search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

    விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் இன்று தொடங்குகிறது. பெடரர் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் இன்று தொடங்குகிறது. பெடரர் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதும், டென்னிசின் உலக கோப்பை என்று வர்ணிக்கப்படுவதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. 140 ஆண்டுகால பழமையான இந்த போட்டியில் வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது.

    விம்பிள்டனையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் லண்டனில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்கள் பிரிவில் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இருப்பினும் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியன்கள் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நோவக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோரில் ஒருவருக்கே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.



    உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாட உள்ள ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டிமுர்ரே, முதல் சுற்றில் 134-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் பப்லிக்கை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார். இடுப்பு பகுதி காயத்தில் சிக்கிய முர்ரே இன்னும் முழுமையான உடல்தகுதியை எட்டாவிட்டாலும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு தன்னை தயார்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

    சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி வரலாறு படைத்த ரபெல் நடால் முதல் சவாலை ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானுடன் தொடங்குகிறார்.

    உடல்ரீதியாக வலுவாக இருப்பதற்காக களிமண்தரை போட்டி சீசனை தவிர்த்து ஓய்வு எடுத்த சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலாவை சந்திக்கிறார்.

    35 வயதான பெடரரின் கதை முடிந்து போய் விட்டது என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்தார். விம்பிள்டன் புல்தரையில் நடக்கும் போட்டியாகும். அவரை மிகவும் கவர்ந்த போட்டியும் கூட. இதுவரை 7 முறை விம்பிள்டனை ருசித்துள்ள பெடரர் இன்னும் ஒரு முறை மகுடம் சூடினால் இந்த கோப்பையை அதிக முறை உச்சிமுகர்ந்த வீரர் என்ற சரித்திர பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார். தற்போது அவருடன் சேர்ந்து அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ், இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா ஆகியோர் தலா 7 முறை இந்த பட்டத்தை வென்று சமனில் இருக்கிறார்கள். பெடரர் கடைசியாக 2012-ம் ஆண்டில் விம்பிள்டனை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சில தினங்களுக்கு முன்பு ஈஸ்ட்போர்ன் டென்னிசில் பட்டத்தை வசப்படுத்தியதன் மூலம் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அடைந்துள்ள 3 முறை சாம்பியனான ஜோகோவிச் முதல் சுற்றில் சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானுடன் மோதுகிறார்.

    கணிப்புபடி எல்லாம் துல்லியமாக அமைந்தால் அரைஇறுதியில் முர்ரே-நடால், ஜோகோவிச்-பெடரர் மோத வேண்டி இருக்கும். டொமினிக் திம் (ஆஸ்திரியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ(அர்ஜென்டினா), நிஷிகோரி (ஜப்பான்), சோங்கா (பிரான்ஸ்) ஆகியோரும் களத்தில் பலமான சவால் அளிக்க காத்திருக்கிறார்கள்.

    ‘நம்பர் ஒன்’ இடத்தை நிர்ணயிக்கும் களமாகவும் விம்பிள்டன் அமைந்துள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க 4 பேர் கோதாவில் நிற்கிறார்கள். முர்ரே, ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க இறுதிப்போட்டிக்கு முன்னேறியாக வேண்டும். அதே சமயம் நடால் இறுதி சுற்றை எட்டினால் அவரது வசம் மீண்டும் முதலிடம் சென்று விடும். வாவ்ரிங்கா பட்டத்தை வெல்லும் பட்சத்தில் அவர் அரியணையில் ஏறி விடுவார். ஜோகோவிச்சை பொறுத்தவரை பட்டத்தை வென்று, நடால், முர்ரே அரைஇறுதிக்கு முன்பாக வெளியேறினால் மட்டும் முதலிடத்தை பெற முடியும்.

    நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கர்ப்பிணியாக இருப்பதால் இந்த முறை விம்பிள்டனில் ஆடவில்லை. ஆனாலும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘குடுமிபிடி’க்கு குறைவிருக்காது. ‘நம்பர் ஒன்’ புயல் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா), முன்னாள் சாம்பியன் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), சிபுல்கோவா (சுலோவக்கியா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), குஸ்னெட்சோவா (ரஷியா), முகுருஜா (ஸ்பெயின்) உள்ளிட்டோர் பட்டத்திற்கான ரேசில் முன்னணியில் ஓடுகிறார்கள்.

    கெர்பர் முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனை இரினா பால்கோனியையும் (அமெரிக்கா), ஹாலெப் நியூசிலாந்தின் மரினா எராகோவிச்சையும், பிளிஸ்கோவா ரஷியாவின் ரோடினாவையும் எதிர்கொள்ள இருக்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொண்டு மறுபிரவேசம் செய்துள்ள முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை பெலாரசின் விக்டோரியா அஸரென்கா முதல் ரவுண்டில் அமெரிக்காவின் கேதரின் பெலிசை சந்திக்கிறார். குழந்தைக்காக விம்பிள்டனை வெல்வேன் என்று சபதம் எடுத்து தன்னை பட்டை தீட்டியுள்ளார்.

    இந்திய தரப்பில் ஒற்றையரில் யாரும் கிடையாது. இரட்டையர் பிரிவில் பெண்களில் சானியா மிர்சா, பெல்ஜியம் வீராங்கனை பிலிப்கென்சுடன் கைகோர்த்துள்ளார். ஆண்கள் இரட்டையரில் லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், புராவ் ராஜா, திவிஜ் சரண் ஆகிய இந்தியர்கள் களம் இறங்க இருக்கிறார்கள்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.266 கோடியாகும். இதில் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.18½ கோடியை பரிசாக அள்ளுவார்கள். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். தோல்வி அடைவோருக்கு ரூ.9¼ கோடி வழங்கப்படும். ஒற்றையரில் பிரதான சுற்றில் கால்பதித்தாலே குறைந்தது ரூ.30 லட்சம் உறுதியாகி விடும். இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.3¼ கோடியும், கலப்பு இரட்டையரில் வெல்லும் இணைக்கு ரூ.85 லட்சமும் அளிக்கப்படும்.

    இரண்டு வார காலம் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ள இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும். 
    Next Story
    ×