search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி டி20 - பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்
    X

    கடைசி டி20 - பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை முழுமையாக வென்றது. #BANvAFG #AFGvBAN
    டேராடூன்:

    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரை கைப்பற்றியது. 

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். ஷசாத் 26 ரன்னிலும், கனி 19 ரன்னிலும், ஸ்டானிக்சாய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நபி 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சமியுல்லா ஷென்வாரி அதிகபட்சமா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    வங்காளதேசம் சார்பில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, 146 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், தமிம் இக்பால் இறங்கினர். தாஸ் 12 ரன்னிலும், தமிம் 5 ரன்னிலும், அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரகிம் ஓரளவு பொறுப்புடன் ஆடினார். இவர் இறுதி வரை போராடி 46 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 10 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து ஆடிய மகமதுல்லா இறுதி வரை போராடினார். வங்காளதேசம் வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
     
    19வது ஓவரில் முஷ்பிகுர் 21 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரஷித் கான் சிறப்பாக பந்து வீசினார்.

    முதல் பந்தில் முஷ்பிகுர் ரகிமை அவுட்டாக்கினார். இரண்டாவது பந்தில் மகமதுல்லா ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்னும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும், ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வங்காளதேசம் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. எதிர்பாராவிதமாக, விக்கெட் விழ, பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இறுதியில், வங்காளதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ரன்னில் பரிதாபமாக தோற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில், முஜிப் உர் ரகுமான், கரிம் ஜனாத் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரகிம் மற்றும் தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கும் வழங்கப்பட்டது. #BANvAFG #AFGvBAN
    Next Story
    ×