என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- வேங்கடசாமி நாட்டாரின் முதல்நிலைக் கல்விப் படிப்பு என்பது திண்ணைப் படிப்புதான்.
- நாட்டார் எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் பேச்சுத் துறையிலும் தம் முத்திரையை நாட்டியவர்.
மாபெரும் தமிழறிஞரான ந.மு. வெங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள நடுக்காவேரி என்னும் சிற்றூரில் முத்துச்சாமி நாட்டார் அவர்களுக்கும் தையல் அம்மாள் என்ற பெண்மணிக்கும் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் பன்னிரண்டாம் தேதி மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சிவப்பிரகாசம் என்பது.
சிவப்பிரகாசம் என்ற பெயர் வேங்கடசாமி என ஏன் மாற்றப்பட்டது? அவ்விதம் மாற்றப்பட்டதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு.
சிறுவயதில் உயிர் போகுமளவு பெரும் உடல்நலக் கோளாறுகள் சிவப் பிரகாசத்திற்கு இருந்தன. அவை அனைத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டும் எனத் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அவரின் பெற்றோர் வேண்டிக் கொண்டனர்.
சிவப்பிரகாசம் படிப்படியாகத் தேறி நல்ல உடல்நலனைப் பெற்றார். வேங்கடவன் அருளால் அவர் உயிர் பிழைத்ததாகக் கருதிய பெற்றோர் நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் சிவப்பிரகாசத்தின் பெயரை வேங்கடசாமி என நிரந்தரமாக மாற்றினர்.
அவரது தந்தையார் விவசாயி மட்டுமல்ல, மிகச் சிறந்த கல்விமானும் கூட. அவரைக் காண பற்பல தமிழ் அறிஞர்கள் வருவார்கள். அவரோடு பல இலக்கியச் செய்திகளை விவாதிப்பார்கள்.
அவற்றையெல்லாம் நாள்தோறும் கேட்டுக் கேட்டு வேங்கடசாமியின் மனத்தில் ஆழமான தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உண்டாயின.
வேங்கடசாமி நாட்டாரின் முதல்நிலைக் கல்விப் படிப்பு என்பது திண்ணைப் படிப்புதான். அதுவும் நான்காம் வகுப்பு வரை மட்டும்தான்.
ஆனால் தம் தந்தையாரிடமிருந்து ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உள்ளிட்ட நூல்களையும் அந்தாதி முதல் கலம்பகம் முடியப் பலவகைப்பட்ட இலக்கியங்களையும் ஏட்டுக் கல்வி மூலமே அறிந்து கொண்டார். முத்துசாமி நாட்டார் அவருக்குத் தந்தை மட்டுமல்ல, ஆசானாகவும் இயங்கினார்.
வேங்கடசாமியின் தமிழ்ப் பற்றையும் இலக்கிய இலக்கண ஆர்வத்தையும் கண்டு வியந்தார் அவரது தந்தையின் உற்ற நண்பரான ஐ.சுவாமிநாத முதலியார். அவர் வேங்கடசாமியை நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெருமைக்குரியதும் மதுரைத் தமிழ்ச் சங்கமாக விளங்கியதுமான செந்தமிழ்க் கல்லூரியில் சேர்த்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நாட்டார் அவர்கள் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் கரங்களால் தங்கப் பதக்கம் பெறும் பெருமையும் பெற்றார்.
திருப்பூர் கிருஷ்ணன்
தமது இருபத்து நான்காம் வயதில் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் நாட்டார். பின்னர் கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிறிதுகாலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற பிஷப்ஹீபர் கல்லூரியில் தொடர்ச்சியாக இருபத்தி நான்கு ஆண்டுகள் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவரது திறமையைப் பலர் மூலம் அறிந்துகொண்ட அண்ணாமலை அரசர் தமது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார். அங்கு ஏழாண்டுகள் பணிபுரிந்த பின் ஓய்வு பெற்ற வேங்கடசாமி நாட்டார் தமது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
இவரது மாணவர்களில் பலர் புகழ் பெற்றவர்கள். அவர்களில் பெரிதும் குறிப்பிடத் தக்கவர், `தமிழ்க் காதல், கம்பர்` போன்ற உயர்ந்த நூல்களைப் படைத்த மாபெரும் தமிழறிஞரான டாக்டர் வ.சுப. மாணிக்கம்.
வேங்கடசாமி நாட்டார் பிஷப் ஹீபர் கல்லூரியில் பணிபுரிந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று அவர் பெருமையை உணர்த்தும்.
நாட்டார் இக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழ்த் துறைத் தலைவராக விளங்கிய வேங்கடசாமி நாட்டாரின் கல்வித் தகுதி என்னவென ஆராய்ந்தார். வேங்கடசாமி நாட்டார் புலவர் பட்டம் பெற்றவர். அது பி.ஏ. என்னும் இளங்கலைப் பட்டத்திற்குத் தான் நிகரானது. முதுகலைப் பட்டமான எம்.ஏ.வுக்கு நிகரானதல்ல.
ஆனால் முதுகலை மாணவர்களுக்கு வேங்கடசாமி நாட்டார் பாடம் நடத்தி வந்தார். இது எப்படிச் சரியாகும்? இளங்கலை மட்டுமே தேறியவர் எப்படி முதுகலை வகுப்புக்குப் பாடம் எடுக்கலாம்?
சிந்தனையில் ஆழ்ந்த அந்த முதல்வர் நாட்டாரை அழைத்துப் பேசினார். அவர் விரைவில் முதுகலைத் தேர்வு எழுதித் தேறவேண்டும் என நிபந்தனை விதித்தார்.
சற்றுநேரம் மெளனமாக இருந்த நாட்டார் பின் அது சாத்திமில்லை என்றும், அவ்விதம் செய்வது அறம் ஆகாது என்றும் தெரிவித்தார். விளங்கவில்லையே என முதல்வர் கேட்ட போது நாட்டார் தம் பதிலை விளக்கினார்.
`ஐயா, பல ஆண்டுகளாக பல இடங்களில் நடக்கும் முதுகலைத் தேர்வுக்கு நான்தான் கேள்வித்தாள் தயாரித்து அளித்து வருகிறேன். எனவே நான் தேர்வெழுதினால் நான் தயாரித்தளித்த கேள்விகளுக்கே நான் பதில் எழுத வேண்டியிருக்கும். அது அறமல்லவே?` என்றார் நாட்டார்!
அந்த பதிலைக் கேட்டு திகைப்பில் ஆழ்ந்த முதல்வர் அப்போதுதான் நாடுபோற்றும் நாட்டாரது தமிழறிவின் பேரெல்லையைப் புரிந்துகொண்டார். அவரிடம் மன்னிப்பு வேண்டினார். அவர் பணிபுரிவது தங்கள் கல்லூரிக்கே பெருமை எனத் தெரிவித்து அவரைப் பணியில் தொடருமாறு அன்புடன் வேண்டிக் கொண்டார்.
அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தமிழறிஞர் கரந்தைக் கவியரசு தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் விருப்பத்திற்கு இணங்க கரந்தை புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியமின்றி மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார்.
வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்குத் தமிழ் தொடர்பாக ஒரு கனவு இருந்தது. தமிழுக்காக தனிப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்று திருச்சி அல்லது தஞ்சாவூரில் நிறுவப்பட வேண்டும் என்பதே அது. அந்தக் கனவு பின்னாளில் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப் பட்டதில் நிறைவேறியது.
நாட்டார் எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் பேச்சுத் துறையிலும் தம் முத்திரையை நாட்டியவர். மிகச் சிறந்த தமிழ்ப் பேச்சாளர். தமிழ்த் தாத்தா உ.வே.சா. தலைமையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் நாட்டார் ஆற்றிய தொல்காப்பியம் பற்றிய உரை எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. திருச்சி வானொலி நிலையத்திலும், திருச்சி சைவ சித்தாந்த சபையிலும், திருப்பாதிரிப் பூலியூர் ஞானியார் சங்கத்திலும் மதுரை திருநெல்வேலி தமிழ்ச் சங்கங்களிலும் இலங்கைத் தமிழ்ச் சங்கத்திலும் அவர் ஆற்றிய உரைகள் தமிழ் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவை.
1940இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் சென்னையில் ஒரு தமிழ் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் வேங்கடசாமி நாட்டாரின் தமிழ் ஆற்றலையும் தொண்டையும் பாராட்டி அவருக்கு நாவலர் என்ற பட்டம் வழங்கப் பட்டது.
செப்பேட்டில் பொறிக்கப்பட்டு இந்தப் பட்டம் வழங்கப் பட்டபோது விழாவில் கூடியிருந்த அத்தனை தமிழ்ச் சான்றோர்களும் மகிழ்ச்சியோடு கரவொலி எழுப்பி அந்தப் பட்டத்தை மனப்பூர்வமாக அங்கீகரித்தார்கள்.
நூற்று ஐம்பத்தெட்டு கட்டுரைகள், இருநூற்று எழுபத்தெட்டு பதிப்பு நூல்கள், நானூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஆவணங்கள் படைத்தவர் நாட்டார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பற்பல தமிழ் அறிஞர்கள் அவரைச் சந்தித்துத் தங்கள் ஐயங்களுக்கு விளக்கம் பெற்றிருக்கிறார்கள்.
1912இல் மகாகவி பாரதியார் நாட்டார் அவர்களைச் சந்தித்து சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியம் தொடர்பாக சில விளக்கங்களைப் பெற்றார் என ஒரு சரித்திரச் சான்று உள்ளது. தமிழ்த் தாத்தா நாட்டார் எழுதிய `கள்ளர் சரித்திரம்` என்கிற படைப்பை சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேங்கடசாமி நாட்டார் நக்கீரர் பற்றியும் கபிலர் பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்த் தாத்தாவுடன் இணைந்து சோழர் சரித்திரம் என்ற நூலைப் படைத்துள்ளார். பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையாரான அ.மு. சரவண முதலியாருடன் இணைந்து திருவிளையாடல் புராணம் குறித்து நூல் எழுதியுள்ளார். இன்னும் எண்ணற்ற நூல்களால் தமிழை அணிசெய்தவர் நாட்டார். வேங்கடசாமி நாட்டாரின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அவரது நூல்களைக் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் என்றே கூற வேண்டும்.
பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தூய தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்ததும் நாட்டாரின் முக்கியமான தமிழ்ப் பணிகளில் ஒன்று. எஞ்சினியர் என்ற சொல்லைப் பொறியாளர் என்றும் ஜட்ஜ் என்ற சொல்லை நீதிபதி என்றும் கோர்ட்டை நீதி மன்றம் என்றும் அட்வகேட் என்பதை வழக்கறிஞர் என்றும் மாற்றிய பெருமையெல்லாம் இவருடையதே.
தமிழே வாழ்வாக வாழ்ந்த வேங்கடசாமி நாட்டார் 1944 இல் தம் அறுபது வயது நிறைவடையும் தருணத்தில் மணிவிழாவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் காலமானார். அவர் பிறந்த ஊரான நடுக்காவேரியில் அவருக்கு ஒரு கற்கோயில் எழுப்பப் பட்டுள்ளது. அங்கு தினசரி வழிபாடு நிகழ்த்தப் படுகிறது. ஒரு தமிழ் அறிஞருக்கு ஆலயம் எழுப்பப் பட்டு நாள்தோறும் வழிபாடு நிகழ்த்தப் படுவது என்பதே அவரது மாபெரும் பெருமையை உணர்த்தும்.
திரு.பி.விருத்தாசலம் என்பவரின் முயற்சியால் வேங்கடசாமி நாட்டார் பெயரில் தொடங்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி `திருவருள் கல்லூரி` என்ற பெயரில் தஞ்சாவூரில் சுயநிதி கல்லூரியாக இயங்கி வருகிறது. இந்தச் செய்தியும் நாட்டாரின் பெருமையை விளக்கும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






