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தான். 

    ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ளன. கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வென்று அவர் தனது முதல் நிலையையும், கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் எட்டினான். மேலும், பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டராக, 2500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது. 

    இந்நிலையில், இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டான். தனது 9-வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டான். 

    இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றான். அதோடு, உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் (12 ஆண்டு, 10 மாதங்கள்) பிடித்துள்ளான். இந்தப் பட்டியலில், 2002-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் (12 ஆண்டு, 7 மாதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.



    கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவை, இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார்.   #Praggnanandhaa #2ndYoungestGrandmaster #ChessGrandmaster
    Next Story
    ×