என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- தெரிந்து செயல் வகை
- சிலருடைய வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்.
- சூழலுக்கு தகுந்தவாறு நம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதிகாரம்: தெரிந்து செயல்வகை
இந்த அதிகாரத்தில்,
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
என்ற குறளில் தொடங்கி
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை செய்வதால் ஏற்படும் இடர்பாடுகளையும் நன்மைகளையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.
அவ்வாறு செய்வதால் அச்செயல் நன்மை பயக்கும் செயலாக இருக்கும். இத்தகைய முன்னெச்சரிக்கையான சிறப்பான எண்ணம் சான்றோர்களுக்கும் புண்ணியபலம் படைத்த மன்னர்களுக்கும் உண்டு. சிலர் சிறந்த அறிவு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் அவர்களின் செயல்பாடுகளெல்லாம் இடர்பாடுகளுடன் இருக்கும். அறிவில் சிறந்து விளங்குபவர்களுக்கும், வியாபாரத்தில் தொழிலில் தோல்வி உண்டாகும். சிலருடைய வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்.
நல்வினை இருந்தால் சிறந்த முயற்சி உண்டாகும். தீவினையிருந்தால் சோம்பல் உண்டாகும்.
மேலும்மேலும் நட்டம் ஏற்பட்டு எல்லாமே இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிலர் மிகவும் உயர்ந்த நிலையில் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டால் வேறு ஏதாவது கூலி வேலை செய்தாவது தங்களைக் காப்பாற்றி கொள்வார்கள்.
சிலர் தன்மானம் என்ற பெயரில் எல்லாப் பொருள்களையும் இழந்து கடனாளியாகி குடும்பத்தையே சீரழித்து விடுவார்கள். இதற்கு அக்குடும்பத்தின் தலைவனது பலகீனமே காரணம். சூழலுக்கு தகுந்தவாறு நம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு செயலில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் எவ்வாறு பயன்தரும்? உடனடியாக எவ்வாறு பயன்தரும்? எதிர்காலத்தில் எவ்வாறு பயன் தரும்? (உடனடி திட்டம், குறுகிய காலத்திட்டம், நீண்டகால திட்டம்).
ஒரு செயல் எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு எவ்வாறு பயன்தரும் என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும். இந்த அதிகாரம் அரசியலில் சொல்லப்படுவதால் அரசு நடத்துபவருக்கும் பொருந்தும். கோடிக்கணக்கான அளவில் முதலீடு செய்து வியாபாரம் அல்லது தொழில் செய்பவருக்கும் பொருந்தும்.
ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
வீடு கட்டுபவர்கள் அவர்களின் தேவைக்கேற்றவாறு எளிமையான வீடு கட்டிக்கொண்டு மீதியுள்ள பணத்தைத் தொழில் தொடங்கவோ அல்லது வேறு சில தேவைகளுக்கு வைப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
ஒரு சிலர், பலரும் பார்த்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காக தங்களுடைய தகுதிக்குமேல் கடன் வாங்கி வீடு கட்டி, அந்த வீட்டில் வாழ முடியாமலும், அந்த வீட்டை விற்க முடியாமலும் அல்லலுறுவார்கள்.
உலக வல்லரசுகளில் முதன்மை பெற்று விளங்குகின்ற அமெரிக்கா கருப்பு இனமக்களின் உழைப்பாற்றலை பயன்படுத்தி நானூறு ஆண்டுகளுக்கு சரிவு இல்லாத பொருளாதார வலிமையை பெற்றுள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் பொருளாதாரம் வானளாவிய அளவு உயர்ந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் அரபு நாடுகள் நீங்கலாக உலக பொருளாதாரம் மந்தமாக உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டுமானால் உற்பத்தியாகின்ற பொருள் அதிநவீனமாகவும் அதே நேரத்தில் விலை குறைவாகவும் இருக்க வேண்டும்.
அந்த நுட்பம் ஜப்பானுக்குத் தெரியும். பத்தாண்டுக்கு முன் 1990ல் உலக சந்தையில் ஜப்பான் பொருள்கள் தலைநிமிர்ந்திருந்தது. தற்போது அந்நாட்டு பொருளாதாரத்திலும் சரிவு உண்டு. எதனை உற்பத்தி செய்தாலும் மக்களிடம் வாங்கும் சக்தி இருக்க வேண்டும்.
அதிக அளவில் முதலீடு செய்பவர்கள் உலக பொருளாதாரம், உள்நாட்டு பொருளாதாரம், மக்களின் வாங்கும் சக்தி, சந்தை நிலவரம் அறிந்து, தொழில் வியாபாரம் செய்தல் அவசியம்.
நல்வினை இருந்தால் எதனைச் செய்தாலும் திட்டமிட்டு செயல்படும் எண்ணம் உண்டாகும். தீவினை இருந்தால் அறிவு மங்கும்.
எந்தவொரு தொழிலைச் செய்தாலும், அதில் முன்அனுபவம் உள்ள தொழில் நிபுணர்களிடம் கலந்து ஆலோசனை செய்து ஆராய்ந்து பார்த்து செய்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் மீது படையெடுக்க முற்பட்டால் காலம், இடம், சூழ்நிலை தெரிந்து செயல்பட வேண்டும். தேவையான உணவு, நாட்டின் சூழ்நிலை, தட்ப வெப்ப சூழல் அறிந்து செயல்பட வேண்டும்.
திட்டமிட்டு செய்தால் எல்லாமே நன்றாக நடக்கும். முன் ஜென்ம வினை சரியாக இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும். ஆசான் திருவள்ளுவர் அரசுக்கே அறிவுரை வழங்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
அவர்களின் திருவடியை வணங்கி அவர்களுடைய ஆசி பெற்றால் தோல்வி என்பதே இராது. முற்றுப் பெற்ற முனிவர்கள் எல்லா வல்லமையும் நமக்கு அருளுவார்கள், வாழ்வில் வெற்றியடையலாம்.
நாம் ஒரு செயல்களைத் தொடங்கினால் திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும். காலம், இடம், சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும்.
முன் அனுபவம் உள்ளவர்களை கலந்து ஆலோசித்து செயல்களை செய்வது நல்லது.






