என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உலக பொருளாதாரமும் குருச்சண்டாள யோகமும்
    X

    உலக பொருளாதாரமும் குருச்சண்டாள யோகமும்

    • கிரக அமைப்பு உலக வரலாற்றில் இடம் பெறக் கூடிய சம்பவங்களை ஏற்படுத்தலாம்.
    • விருப்ப விவாகம் பதிவு திருமணம் அதிகம் நடக்கும்.

    ஜோதிடம் என்பது அறிவியல் கலந்த ஒரு கணித அமைப்பு. அறிவியல் வளராத காலத்தில் வானியல் கிரக நிலவரங்களை ஞான திருஷ்டியால் உணர்ந்து சித்தர்கள் மற்றும் ஞானிகளால் உலகிற்கு வழங்கப்பட்ட கலை ஜோதிடமாகும். நடக்கப்போகும் அனைத்து சம்பவங்களும் பெரும்பான்மையாக துல்லியமாக கணக்கிடப்பட்டு பஞ்சாங்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

    தற்போது கோச்சாரத்தில் 2025-ம் ஆண்டு நவகிரகங்களும் பெயர்ச்சியாகின்றன. அதில் வருட கிரகங்களான சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி தற்போது மீன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். குருபகவான் 14.5.2025 முதல் மிதுன ராசிக்கு செல்கிறார். 18.5.2025 முதல் ராகு பகவான் கும்ப ராசியிலும் கேது பகவான் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள்.

    கோச்சார ரீதியாக குருபகவானின் ஒன்பதாம் பார்வை கும்ப ராசியில் இருக்கும் ராகுபகவானை பார்க்கிறார். இந்த கிரக சம்பந்தத்தால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த கிரக அமைப்பு உலக வரலாற்றில் இடம் பெறக் கூடிய சம்பவங்களை ஏற்படுத்தலாம்.

    குரு பகவான்: கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் குரு ஒன்பது மற்றும் பனிரெண்டாம் இடத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். ஒன்பதாமிடம் என்பது பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், தூர தேச பயணம், பூர்வீக சொத்தைப் பற்றி அறியுமிடம். பனிரெண்டாம் இடம் என்பது வெளி நாட்டு பயணம், அலைச்சல், செலவினம், துறவரம் போன்றவற்றை குறிக்கும். தனம், புத்திரம், பூர்வீகம், கவுரவம் (பாரம்பரியம்), தங்கம் போன்றவை குருகிரகத்தின் முக்கிய காரகத்துவங்கள்.

    ராகு: ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. தான் நின்ற ராசியின் பலன்களை ஒருவரை அனுபவிக்க விடாமல் தடை செய்பவர். ராகுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் தான் நின்ற வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ராகு ஒரு ஜாதகத்தில் வலுத்தால் ராகுவின் காரகத்துவங்களான நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மதம் மாறுவது, அந்நிய நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டு மரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு,மாந்திரீகம், பிறரை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சனைகளால் பாதிப்பு உண்டாகும். பிரமாண்ட சிந்தனை, தடை, புதுமை, பாட்டன், போன்றவை முக்கியமான ராகுவின் காரகத்துவங்கள்.

    ஐ.ஆனந்தி

    குரு சண்டாள யோகத்தின் விளைவுகள்

    புனித கிரகமான குரு பகவான் அழிவு கிரகமான ராகுவை பார்க்கிறார். குரு பார்வை பட்ட இடத்தின் பலன்கள் பெருகும் என்பது ஜோதிட விதி. எதையும் பெருக்கும் தன்மை கொண்ட குருவின் பார்வை அழிக்கும் தன்மை கொண்ட ராகுவின் மேல் பதிவதால் அசுபங்கள் பெருக வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது உலகில் நிலவி வரும் போர் பதற்றமும் தங்கத்தின் விலை ஏற்றமும் இதற்கு சான்றாகும்.

    பங்குச் சந்தை: ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பங்குச் சந்தை பெரும் பங்கு வகிக்கிறது.

    நாட்டின் பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் பணவசதி படைத்தவர்கள் பலரின் பெரும் மூதலீடுகள் பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்யப்படுகிறது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவைகள் தங்களுடைய உபரி வருமானத்தை பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள்.

    பங்குச் சந்தை முதலீடு அபாயகரமானது என்று தெரிந்தும் பங்குச் சந்தை வணிகத்தின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகும். ஆன் லைன் வர்த்தகம் எனும் பங்குச் சந்தை வர்த்தகம் தற்போது நடுத்தர மக்களையும் குறிவைக்க துவங்கியுள்ளது. 500, 1000 என சிறிய லாபத்தை சம்பாதித்தவர்கள் புலி வாலை பிடித்த கதையாக பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வாழ்வாதாரத்தை பங்குச்சசந்தையில் இழக்கிறார்கள்.

    பங்குச் சந்தை முதலீடுகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உபரி வருமானத்தைத் தரும் தொழிலாகவும் சாமானியர்களுக்கு பாதகத்தை மிகைப்படுத்தும் தொழிலாகவும் மாறும். ஜோதிடரீதியாக யூக வணிகமெனும் பங்கு வர்த்தகத்திற்கும் ராகுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. கோட்சார ராகு மற்றும் புதன் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயம் செய்கின்றன. கோட்சாரத்தில் குரு மற்றும் ராகுவுடன் சம்பந்தம் பெறும் காலங்களில் பங்கை வாங்கிய அன்றே விற்கும் தின வர்த்தகத்தில் ஈடுபடாமல் நிலையான நீண்ட கால முதலீட்டு முறையில் தரமான கம்பெனி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் பெரும் பணம் சம்பாதிக்கலாம்.

    ரியல் எஸ்டேட்: நாட்டில் பெரும் பணம் புரளும் தொழில்களில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. ரியல் எஸ்டேட் என்ற சொல்லை கேட்டாலே பலருக்கும் மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம் ஏற்படும். ஏனென்றால் சிறிய முயற்சியில் பெரும் லாபத்தை தரும் இந்த தொழிலை முயன்று பார்க்காதவர்களே கிடையாது. சிறிய பெட்டி கடை வைத்து இருப்பவர்கள் முதல் பெரிய தொழில் அதிபர்கள் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் சம்பாதித்து இருப்பார்கள். கட்டுமானத் தொழிலுக்கும் ரியல் எஸ்டேட்டுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.

    மிக வேகமாக வளர்ந்து மிகப் பெரிய அளவில் வீழ்ந்ததில் கட்டுமான தொழிலும் ஒன்று.

    தற்போது குரு ராகு சம்பந்தம் இருப்பதால் நடுத்தர மக்கள் பலரும் கடன் வாங்கி சொந்த வீடுகளில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகள், இதனை முதலீட்டுப் பத்திரங்களாக மாற்றும். அதீத வட்டியால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு அச்சம் கூடும்.

    ஒரு கட்டத்தில் சொத்துக்களின் மதிப்பு கூடாமல் அசலை விட வட்டி மிகுதியாகுவதை உணர்ந்து மக்கள் வீடுகளை விற்று கடனை முன்கூட்டியே அடைக்க முயல்வார்கள்.

    அதனால் பங்குப் பத்திரத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் பெரும் சிக்கலைச் சந்திப்பார்கள். வீடுகளின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரித்ததோ, அதே வேகத்தில் குறைய ஆரம்பிக்கும். நடுத்தர வர்கத்தினர் 60 சதவீதம் சொந்த முதலீடு 40 சதவீதம் கடன் உதவி பெற்று சொத்துக்களை உருவாக்கினால் பாதிப்பு ஏற்படாது.

    தங்கம்: உலகத்தின் முக்கிய வர்த்தக பொருட்களில் ஒன்றானது தங்கம். பளபளக்கும் உலோகமான தங்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

    தங்கத்தை வாங்காத நாடுகள் இல்லை. விரும்பாத மக்கள் இல்லை. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் தங்க வயல் மூடப்பட்டதால் இந்தியாவில் தங்கம் உற்பத்தி இல்லை என்பதால் மொத்த தங்கமும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதியாகிறது.

    சர்வதேச சந்தைகளே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஓராண்டுகளாக தங்கத்தின் பயன்பாட்டில் நிலவிவரும் ஏற்ற இறக்கங்கள் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கத்தின் விலை விண்ணை முட்டும். அதிக தங்கம் வைத்திருப்பவர்கள் பணக்காரப் பட்டியலில் சேருவார்கள்.

    சில பொது பலன்கள்

    குரு என்றால் குழந்தை, தங்கம். பெரும் பணம், தெய்வ அனுகூலம். குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை நகைகளை இரவல் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய தேவைகளுக்கு அரசுடமை வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்க வேண்டும். அருகில் உள்ள வட்டி கடையில் வைக்க கூடாது.

    பெரும் பணம் புரளும் தொழில் மற்றும் வட்டித் தொழில் செய்பவர்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைக்கான முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக ரொக்க பணம் கையில் வைத்திருக்க கூடாது.

    அவரவரின் தசா புத்திக்கு ஏற்ப மத நம்பிக்கை குறையும் அல்லது அதிகமாகும். ராகு நிற்பது நெருப்பு ராசி. குரு பகவான் நிற்பது காற்று ராசி. திரையரங்கம், தங்கும் விடுதி, மருத்துவமனை, உணவகம் நடத்துபவர்கள், தொழிற்சாலை நடத்துபவர்கள் நீர், நெருப்பு, காற்று சார்ந்த பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இயற்கை பேரிடர்களாகவும், நோயாகவும், விபத்தாகவும், உலக நாடுகளுக்கு இடையே இணக்க மற்ற சூழல், போர் அபாயம், பொருளாதார வீழ்ச்சி போன்ற வைகள் ஏற்படலாம். செயற்கை கருத்தரிப்பு அதிகரிக்கும். குளோனிங் குழந்தைகள் பிறக்கலாம்.

    வீட்டில் பயன்படுத்தாத தேவையற்ற எலக்டானிக் சாதனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு மோகம் அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்திற்காக பலர் வெளிநாடு செல்வார்கள். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உச்ச கட்டத்தை தொடும்.

    கிரடிட் கார்டு பயன்பாடு, கடன் கலாச்சாரம் அதிகமாகும். போலி பத்திரம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகும். விருப்ப விவாகம் பதிவு திருமணம் அதிகம் நடக்கும். பல மொழி கற்கும் ஆர்வம் கூடும். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிகப்பெரிய நம்பிக்கை மோசடிகள் நடைபெறும்.

    அரசு உயர் பதவியில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரம் மிக்க அரசியல் பொறுப்பில் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு பதவி பறிபோகும். புதிய ஆன்மீக குருமார்கள் மடாதிபதிகள் பொறுப்பேற்பார்கள்.

    பல புகழ்பெற்ற ஆன்மீக தொடர்புடைய நபர்கள் முக்தியடைவார்கள். போர் தளவாட பொருட்களின் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சில புண்ணிய சேத்ரங்களுக்குச் சென்று சன்னியாசியாக மாறி விடுவார்கள். சிலர் லவுகீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் மாட்டிக் கொண்டு வாழவும் முடியாமல் வீழவும் முடியாமல் தவிப்பார்கள்.

    பூமியில் உயிர்கள் வாழத் தேவையான அனைத்து வளங்களும் பிரபஞ்சம் உலக உயிர்களுக்கு வழங்கிய நன்கொடை . நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்ச பூத தத்துவங்களையும் உள்ளடக்கியதே பிரபஞ்சவளம். மனிதன் பூமியை படைத்தானா? அல்லது பூமி மனிதனை படைத்ததா? என்று வியக்கும் வகையில் மனிதன் தன் அறிவால் பல விசித்திர, விநோத கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறான்.

    ஆனால் இயற்கையின் உதவி இல்லாமல், இயற்கை அனுமதிக்காமல் பிரபஞ்ச சக்திகளான பஞ்ச பூதங்களை பயன்படுத்தாமல் எந்த விந்தை, விநோதமும் கண்டு பிடிப்பும் மனிதனுக்கு சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    பஞ்ச பூதங்களும் நவ கிரகங்களும் இணைபிரியா சக்திகள். நவகிரகங்கள் தங்களின் இயக்கங்களினால் உலகிற்கு நன்மை மற்றும் தீமைகளை பஞ்ச பூதங்கள் வாயிலாகவே வெளிப்படுத்தும். மனிதன் இயற்கையின் கொடைகளை ஆக்கத்திற்கு பயன்படுத்தும் போது நவகிரகங்களின் பரிபூரண நல் ஆசிகள் பூமிக்கு கிடைக்கும்.இயற்கை வேறு நவகிரகங்கள் வேறு அல்ல. இயற்கையை போற்றினால் நவகிரகங்களின் நல்லாசிகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.

    Next Story
    ×