search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்ரிடி இதுபோல செய்வது இது 6-வது முறை
    X

    அப்ரிடி இதுபோல செய்வது இது 6-வது முறை

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆறாவது முறையாக அறிவித்துள்ளார். #ShahidAfridi #ShahidAfridiretirement

    லண்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷாகித் அப்ரிடி. சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான இவர் பலமுறை பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பியுள்ளார். அவர் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,716 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 6 சதம், 39 அரைசதம் உட்பட 8064 ரன்கள் குவித்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 1916 ரன்கள் சேர்த்துள்ளார். 

    தற்போது 38 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2006-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், அறிவித்த 2 வாரங்களில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார்.

    அதன்பின், கடந்த 2011-ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார். ஆனால், அறிவித்து 5 மாதங்களில் மீண்டும் சர்வதேச போட்டிகளிலும், உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடத் திரும்பி வந்தார்.



    அதன்பின் 2015-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 15 மாதங்களுக்குப் பின் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடினார். 

    இந்நிலையில், கடந்த 31-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக லெவன் - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக இறுதியாக அப்ரிடி அறிவித்துள்ளார். இந்த முறை கண்டிப்பாக மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பவர மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். #ShahidAfridi #ShahidAfridiretirement
    Next Story
    ×