என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோயாளிகளுக்கு மற்றொரு தாய்: சகிப்புத்தன்மை - மகத்தான சேவையில் சாதிக்கும் செவிலியர்கள்
    X

    நோயாளிகளுக்கு மற்றொரு தாய்: சகிப்புத்தன்மை - மகத்தான சேவையில் சாதிக்கும் செவிலியர்கள்

    • வயநாடு நிலச்சரிவின் போது அந்தரத்தில் கயிறு கட்டியபடி சென்று சிகிச்சை அளித்தது மறக்க முடியாத நிகழ்வு.
    • பல நிகழ்வுகள் எங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டே உள்ளது.

    செவிலியர் பணி என்பது சாதாரணமானது அல்ல. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் செய்வது ஒரு சேவை என்றே சொல்லலாம். சாதி, மதத்தை கடந்து சகிப்புத்தன்மையுடன் அவர்கள் ஆற்றுவது மகத்தான பணி ஆகும்.

    நவீன செவிலியத்தின் முன்னோடியான புளோரன்ஸ் நைட்டிங்கே லின் பிறந்த நாளை முன்னிட்டு, சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ஏராளமான பெண்கள் செவிலிய பணியை சேவையாகவும், உயிர் மூச்சாகவும் செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருசிலரை பார்ப்போம்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிலச்சரிவு பேரழிவை யாராலும் மறக்க முடியாது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்ததில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா.

    அவர் கூறியதாவது:-


    நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு தான் பட்டப்படிப்பு மற்றும் நர்சிங் படிப்பு படித்தேன். பணம் சம்பாதிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருந்தேன். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். புற்றுநோய் பாதித்து வீடுகளில் முடங்கி கிடப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது தான் என்னுடைய பணி. உடலில் புண் ஏற்பட்டு நடக்க கூட முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை நான் தினமும் சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்.

    வயநாடு நிலச்சரிவின் போது அந்தரத்தில் கயிறு கட்டியபடி சென்று சிகிச்சை அளித்தது மறக்க முடியாத நிகழ்வு. அன்றைய தினம் 40 பேருக்கு நான் முதலுதவி சிகிச்சை அளித்தேன். இதற்காக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பல என்னை அழைத்து கவுரவித்து விருது வழங்கி உள்ளன. அப்படி மொத்தம் 60 விருதுகளை வாங்கி உள்ளேன்.

    செவிலியர் சுசீலாதேவி

    கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் இவர் சிறந்த செவிலியருக்கான விருதை 2 முறை பெற்றுள்ளார். தொடர்ந்து செவிலியர் சுசீலாதேவி பேசுகிறார்...


    செவிலியர் பணி என்பது மிகவும் சவாலான பணி. அந்த பணியை நாங்கள் முழு மனதுடன் சேவையாக செய்து வருகிறோம். வயதான நோயாளிகள் அடிக்கடி கோபப்படுவார்கள். விபத்தில் ரத்தம் சிந்தி வருபவர்கள், உடலில் புண்கள், காயங்களுடன் வருபவர்களை துடைத்து சுத்தப்படுத்தி சிகிச்சை அளிப்பது எங்கள் கடமை. சில நோயாளிகள் அவர்களுக்கு வலி ஏற்பட்டால் எங்களை திட்டுவார்கள். அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் நாங்கள் ஐ.சி.யூ.வில் 3 உடைகளை அணிந்து கொண்டு பணியாற்றினோம். வீட்டிற்கு செல்ல முடியாமல் தனியாக அறை எடுத்து, நோயாளிகளை பாதுகாத்த பணி மறக்க முடியாதது.

    ஒருநாள் அவசர சிகிச்சை பிரிவில் மாரடைப்புடன் வந்த நோயாளிக்கு துரிதமாக சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினேன். அப்போது எனக்கு தெரியாமல் நோயாளிகளுடன் நோயாளிகளாக மருத்துவ அதிகாரிகளும் கலந்திருந்துள்ளனர். அவர்கள் எனது பணியை பார்த்து பாராட்டினர். மறுநாள் சோகம் வீட்டில் இருந்த எனது கணவருக்கு திடீரென மாரடைப்பு வந்து விட்டது. ஆனால் அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. இருப்பினும் மனம் உடைந்து போகாமல் பிற நோயாளிகளை காப்பாற்ற சேவை செய்து வருகிறேன்.

    சுகந்தி (ராஜபாளையம்):

    சிறந்த செவிலியர்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் நைட்டிங்கேல் விருதை பெற்றவர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆர்.ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது சுகந்திக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    எனக்கு சிறு வயது முதலே, மக்களுடன் இணைந்து பொதுச்சேவை ஆற்றும் ஆசையும், ஆர்வமும் இருந்தது. குறிப்பாக வலிகள் நிறைந்த கடினமான வேளைகளில், மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு உதவி செய்ய ஆவலாக இருந்தேன். அதற்கு செவிலியர் பணி, சிறப்பானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான், இந்த பணியை தேர்வு செய்தேன்.


    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளை, ஆரோக்கியமாக கவனிப்பதுதான் என்னுடைய தலையாய கடமை. தற்போது கிராமப்புறத்தில் உள்ள மருத்துவமனையிலும் பிரசவம் பார்க்கும் வசதி வந்து விட்டது. ஆனால் முன்பு நாங்கள் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பிரசவம் பார்ப்போம். அந்தவகையில் நான் கர்ப்பிணிகளின் வீட்டிற்கே சென்று இதுவரை 30 பேருக்கு பிரசவம் பார்த்து உள்ளேன். அத்தனையும் சுக பிரசவம் தான். கொரோனா காலக்கட்டத்தில் செவிலியர்கள், மருத்துவர்கள் ஆற்றிய சேவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். 4 முக கவசங்களை அணிந்து கொண்டு தான் பணியாற்றினேன். தண்ணீர் கூட குடிக்க முடியாது. விடுமுறை இல்லாமல் பணியாற்றினேன்.

    என்னுடைய சேவைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் தான் நைட்டிங்கேல் விருது. ஒரு பெண்ணான எனக்கு பெண் ஜனாதிபதியான திரவுபதிமுர்மு கையால் விருது வாங்கியது என்னை மேலும் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

    தமிழ்ச்செல்வி (தலைமை செவிலியர், சூலூர்):

    செவிலியர் பணியில் தினந்தோறும் பல்வேறு புது அனுபவங்களை பெற்று வருகிறோம். நான் பல்லடம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது இளம்பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தபோது குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்தது. இதனால் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். அந்த சமயம் சிறிதும் தாமதிக்காமல் அந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்தேன். அதில் அந்த குழந்தை புத்துயிர் பெற்று சத்தம்போட்டு அழுதது ஆஸ்பத்திரி முழுக்க எதிரொலித்தது. 7 வருடத்துக்கு பிறகு ஒருபெண், சிறுவனுடன் வந்து என் முன் நின்றாள். இவர் தான் உனது முதல் தாய் என அறிமுகப்படுத்தினார். அதன்பிறகே நான் சுவாசம் கொடுத்து காப்பாற்றிய குழந்தை என தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது.

    இதேபோல காலனி நிறுவனத்தில் பணியாற்றிய வாலிபர் ஒருவர் பணியை விட்டு நீக்கியதால் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினேன். அதன்பிறகு அவர் சொந்தமாக காலனி கடை வைத்து நன்றாக வாழ்கிறார். இதுபோல் பல நிகழ்வுகள் எங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டே உள்ளது.

    ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள்தான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், மறுக்க முடியாததுமான உண்மை ஆகும். "செவிலியர்கள் - இன்னொரு தாய்" அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது, மதிக்கத்தக்கது, வணங்கத்தக்கது.

    Next Story
    ×