என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்- கணவருக்கு இறுதிச்சடங்கு செய்த துர்பாக்கியம்
    X

    மீனா மலரும் நினைவுகள்- கணவருக்கு இறுதிச்சடங்கு செய்த துர்பாக்கியம்

    • சாகருக்கு மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தான் அந்த தகவல்.
    • ஒரு விஷயம் நடக்கும் வரை நமது மன உறுதி நமக்கே தெரிவதில்லை.

    எனக்கு இப்படி ஒரு நிலை வரும், வாழ்க்கையில் இப்படிப்பட்ட துயரங்களையும் சந்திக்க வேண்டிய காலம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    கொரோனாவின் பிடியில் இருந்து நாடே விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த கால கட்டம். தொற்றை நினைத்து இனி பயப்பட தேவையில்லை என்று எல்லோரும் நிம்மதி அடைந்திருந்தனர்.

    அப்போது எங்களுக்கு மட்டும் பயமுறுத்துவது போல் அந்த தகவல் வந்தது. சாகருக்கு மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தான் அந்த தகவல்.

    உடனே சிகிச்சையில் சேர்த்தோம். மருத்துவர்கள் நல்ல சிகிச்சை அளித்தார்கள். ஆனால் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பு என்பது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதை நான் ஓரளவு கேள்விப்பட்டு இருந்தேன். மருத்துவ துறையில் பதிவு செய்து வைத்தால் போதும். தேவையான உறுப்பு கிடைத்ததும் ஆபரேஷன் செய்து மாற்றி விடுவார்கள் என்பதுதான் என் நினைப்பு.

    ஆனால் ஒரு உறுப்பு கிடைத்தால் மட்டும் போதாது. அதன் திசுக்கள் ஒத்திருக்க வேண்டும். அதே போல் ரத்தம் ஒரே குரூப்பாக இருக்க வேண்டும். தானம் பெறுபவர் மற்றும் தானம் வழங்குபவர்களின் உடல் எடையும், உயரமும் கூட சரியாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சாகரை காப்பாற்ற நடந்த போராட்டத்தின் போது நான் கற்றுக் கொண்டது. இதில் இவ்வளவு விசயம் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது. எங்கள் பிரார்த்தனையும், மருத்துவர்களின் போராட்டமும் என் சாகரை மீட்டு வரும் என்று நம்பினேன். ஆனால் என் நம்பிக்கை பயனற்று போனது.

    எது நிகழக் கூடாது என்று பயந்து கொண்டிருந்தேனோ அது நிகழ்ந்து விட்டது. 28.6.2022 அன்று என் சாகர் மீண்டு வர முடியாத இடத்துக்கு சென்று விட்டார் என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

    தாங்க முடியாத இழப்பையும் தாங்க வேண்டிய சூழல். மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் மட்டும் அனுபவித்து வந்த எனக்கு முதல் முறையாக மிகப் பெரிய துயரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


    எவ்வளவோ கனவுகளுடன் தொடங்கிய என் திருமண வாழ்க்கை பன்னிரண்டு ஆண்டுகளில் முடிந்து போகும் என்று நான் நினைக்கவில்லை.

    நாங்கள் ஆசையாய் கட்டி வாழ்ந்த எங்கள் வீட்டுக்கு உடலாக கொண்டு வரப்பட்டார் சாகர். என்னோடு வேலை பார்த்தவர்கள், என் நண்பர்கள் என்று எல்லோருக்கும் சாகரை தெரியும். சாகருக்கும் அவர்களை எல்லாம் தெரியும். எனவே சாகர் 'இல்லை' என்றதை யாராலும் நம்ப முடியவில்லை.

    இறுதிவரை ஒன்றாக பயணிப்போம் என்று நினைத்து கொண்டிருந்த என் சாகருக்கு நானே இறுதி காரியங்களும் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை. இதுவும் கடவுள் அமைத்ததுதான் என்றால் யாரால் மாற்ற முடியும்?

    மகள் நைனிகாவுக்கு அப்போது 11 வயது. இந்த துயரத்தில் இருந்து எப்படி மீள்வோம்...? அடுத்த கட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை நினைத்தபோது மனதுக்குள் சூழ்ந்த பயம்...! அப்போது எதற்கும் என்னிடம் பதில் இல்லை. கண்ணீர் மட்டுமே விடையாக தெரிந்தது. ஒரே ஒரு விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவள் என்பேன். அதாவது நல்ல அம்மா. நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்து இருக்கிறார்கள்.

    குழந்தை பருவத்தில் இருந்தே என்னை சரியான பாதையில் வளர்த்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டியது என் அம்மா. சந்தோசமான தருணங்களை பல நேரங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். ஆனால் கஷ்டமான நேரத்திலும் என் துக்கத்தில் பங்கெடுத்து என்னை மீட்டு கொண்டு வர இவ்வளவு நண்பர்கள் இருந்தார்கள் என்பது என்னையே நெகிழ வைத்து விட்டது.

    எங்கெங்கு இருந்தெல்லாமோ வந்தார்கள்... யார் யாரெல்லாமோ வந்தார்கள்...ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு போல் கருதி எனக்கு நம்பிக்கை, தைரியம் ஊட்டினார்கள்.

    ஏதோ ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமல்ல. தினமும் வீட்டுக்கு வந்தார்கள். என்னோடு இருந்து எதை எதையோ பேசி என்னையும் பேசவும், சிரிக்கவும் வைத்தார்கள். வா... வெளியே போயிட்டு வரலாம் என்று அழைப்பார்கள். நான், நாளை வருகிறேன் என்றாலும் விட மாட்டார்கள். ஏதாவது பிடித்தமான இடத்தை சொல்லி அதுவரை போகலாம் என்பார்கள். அதுவும் நான் ரெடியாகி வரும் வரை காத்திருந்து அழைத்து செல்வார்கள்.

    அந்த அளவுக்கு அவர்கள் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இழப்பை நாம் சந்தித்தே ஆக வேண்டும். இதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். இழப்பின் தன்மையை பொறுத்து அதன் தாக்கமும், பாதிப்பும் நம்மிடம் இருக்கும்.

    ஒரு விஷயம் நடக்கும் வரை நமது மன உறுதி நமக்கே தெரிவதில்லை. இவ்வளவு துயரங்களையும், கஷ்டங்களையும் கடந்து மீண்டு வந்தது எப்படி என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

    அம்மா உனக்கு எது வேணும்னாலும் செய்வேன். உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வேன் என்று தனது மழலை மொழியில் நைனிகா சொன்னது என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

    இனி நைனிகாவே என் உலகம்... நைனிகாவுடனேயே என் வாழ்க்கை... சுவையான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்).

    Next Story
    ×