என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டைரக்டரிடம் ஏமாந்தேன்... மீனா மலரும் நினைவுகள்
    X

    டைரக்டரிடம் ஏமாந்தேன்... மீனா மலரும் நினைவுகள்

    • ரஜினி சார் என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான பயம் கலந்த மரியாதை இருக்கும்.
    • நயன்தாரா ஜோடியாக நடித்து இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது.

    சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென்று ஒருநாள் போனில் அழைத்தார்கள், 'மேடம், ரஜினி சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க போகிறோம். அந்த படத்தில் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம். கதை சொல்ல டைரக்டரை அனுப்பலாமா என்றார்கள்.

    ரஜினி சார் என்றதும் உற்சாகம். எஜமான், முத்து, வீரா என்று அவரோடு நடித்த அத்தனை படங்களும் மெஹா ஹிட் படங்கள். அப்படியிருக்கும் போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தால் தவிர்ப்பேனா?

    வரச்சொல்லுங்கள் என்றேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி சாரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு வருகிறது... என்கிற ஆசையில் கதை கேட்க ஆவலுடன் காத்திருந்தேன்.

    டைரக்டர் சிறுத்தை சிவா வந்தார். கதை சொல்ல தொடங்கினார். அதுதான் 'அண்ணாத்த' படம்.

    கதைப்படி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாது. நான், குஷ்பு இருவரும் அந்த படத்தில் உண்டு எனவும் இருவருக்கும் சகோதரிகள் பாத்திரம் தான் என்றார்.

    நாங்கள் இருவருமே ரஜினி சாருக்கு ஜோடியாக நடித்தவர்கள். மேலும் முன்னணி நடிகைகள். எனவே ரஜினி சாருக்கு ஜோடி சேர்ந்த நாங்கள் துணை பாத்திரங்களில் நடித்தால் சரிவராது. ஆனால் இந்த படத்தில்தான் ரஜினி சாருக்கு ஜோடி இல்லையே. எனவே மற்ற பாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தவறில்லை என்றுதான் ஒத்துக்கொண்டோம்.

    அதன் பிறகு சம்பளம் உள்ளிட்ட மற்ற செயல்கள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்திற்கு யாரை போடலாம் என்ற பேச்சு வந்தபோது நாங்களே சிலரது பெயர்களை சொன்னோம். அந்த அளவு டைரக்டர் மற்றும் படக்குழுவுடன் நெருங்கிய நட்பில் தான் இருந்தோம்.

    படப்பிடிப்பு தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி சாருடன் நடித்தது. அதற்காக மேக்-அப் போட்டு விட்டு தனி கெட்டப்பில் நாங்கள்... அதேபோல் ரஜினி சார் தனி கெட்-அப்பில் வந்தார். ஒருவரை ஒருவர் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோடு அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இருந்தார்கள்.

    'மருதாணி சிவப்பு... சிவப்பு' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் ஏராளமாக ரோஜா இதழ்கள் கொட்டப்படும். அதில் நடந்து ரஜினி சார், நான், குஷ்பு ஆகியோர் டான்ஸ் ஆட வேண்டும். ரஜினி சார் ஆட தொடங்கியதும் பூவின் இதழ்கள் வழுக்கியதால் தடுமாறி நல்ல வேளையாக என் தோள் பட்டையில் சாய்ந்தார். அதனால் எனக்குத்தான் கையில் வலி.

    அதை தொடர்ந்து ரஜினி சார் நடந்து ஆடும் காட்சியில் பூ தூவுவது ரத்து செய்யப்பட்டது. பாடலின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் பூக்கள் தூவப்பட்டது.

    ரஜினி சார் என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான பயம் கலந்த மரியாதை இருக்கும். எனவே அருகில் சென்று பேசுவதற்கு தயங்குவார்கள். எனவே நாங்கள் இடைவேளையில் ஒரு பக்கத்தில் தனியாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். ரஜினி சார் சற்று தூரத்தில் தள்ளி தனியாக அமர்ந்து இருந்தார்.

    எங்களை பார்த்ததும் 'ஏன், என்னை மட்டும் தனியா ஒதுக்கிட்டீங்க? வாங்க... என் அருகில் வாங்க... எல்லோருமே பேசிக் கொண்டிருக்கலாமே என்றார். அதன் பிறகு எல்லோரும் அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தோம். படப்பிடிப்பு ஜாலியாக போய் கொண்டிருந்தது.

    எங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்சிகளில் குறிப்பிட்ட நாட்களில் நடித்து வந்தோம். படப்பிடிப்பு முடியும் தருவாயில் தான் கதையில் மாற்றம் செய்து ரஜினிசாருக்கு ஜோடி சேர்த்து இருக்கிறார்கள். நயன்தாரா ஜோடியாக நடித்து இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது. அதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

    கதையில், கதாபாத்திரங்களில் எங்களுக்கே தெரியாமல் அப்படி ஒரு மாற்றத்தை செய்து எங்களை ஏமாற்றுவார்கள் என்று அப்போது நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ஆரம்பத்தில் தெரிந்து இருந்தால் படத்தில் நடிக்கவே ஒத்துக் கொண்டிருக்க மாட்டோம்.

    படப்பிடிப்பே முடிந்த பிறகு பேசி எந்த பயனும் இல்லை என்பது தெரியும். இருந்தாலும் உடனே டைரக்டருக்கு போன் போட்டு கேட்டேன். அதற்கு மழுப்பலான பதில் தான் கிடைத்தது. நான் மட்டுமல்ல என்னைப்போல் குஷ்புவும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவர் எனக்கு போன் பண்ணி, 'ஏய், மீனா ரஜினிக்கு ஜோடி உண்டு என்று கதை மாற்றப்பட்டிருக்கிறது. நயன்தாராவை ஜோடியாக போட்டு இருக்கிறார்கள். உன்னிடம் ஏதாவது போனில் பேசினார்களா என்றார்.

    நான் யாரும் பேசவில்லை என்றேன். அதை கேட்டதும் அவருக்கும் கடும் கோபம் வந்தது. இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்களே என்று அந்த சம்பவத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன்.

    அண்ணாத்த படம் வெளி வந்ததும் அதை பார்த்து என்னை பலரும் திட்டினார்கள். நீ ஏன் இந்த பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாய் என்று. என் நலம் விரும்பிகள் ஒவ்வொரு வரும்போன் போட்டு திட்டினார்கள்.

    ஒவ்வொருவருக்கும் நடந்த சம்பவத்தை விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. என்ன செய்வது இந்த காலத்திலும் இப்படி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மனதுக்குள் நினைத்தேன். கோபப்பட்டேன், வருத்தப் பட்டேன். வேறு என்ன செய்வது? பின்னர் அதையும் மறந்தேன்.

    அதன்பிறகு மந்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன?

    அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×