என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருச்செந்தூர் முருகனுக்கு தினமும் வியர்க்கும் அதிசயம்!
    X

    திருச்செந்தூர் முருகனுக்கு தினமும் வியர்க்கும் அதிசயம்!

    • திருச்செந்தூர் சண்முகருக்கு அர்ச்சகர்கள் விசிறியால் வீசிக் கொண்டிருந்தனர்.
    • சண்முகரின் இயல்பு தெரியாததால் தவறாக கேட்டு விட்டேன்” என்று கூறினார்.

    திருச்செந்தூர் ஆலயத்தில் சண்முகம், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாயுபெருமாள் என்று நான்கு உற்சவர்கள் உண்டு. அறுபடை வீடுகளில் எந்த தலத்திலும் இல்லாத வகையில் திருச்செந்தூர் ஆலயத்தில் மட்டுமே 4 உற்சவர்கள் இருக்கிறார்கள். இந்த 4 உற்சவர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

    அதுபோல இந்த 4 உற்சவர்களும் முக்கிய விழா நாட்களில் மூலவருக்கு பதிலாக வெளியில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். குறிப்பாக சண்முகர் அதிக விழாக்களில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். பெரும்பாலும் திருச்செந்தூர் ஆலயத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக சண்முகவிலாசம் மண்டபத்தில் அமர்ந்து அவர் அருள்பாலிப்பார்.

    1803-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது ஒருநாள் சண்முக விலாசம் மண்டபத்தில் வீற்றிருந்து சண்முகர் பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அவருக்கு இருபுறமும் 2 அர்ச்சகர்கள் நின்று விசிறியால் சண்முகருக்கு வீசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு நெல்லை ஜில்லாவின் கலெக்டராக இருந்த ஆங்கிலேயரான லூசிங்டன் என்பவர் அங்கு வந்தார். கலெக்டர் லூசிங்டன் ஒவ்வொரு நாளும் நெல்லை ஜில்லாவின் ஒவ்வொரு பகுதிக்கு சென்று வரி வசூல் எப்படி நடக்கிறது என்பதை பார்வையிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

    அந்த வகையில்தான் அவர் அன்று திருச்செந்தூர் ஆலயத்தில் மக்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளவும், வரி வசூல் எப்படி இருக்கிறது? என்பதை ஆய்வு செய்யவும் வந்து இருந்தார். அந்த சமயத்தில்தான் அவர் உற்சவர் சண்முகருக்கு 2 அர்ச்சகர்கள் விசிறியால் வீசிக் கொண்டிருப்பதை பார்த்தார்.

    சண்முகருக்கு தினமும் ஷோசட உபச்சாரம் செய்வது உண்டு. ஷோசட என்றால் 16 வகையான உபச்சாரம் என்று பொருள். அதில் ஒன்று சுவாமிக்கு சாமரம் வீசுவது ஆகும். விசிறியால் வீசி இறைவன் நல்ல மனநிலையில் இருப்பதற்கு செய்வதாக இந்த உபச்சாரத்தை சொல்வார்கள்.

    அதன்படி தான் அன்றைய தினம் திருச்செந்தூர் சண்முகருக்கு அர்ச்சகர்கள் விசிறியால் வீசிக் கொண்டிருந்தனர். இதை கண்டதும் கலெக்டர் லூசிங்டனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவருக்கு கடவுள் மீது கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. என்றாலும் கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனைகள் எதையும் தடுத்து நிறுத்த மாட்டார்.


    மாறாக குறைகள் இருந்தால் அதை தீர்த்து வைக்கும் மனஇயல்பு கொண்டவராக இருந்தார். அப்படிப்பட்டவருக்கு சண்முகருக்கு வீசிறியால் வீசப்படும் காட்சி புரியாத புதிராக இருந்தது. சிரித்தபடியே உற்சவர் சண்முகர் அருகில் சென்றார்.

    சண்முகர் விக்கிரகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு விசிறிக் கொண்டிருந்த 2 அர்ச்சகர்களை பார்த்து, "உங்கள் முருகனுக்கு வியர்க்குமா?" என்று கேட்டார். அவரது கேள்வியில் கேலியும் கிண்டலும் நிரம்பி இருந்தது.

    உடனே அர்ச்சகர்களில் ஒருவர், "ஆம் எங்கள் முருகனுக்கு தினமும் வியர்க்கும். அவர் வியர்வையால் அவதிப்படக் கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு இருபுறமும் நின்று சாமரம் வீசுகிறோம். இது பல நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தில் நடைமுறையில் உள்ள ஒரு விசயம் ஆகும்" என்றார்.

    இதை கேட்டதும் கலெக்டர் லூசிங்டனுக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. அவரால் இதை கொஞ்சமும் நம்ப இயலவில்லை. உற்சவர் சண்முகர் சிலை உலோகத்தால் செய்யப்பட்டதாகும். அந்த உலோகத்தில் இருந்து வியர்வை தண்ணீர் எப்படி ஆறாக பெருக்கெடுத்து ஓடி வரும் என்று நினைத்தார்.

    அதுமட்டுமின்றி சண்முகருக்கு அணிவிக்கப்பட்ட வகை வகையான மலர் மாலைகளில் இருந்து தண்ணீர் துளிகள் உலோகத் திருமேனியில் பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டார். தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ள அர்ச்சகர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

    "உங்கள் முருகனுக்கு வியர்த்துக் கொட்டுவதை நான் எனது 2 கண்களால் பார்க்க வேண்டும். எனவே சண்முகர் மீது அணிந்து இருக்கும் வஸ்திரங்களையும், மலர் மாலைகளையும் அகற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு வியர்க்கிறதா? என்று பார்ப்போம்" என்று கூறினார்.

    இதை கேட்டதும் 2 அர்ச்சகர்களும் ஆடிப்போனார்கள். என்ன செய்வது என்று யோசித்தனர். ஜில்லா கலெக்டர் உத்தரவிட்டதால் மீற முடியாது என்று கருதி சண்முகருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வஸ்திரங்களையும், மலர் மாலைகளையும் அகற்றினார்கள்.

    சண்முகர் எந்த அலங்காரமும் இல்லாமல் வெறுமையாக இருந்தார். அவரது முகம் பாவனைகள் சிரிப்பது போல இருந்தது. அவரையே பார்த்த கலெக்டர் லூசிங்டன் அந்த விக்கிரகத்தை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று நினைத்தார்.

    நாற்காலி ஒன்றை கொண்டு வருமாறு உத்தரவிட்டார். நாற்காலி வந்ததும் அதை சண்முகர் விக்கிரகம் அருகில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு உற்சவர் சண்முகரின் முகத்தையே கலெக்டர் லூசிங்டன் கண் கொட்டாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

    என்ன ஆச்சரியம். ஓரிரு நிமிடங்களில் சண்முகர் முகத்தில் இருந்து வியர்வை துளிகள் தோன்றின. நேரம் செல்ல செல்ல வியர்வை துளிகள் முத்து முத்தாக அரும்பி நின்றன. அடுத்த சில நிமிடங்களில் அந்த வியர்வை வழிந்தோட தொடங்கியது.

    சண்முகர் சிலையில் இருந்து தரை வரைக்கும் வியர்வை ஆறாக ஓடியது. இதை கண்ட கலெக்டர் லூசிங்டன் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். கைகளை கூப்பி தன்னையும் அறியாமல் சண்முகரை வணங்கினார்.

    சண்முகருக்கு எல்லா உணர்வுகளும் உண்டு என்பதை மனதார ஏற்றுக் கொள்வதாக அங்கிருந்த அர்ச்சகர்களிடம் தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி உற்சவர் சண்முகரை மற்ற பக்தர்கள் போல விழுந்து வணங்கினார். பிறகு 2 அர்ச்சகர்களையும் பார்த்து, "என்னை மன்னித்து விடுங்கள். சண்முகரின் இயல்பு தெரியாததால் தவறாக கேட்டு விட்டேன்" என்று கூறினார்.

    பிறகு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சென்றார். அங்கு வீட்டுக்கு சென்ற போது அவரது மனைவி கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வெப்ப நோய் ஏற்பட்டு இருந்தது.

    உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மருந்து-மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் கலெக்டர் லூசிங்டனின் மனைவிக்கு ஏற்பட்ட வெப்ப நோய் குறையவில்லை. அந்த நோயை அந்த காலக்கட்டத்தில் 'சூலை நோய்' என்று சொல்வார்கள்.

    சூலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சென்று அங்கு வழிபட்டு பன்னீர் இலையில் தரும் விபூதி பிரசாதத்தை பயன்படுத்தினால் குணமாகும் என்பது அந்த காலத்தில் நம்பிக்கையாக இருந்தது. இதை ஒரு மருத்துவர் மூலம் கலெக்டர் லூசிங்டன் அறிந்தார்.

    திருச்செந்தூர் ஆலயத்து உற்சவர் சண்முகரை சோதித்து பார்த்ததால்தான் தனது மனைவிக்கு சூலை நோய் வந்து இருக்கலாம் என்று அவர் நினைத்தார். அன்றே திருச்செந்தூர் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். பன்னீர் இலை பிரசாதத்தை பெற்று வந்து தனது மனைவிக்கு கொடுத்தார்.

    அந்த பிரசாதத்தை பயன்படுத்தியதும் லூசிங்டன் மனைவிக்கு இருந்த சூலைநோய் அகன்றது. இந்த அனுபவம் கலெக்டர் லூசிங்டனுக்கு பிரமிப்பை கொடுத்தது. திருச்செந்தூர் ஆலயத்துக்கு மிகப்பெரிய அளவில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

    அதன்படி ஆலய பூஜை பயன்பாட்டுக்காக பல்வேறு வகையான வெள்ளிப் பாத்திரங்களை வாங்கி பரிசாக கொடுத்தார். அந்த பாத்திரங்களில் சில வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அந்த பாத்திரங்களில், "லூசிங்டன்-1803" என்று பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

    திருச்செந்தூர் முருகன் தன் வாழ்நாளில் நிகழ்த்திய இந்த அற்புதத்தை கலெக்டர் லூசிங்டன் குறிப்புகளாகவும் எழுதி வைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×