என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாளை உலக கல்லீரல் தினம்
    X

    நாளை உலக கல்லீரல் தினம்

    • கல்லீரல் தான் பித்த நீரை உருவாக்குவது கொழுப்பு திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
    • உறுப்பு தானம் தொடர்பாக இன்னும் அதிகம் விழிப்புணர்வு தேவை.

    லிவர் பெயிலியர்...

    ஏதோ வாகனங்களில் உதிரி பாகம் ஒன்று பழுதாகி வாகனங்கள் நின்று விடுவது போல் மனிதன் என்ற உயிருள்ள வாகனமும் இப்படி அடிக்கடி லிவர் பெயிலியர் என்று சொல்ல கேட்டிருப்போம்.

    ஆனால் பலருக்கு லிவர் என்றால் என்ன? மனித உடலில் அதன் செயல்பாடு என்ன? அதில் ஏதேனும் பிரச்சனை என்றால் என்ன நடக்கும்? என்பதைப் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

    பலரும் அறிந்திராத. பலரும் புரிந்திடாத லிவர் பற்றிய தகவலை தான் இந்த கட்டுரையில் காணப் போகிறோம். நாளை உலக லிவர் தினம். லிவர் என்பது தமிழில் கல்லீரல் என்று அழைக்கப்படுகிறது. மனித உடலில் எவ்வளவோ உறுப்புகள் இருந்தாலும் அவைகளில் கல்லீரல் முக்கியத்துவம் வாய்ந்தது.

    அதனால் தான் கல்லீரலின் முக்கியத்துவத்தை உணர்த்த கல்லீரல் தினத்தை உலகமே கடைப்பிடிக்கிறது.

    மனித உடலின் நெஞ்சாங் கூட்டின் வலது புறத்தில் அடிவயிற்றுக்கு மேல் பகுதியில் அமைந்திருக்கிறது.நெஞ்சாங்கூட்டையும் வயிற்றையும் பிரிக்கும் வகையில் இரண்டுக்கும் நடுவே பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் அமைந்திருக்கிறது. இதற்கு கீழ் தான் பித்தப்பையும் இடது புறமாக இரைப்பையும் அமைந்துள்ளன.

    எப்படி இந்த கல்லீரல் பெரிய ஆப்பு வடிவத்தில் அமைந்திருக்கிறதோ அதேபோல் இதில் பிரச்சினை ஏற்பட்டால் மனிதனுக்கு ஆப்பு வைத்து விடும். உடலின் உள்ளிருக்கும் உள்ளுறுப்புகள் அனைத்திலும் இதுதான் பெரிய உருப்பாக இருக்கிறது. அது மட்டுமல்ல மிகப்பெரிய சுரப்பியாகவும் திகழ்கிறது உடலின் உள்ள பல்வேறு சூழலை கட்டுப்படுத்தி சமன் படுத்துதல் வளர்சிதை வளர் மாற்றங்களில் ஏற்படும் நச்சுத்தன்மையை அகற்றுவது புரத தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பது உள்ளிட்ட மிகப்பெரிய பணிகளை கல்லீரல் கச்சிதமாக செய்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவு மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கல்லீரல் தான் பித்த நீரை உருவாக்குவது கொழுப்பு திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் பித்த நீர் கல்லீரலில் கீழ் அமைந்திருக்கும் நார்த்திசுவாலான ஒரு சிறிய பையில், தான் பித்த நீர் சேமிக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட செயல்கள் இந்த சின்னஞ்சிறு கல்லீரலால் செயல்படுத்தப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவை செரிமானம் செய்ய வைத்து அதன் மூலம் ஆற்றலை உருவாக்குவது. சுரப்பிகளை செயல்பட வைப்பது ரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களை உற்பத்தி செய்யவும் இந்த கல்லீரல் உதவுகிறது ரத்த அணுக்களில் இருந்து பிலிறும்பின் என்னும் கழிவு பொருளை நீக்கி பித்தநீரை உருவாக்குகிறது. இவ்வாறு கல்லீரலில் உருவாகும் பித்த நீர் சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது அங்கு கொழுப்பு நிறைந்த உணவை செரிக்க வைக்கிறது.

    செம்பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த கல்லீரல் தான் உடலின் உள் உறுப்புகளில் பெரிய உறுப்பு என்று குறிப்பிடப்படுகிறது பெரிய உறுப்பு என்றால் இதன் எடை எவ்வளவு தெரியுமா? 1.4 முதல் 1.6 கிலோ.

    இவ்வாறு இந்த கல்லீரல் நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான பல வேதிப்பொருட்களை உடலுக்குள் உருவாக்கி கொடுத்துக் கொண்டிருப்பதால் இதை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று வேடிக்கையாக கூறுகிறார்கள்.

    சில ஆச்சரியமான வேலைகளையும் இந்த கல்லீரல் மேற்கொள்கிறது கல்லீரல் செரித்த உணவை ரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்து சேமித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் போது அதை மீண்டும் ரத்தத்தில் செலுத்துகிறது. அதாவது மனித உடலின் சீரான இயக்கத்திற்கு எது எப்போது தேவையோ அதை அறிந்து இந்த கல்லீரல் வழங்குகிறது.

    கல்லீரலில் ஏற்படும் நோய்கள் அவ்வளவு எளிதில் வெளியே அறிகுறியை காட்டுவதில்லை. எனவே உடலின் இந்தப் உறுப்பில் தான் பிரச்சனை என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பதும் சவாலான விஷயம்தான்.

    உலக அளவில் ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் பேர் இந்த கல்லீரலில் ஏற்படும் நோய்களால் உயிரிழக்கிறார்கள் அதிலும் கல்லீரல் புற்றுநோயால் 3.5 சதவீதம் பேர் இறந்து போகிறார்கள் உலக அளவில் இந்த எண்ணிக்கை என்றாலும் இந்தியாவிலும் கல்லீரல் புற்றுநோயால் ஏற்படும் உயரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

    இதனால்தால் தான் உலக கல்லீரல் தினம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தான் இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

    கொஞ்சம் கல்லீரலை கொடுத்தும் உதவலாம்!

    வாகனத்தின் பழுதடைந்த பாகங்களை அகற்றிவிட்டு புதிய உதிரி பாகம் பொருத்தப்படுவது போல் பாதிக்கப்பட்ட கல்லீரலுக்கு மாற்றாக புதிய கல்லீரலை பொருத்தும் மகத்தான மருத்துவ சிகிச்சையை மருத்துவ உலகம் கண்டறிந்து செயல்படுத்தி வருகிறது எனவே கல்லீரல் பழுதுபட்டாலும் மாற்றுக் கல்லீரலால் ஒரு மனிதனை ஆபத்திலிருந்து மீட்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்

    இது தொடர்பாக சென்னை லிவர் பவுண்டேசன் டிரஸ்டியும், பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் விவேகானந்தன் கூறியதாவது:-

    கல்லீரல் முற்றிலும் சேதம் அடைந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயமாகி விடுகிறது. கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் அதாவது சுருக்கம் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரம் கல்லீரலில் ஏற்படும் சுருக்கத்துக்கான மாற்று அறுவை சிகிச்சை கட்டாயமில்லை.

    இரண்டு விதமாக கல்லீரல் தானம் பெறப்படுகிறது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்களின் முழு கல்லீரலையும் எடுத்து தேவைப் படுபவர்களுக்கு பொருத்துவது. மற்றொன்று குடும்பத்தினரிடம் இருந்து தானமாக பெறுவது. உயிருடன் இருப்பவர்கள் கல்லீரல் தானம் செய்வதால் கொடுப்பவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனெனில் கல்லீரலில் தேவையான அளவுதான் வெட்டி எடுக்கப்படும். கல்லீரல் இயற்கையாகவே வளரும் தன்மை கொண்டது.

    எனவே சிறிதளவு வெட்டி எடுக்கப்பட்டவரின் கல்லீரலும், பொருத்தப்பட்டவரின் கல்லீரலும் 3 வாரங்களுக்குள் 90 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடும். அதே நேரம், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளிடம் இருந்து தானம் பெறப்படுவதில்லை. அதற்கு காரணம் கொடுப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.

    சின்ன வயதிலேயே பலர் மது பழக்கம், தேவையற்ற உணவு பழக்கங்களுக்கு ஆளாவதால் மூளைச்சாவு அடைந்தாலும் அவர்களின் கல்லீரல் உபயோகமற்றதாகி விடுகிறது.

    உலக அளவில் 60 வருடங்களாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டிலும் 1990 முதல் நடந்து வருகிறது. வருடத்துக்கு சராசரியாக 4,500 அறுவை சிகிச்சைகள் நடக்கிறது.

    உறுப்பு தானம் தொடர்பாக இன்னும் அதிகம் விழிப்புணர்வு தேவை. அதன் மூலம் பலரை காப்பாற்றி நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்க முடியும்.

    80 சதவீதம் கல்லீரல் பாதிப்பை தவிர்க்க முடியும். கல்லீரல் பாதிப்புக்கு மிக முக்கிய காரணங்கள் மூன்று தான். முதலில் மது பழக்கத்துக்கு ஆளாவது. 2-வதாக கொழுப்பு நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக் கொள்வது, மூன்றாவதாக வைரஸ் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பு. வைரஸ் கிருமி பாதிப்பை தவிர்க்க ஹெப்பாடைடிஸ் 'பி' தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரலை எந்த பாதிப்பு அண்டாது. முக்கியமாக மஞ்சள் காமாலை என்பது நோய் அல்ல. உள்ளே ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகுறிதான். அதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தால் போதுமானது. கல்லீரல் தன்னைத்தானே சரியாக்கி கொள்ளும்.

    கல்லீரல் பாதுகாப்பில் கவனம் தேவை

    டாக்டர் லோகநாதன் வானகரம் அப்பல்லோ மருத்துவமனை கல்லீரல் மற்றும் குடல் மருத்துவ சிகிச்சை துறை நிபுணர் டாக்டர் லோகநாதன் கூறியதாவது:-

    நம்மை பாதுகாக்கும் கல்லீரலை பாதுகாப்பதில் நாமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்லீரல் என்பது உடலில் புரதச்சத்து உற்பத்தி செய்யும் அற்புதமான எந்திரம் அதேபோல் உடலில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றுவதும் அதுதான் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளில் இருந்து ஏற்படும் நச்சுக்களை கூட இந்த கல்லீரல் தான் வெளியேற்றுகிறது ரத்தத்தில் பிலுருவின் உற்பத்தி கொழுப்புச்சத்தை ஜீரணம் செய்வது ஆகியவற்றை இந்த சுரப்பி தான் செய்து கொண்டிருக்கிறது இந்த கல்லீரலுக்கு பாதிப்பு என்பது ஹெப்படைட்டிஸ் ஏ பி மற்றும் சி வைரஸ்களால் ஏற்படலாம் அதேபோல் உலக அளவில் பேட்டி லிவர் கல்லீரல் அலர்ஜி என்பதும் அதிக அளவில் காணப்படுகிறது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பாதிப்பு பற்றி மிகப் பெரிய அளவில் தெரியாமல் இருந்தது.

    ஆனால் இப்போது இளம் வயதினரை கூட இந்த பாதிப்புகள் தாக்குகிறது என்பது தெரிய வந்துள்ளது பேட்டி லிவர் என்பது உடல் பருமன் மதுப்பழக்கம் தைராய்டு சுரப்பிகள் மூலம் ஏற்படுகிறது கல்லீரல் பாதிப்பை பொருத்தவரை உடனடி பாதிப்பு நீண்ட கால பாதிப்பு என்று இரண்டு வகை படுத்தலாம் இவை எல்லாவற்றிற்கும் வைத்தியங்கள் உள்ளன சிலர் ஒரு சில மருந்துகளை தாமாகவே அறிந்து எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது அது சரியான வைத்தியமாக இருக்க முடியாது காய்ச்சலுக்கு எப்படி ஒரே மாத்திரைகள் உதவாதோ அதேபோல் காரணத்தை கண்டறிந்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது தான் சரியான பலன் கொடுக்கும் தாமதப்படுத்துவது ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தை உருவாக்கலாம் ஈரல் அலர்ஜிக்கான காரணங்களை கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்த முடியும் முக்கியமாக மதுபானங்களை தவிர்க்க வேண்டும் பேட்டி லிவர் ஏற்படாமல் இருக்க நல்ல உடற்பயிற்சிகள் மேற்கொள்வது உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது மூலம் கட்டுப்படுத்த முடியும் நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் சிரோசிஸ் ஆகியவற்றின் இறுதிக்கட்ட முயற்சி தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது இப்போது இந்த சிகிச்சை மிக சாதாரணமாகிவிட்டது அதிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அடிப்படையான உறுப்புகளை தானம் செய்வதில் முன்னிலையில் இருக்கிறோம் இதற்கு அரசின் முயற்சி தான் முக்கிய காரணம் உறுப்பு தானம் செய்பவர்களை வீடுகளுக்கே நேரில் சென்று கௌரவிப்பதால் இப்போது உறுப்பு தானத்தின் எண்ணிக்கைகள் இந்திய அளவில் அதிகரித்து வருகிறது சரியான நேரத்தில் முறையான சிகிச்சைகள் மூலம் கல்லீரல் பாதிப்புகளை குணப்படுத்த முடியும்

    Next Story
    ×