search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டி20 கிரிக்கெட்: ஒரே ஓவரில் 5 சிக்ஸ்; 35 பந்தில் சதம்; டேவிட் மில்லர் உலக சாதனை
    X

    டி20 கிரிக்கெட்: ஒரே ஓவரில் 5 சிக்ஸ்; 35 பந்தில் சதம்; டேவிட் மில்லர் உலக சாதனை

    வங்காள தேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, மொசேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொசேல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டுமினி 4 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 9.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. ஹசிம் அம்லா 31 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்தார்.

    அதன்பின் இருவரும் இணைந்து வாணவேடிக்கை நடத்தினார்கள். பந்து சிக்சருக்கும், பவுண்டருக்கும் பறந்தது. குறிப்பாக டேவிட் மில்லர் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    11-வது ஓவரின் 2-வது பந்தில் மில்லர் கொடுத்த கேட்சை வங்காள தேசத்தினர் கோட்டை விட்டனர். இதுதான் அவர்களுக்கு பாதகமாக அமைந்தது. 15 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. மில்லர் 16 பந்நதில் 25 ரன்களும், அம்லா 46 பந்தில் 80 ரன்னும் எடுத்திருந்தனர்.

    16-வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். இந்த ஓவரில் மில்லர் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 17-வது ஓவரை மொகமது ஷாய்புதின் வீசினார். இந்த ஓவரில் அம்லா அவுட் ஆனார். அவர் 51 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார். மில்லர் ஒரு பவுண்டரி அடித்தார்.

    18-வது ஓவரை தஸ்கின் அஹமது வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 23 பந்தில் அரைசதம் அடித்தார். 4-வது பந்தில் ஒரு சிக்ஸ் விளாசினார். 18 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்திருந்தது. டேவிட் மில்லர் 25 பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்தார்.



    19-வது ஓவரை மொகமது ஷாய்புதின் வீசினார். இந்த ஓவரில் டேவிட் மில்லர் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்க முயற்சி செய்தார். ஆனால், அதில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இந்த ஓவரில் 6 பந்தில் 31 ரன்கள் விளாசி அசத்தினார் மில்லர். ஒரே ஓவரில் 31 பந்தில் 88 ரன்கள் குவித்தார்.

    20-வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய மில்லர், அடுத்த இரண்டு பந்துகளிலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். 35 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் சதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இவரது சதத்தால் தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

    இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் லெவி 45 பந்திலும், டு பிளிசிஸ், இந்தியாவின் கே.எல். ராகுல் ஆகியோர் 46 பந்திலும், ஆரான் பிஞ்ச், கிறிஸ் கெய்ல் 47 பந்திலும் சதம் அடித்துள்ளனர்.
    Next Story
    ×