search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
    X

    இங்கிலாந்து தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

    மார்கஸ் ஸ்டாய்னிஸின் அபார சதத்தால் சசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #ENGvAUS
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. வரும் 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. அதன்பின் 27-ந்தேதி ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

    ஒருநாள் போட்டிக்கு முன் ஆஸ்திரேலியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா சசக்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் சதம் அடித்தார். இவர் 110 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது. இவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.



    பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சசக்ஸ் அணி களம் இறங்கியது. சசக்ஸ் அணியின் சால்ட் 62 ரன்னும், பிஞ்ச் 45 ரன்னும், எவன்ஸ் 57 ரன்னும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர். ஆனால், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்டோன் அகர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்த, சசக்ஸ் 220 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னருக்கு தடை விதிக்கப்பட்டப் பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் தொடர் இதுவாகும். ஆஸ்திரேலியா 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை மிடில்செக்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×