என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே!... அத்தியாயம்- 24
    X

    உசுரே நீ தானே!... அத்தியாயம்- 24

    • திவ்யா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல சார்.
    • ராஜேஷ் கூறிய கதையை கேட்ட எல்லோருக்குமே இதை நம்ப முடியவில்லை.

    "இப்ப சொல்லு ராஜேஷ்... யாரு ஹீரோ? - டேவிட் பிஸ்டலை அவன் நெற்றிப்பொட்டில் வைத்தபடி கேட்டான். ராஜேஷ் விக்கித்து நிற்க... சுற்றி நின்ற ராஜேஷ் ஆட்கள், அழகர் ஒரு அடி முன்னால் வைக்க... "யாரும் நகராதீங்க மீறி நடந்தா, இருக்கிற கோபத்துக்கு ராஜேஷ் நெத்தில இந்த பிஸ்டல் ரத்தப்பொட்டு வைக்கும்...!" - டேவிட்டின் கோபமான குரலில் எல்லாரும் உறைந்து நின்றனர்.

    "மேரி, போய் இவன்க கார்ல கயிறு இருக்கும் எடுத்துட்டு வா..." - மேரி ஓடினாள்.

    "டேய்... போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணுங்க... இவன் சொன்ன குட்டிக்கதையை அவங்களும் கேட்கட்டும்..."

    நெல்சன், தியாகு, செந்தில் மூவருமே போனில் அருகில் உள்ள போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு டயல் செய்ய ஆரம்பித்தனர்.

    அடுத்த சில நிமிடங்களில், இன்ஸ்பெக்டர் அழகர், ராஜேஷ், அந்த இருபெண்கள் உள்பட மரங்களில் கட்டிபோடப்பட்டிருக்க... மணி மற்றும் கான்ஸ்டபிள்கள் துணையாய் இருக்க, எதிரே நின்றிருந்தான் டேவிட் - கையில் பிஸ்டல்!

    "ரொம்ப தப்பு பண்ணிட்ட ராஜேஷ். தப்பான ரெண்டு பெண்களை கூட்டிட்டு... என் திவ்யாவை நீ கடத்தினது தப்பு. அதுக்கு உடைந்தயா அழகர் செயல்பட்டது மாபெரும் தப்பு.!"

    இடைமறித்த பெருமாள்...

    "என்ன மாப்பிள்ளை பேசிகிட்டு. போலீஸ்ல இவன்களை ஒப்படைச்சாலும், சட்டம், கோர்ட்டுனு தப்பிச்சுடுவாங்க. 'பட்பட்'னு போடு மாப்பிள்ளை. கேட்டா, தற்காப்புக்காக சுட்டோம்னு சொல்லிக்கலாம்" வெறித்தனமாய் கத்தினான்.

    சிரித்தபடி டேவிட், ராஜேஷை ஏறிட்டான்.

    "பாத்தியா... அரசியல்வாதியா இருந்தாலும், எங்க காதலை எதிர்த்த பெருமாள் எங்களுக்கு எதிரா செயல்படலை. ஆனா... நீ அசிங்கமா நடந்துகிட்ட. பெருமாள் சொல்ற மாதிரி உன்னை சுட்டுடவா...?" ராஜேஷ் நெற்றிப் பொட்டில் பிஸ்டலை வைத்தான்.

    "அப்படி சுடணும்னா... நீ உங்கப்பா வேதநாயகத்தைதான் முதல்ல சுடணும். அவருதான் திவ்யாவை கடத்த பிளான் போட்டுக்குடுத்ததே! டேவிட் அதிர்ந்தான்.

    "என்னது திவ்யாவ கடத்தச் சொல்லி திட்டம் போட்டு கொடுத்தது, என் அப்பா தேவ சகாயமா?" டேவிட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பேரும், அதிர்ந்து போன அந்த நாளின் அந்த நிமிடத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு...

    அன்று ஞாயிற்றுக்கிழமை... காலையில் சர்ச் போய், ஆட்டோவில் வந்து இறங்கி, வீட்டுக்குள் நுழைய முற்பட்ட டேவிட்டின் அப்பா தேவசகாயம் கண்ணில் பட்டான் ராஜேஷ்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    பைக்கில் அமர்ந்தபடி யாருடனோ போனில் பேசியபடி, அவ்வப்போது டேவிட்டின் வீட்டை அவன் நோட்டமிடுவதை பலமுறை பார்த்திருக்கிறார் தேவசகாயம். நேரே வீட்டிற்குள் நுழையாமல் ராஜேஷ் நோக்கி வந்தார். தேவசகாயம் தன்னை நோக்கி வருவதை பார்த்ததும், ராஜேஷூக்கு முதுகு தண்டில் ஐஸ்கட்டியை வைத்தது போல் சிலீரென்றது. என்றாலும், காட்டிக் கொள்ளாமல் உதறலை மறைத்தபடி போன் உரையாடலை தொடர்ந்தான். அவன் அருகில் வந்து நின்ற, தேவசகாயம் தொண்டையை செருமினார். அப்போதுதான் அவரை கவனித்த பாவனையில் "மச்சான்... நா அப்புறம் கூப்பிடுறேன்... இங்க ஒரு கெஸ்ட்!" - போனை துண்டித்தான். தேவசகாயத்தை ஏறிட்டான்.

    "சொல்லுங்க சார்...!"

    "உங்க பேரு என்ன தம்பி?"

    "ராஜேஷ்...!"

    "தெருவுக்கு புதுசா குடி வந்திருக்கீங்களோ?"

    "ஆமா... ஏன் சார்?"

    "இல்ல, என் பையன் திவ்யாவை கல்யாணம் பண்ணி கொஞ்சநாள் தான் ஆகுது... அவங்க கல்யாணம் முடிஞ்ச, சில நாள் கழிச்சு இந்த தெருவுக்கு வந்தீங்க... ஆனா வந்த நாள்ல இருந்து கவனிக்கிறேன். என் மருமகளை பாலோ பண்றீங்க... உங்களுக்கு என்ன வேணும்?"

    காதுக்குள் 'கரண்ட் ஷாக்' கொடுத்ததுபோல் இருந்தது, ராஜேஷூக்கு! இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

    "இல்லியே சார்... அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை..."

    "மறைக்காதீங்க தம்பி... உண்மையை சொன்னா உங்களுக்கு உதவியா இருப்பேன்... ஏன்னா, என் பையன் டேவிட், அவளை கல்யாணம் பண்ணது எனக்கு பிடிக்கலை..."

    உணர்ந்தான் ராஜேஷ். "ஆமா சார்.. நான் திவ்யாவை பாலோ பண்றது உண்மைதான்! இப்ப சொல்லுங்க... என்ன உதவி பண்ணப் போறீங்க...?" - கேட்டான்.

    "இங்க நின்னு ரொம்ப நேரம் பேச வேண்டாம். சாயங்காலமா... ஜங்ஷன்ல இருக்கிற ஓட்டலுக்கு வாங்க... நிறைய பேசலாம்!"

    ஓட்டல் பெயரை சொன்னார்.

    சாயங்காலம். அந்த ஓட்டல் ரெஸ்டாரண்ட். பேருக்கு எதையோ ஆர்டர் பண்ணிவிட்டு எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரில் தேவசகாயம் பேசினார்.

    "தம்பி... நான் தீவிர கிருஸ்டியன். என் பையன் டேவிட், ஒரு இந்துப் பெண்ணை லவ் பண்ணது எனக்கு பிடிக்கலை. என் வீட்டுல உள்ளவங்க முன்னாடி அவங்க காதலுக்கு ஒத்துகிட்ட மாதிரி நடிச்சாலும்... மனசு ஒத்துக்கவே இல்லை. என் மகன் டேவிட் பிடிவாதக்காரன். நான் பேசினாலும் ஒத்துக்க மாட்டான். அதனால அமைதியா நடந்ததை வேடிக்கை பார்த்தான்.

    ஆனா - அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது, எனக்கு விருப்பமேயில்லை. சொல்லுங்க... அவங்களை பிரிக்கணும்... அதுக்கு முன்னாடி நீங்க சொல்லுங்க... எதுக்கு நீங்க திவ்யாவை தொடர்ந்து பாலோ பண்றீங்க?"

    ராஜேஷ் தொண்டையை செருமி, ஒரு சிப் தண்ணீர் குடித்தான். டம்பளரை கீழே வைத்தவன்... "ஒரு சிப் தண்ணீர் குடிச்சதும்... வேண்டாம்ன்னு இந்த டம்ளரை தள்ளி வைச்ச மாதிரி, என்னை தள்ளி வெச்ச திவ்யாவோட அப்பா ரங்கராஜன் தான் சார் எல்லாத்துக்கும் காரணம்!"

    தேவசகாயம் அவனையே பார்த்தார்.

    "நான் பாளையங்கோட்டை சார்... என்னைத் தான் ரங்கராஜன் அவரு பொண்ணுக்கு பேசினார். இது விஷயமா எங்க வீட்டுக்கு கூட வந்திருக்காரு. திவ்யா, குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு வருவான்னு தெரிஞ்சு, அங்க போயி... அவருக்குத் தெரியாம அவளை ரெண்டு தடவ பார்த்திருக்கேன் சார்... அவதான் என் மனைவின்னு பிக்ஸ் ஆயிட்டேன்... எங்கப்பா கிட்ட சீக்கிரம் கல்யாணம் முடிங்கன்னு அவசரப்படுத்தினேனா பாருங்க..."

    "அப்புறம் வந்து என் பொண்ணு, டேவிட்னு ஒரு பையனை விரும்புறா... அவனுக்கே அவளை கல்யாணம் பண்ணி வைக்க போறேன்... அதனால உங்க பையனுக்கு வேற வரன் பார்த்துக்கோங்க அப்படின்னு உங்கப்பாகிட்ட சொல்லிட்டு போயிருப்பாரே அந்த ரங்கராஜன்!"

    ராஜேஷ் 'ஆமா' என தலையாட்டினான்.

    "நானும் திவ்யாவோட அண்ணன் பெருமாள் தீவிர மத பற்று உள்ள கட்சிக்காரன். அப்பன்காரனும், அவனும் ஒத்துக்கமாட்டங்கன்னு நெனைச்சேன். ஆனா எல்லாமே கைமீறி போயிடுச்சு..."

    சற்று நேரம் அமைதியானார்கள். தேவசகாயம் தொடர்ந்தார்.

    "உனக்கு இப்ப திவ்யா கிடைச்சாலும் சம்மதமா?"

    சற்று குழம்பினாலும், "இப்ப இல்ல சார்... எப்போ கிடைச்சாலும் எனக்கு சம்மதம்தான்..."

    "அப்போ அவளை கடத்திடு!"

    தேவசகாயம் இப்படி சொன்னதும், ராஜேஷூக்கு நெருப்புக்குகைக்குள் போனது போல் 'சுரீர்' என்றது.

    "என்ன தம்பி பாக்குறே... அவ கழுத்துல இருக்கிற என் பையன் கட்டின தாலியை எடுத்துட்டு, நீ ஒரு தாலிய கட்டிபுட்டா... அவ உன் பொண்டாட்டி... மிரட்டி, உருட்டி இதை நீ பண்ணணும்... அப்புறம் அவளை கூட்டிட்டு தமிழ்நாட்டை விட்டே தூரமா போய், அவளை மனைவியா வெச்சுக்கோ... முதல்ல முரண்டு பிடிச்சாலும்... ஒருகட்டத்துக்கு அப்புறம் சமாதானம் ஆயிடுவா?"

    "திவ்யா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல சார். கடைசிவரை ஒத்துக்க மாட்டா... அதுக்கு பதிலா தற்கொலை பண்ணிக்குவா..."

    "பண்ணட்டும்... யேப்பா... இங்க பாரு தம்பி, பேசி மசிய வைக்கப்பாரு... இல்லையா தப்பான தொழில் பன்ற பொண்ணுங்க கிட்ட தள்ளிவிட்டுரு... அதுவும் முடியலையா, அவ சாகணும்னு விதி இருந்தா சாகட்டும்!"

    அவரது பேச்சில் இருந்த வெறுப்பின் உச்சத்தை ராஜேஷ் கவனித்தான்.

    "அவள கடத்திடுவேன்... ஆனா, பின்னாடி பிரச்சினை ஏதும் வந்துடுமோன்னு பயமா இருக்கு..."

    "திவ்யா உங்களுக்கு வேணும்னா நீங்க இந்த ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். பணம் நான் தரேன். ஆளுங்களை செட் பண்றது.. போலீஸ் சமாளிக்கிறது இதெல்லாம் உங்க வேலை. நான் எப்படி கடத்தனும், என்னென்ன பண்ணனும்ன்னு ஐடியாக்கள் தரேன்... வழக்கம்போல எதுவுமே தெரியாத மாதிரி எங்க வீட்ல நல்லவனா நடந்துப்பேன். ம்... என்ன சொல்றீங்க...?"

    ராஜேஷ் யோசித்தான்.

    "யோசிக்காதீங்க தம்பி... இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருக்கிற திவ்யா அண்ணன் மேலதான், எல்லாருக்கும் சந்தேகம் வரும்... நிச்சயமா உங்க மேலே யாருக்கும் 'டவுட்' வராது. அவ்வளவு ஏன் ராஜேஷ்ன்னு ஒருத்தன் இருக்கான்கிறதே எல்லோரும் மறந்து இருப்பாங்க..."

    "என்னை திவ்யாவும், டேவிட்டும் ரெண்டு தடவை பார்த்தாங்க... ஒரு தடவை நான் லேசா பேச்சுக் கொடுத்துட்டு 'டீசெண்டா' நகர்ந்துட்டேன்..."

    "அது எதேச்சையா நடந்த சந்திப்புதானே! முகம் எல்லாம் நியாபகத்துல இருக்காது...!"

    "சரி... பிளானை சொல்லுங்க..."

    "இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சில ரவுடிகளை 'செட்' பண்ணி, இன்னிக்க நைட், திவ்யாவும் டேவிட்டும் வர்ரப்போ கலாட்டா பண்ண வைங்க..."

    "எதுக்கு?"

    "நாளைக்கு திவ்யாவை நீங்க கடத்தின பிறகு, இந்த ரவுடிகள் மேல ஒரு 'டவுட்' வரும். அதுக்குள்ள அந்த ரவுடிகளை வெளி மாநிலம் அனுப்பிடலாம்..." "சார்... சூப்பரா பிளான் போடுறீங்க... வெரி குட்... இன்னியிலிருந்து திட்டத்தை செயல்படுத்துறோம்...!"

    "எஸ்... நானும் என் செல்வாக்கை பயன்படுத்தி, அவங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்க வைக்கிறேன்... அப்பத்தான் அவங்க 'ரொட்டின்' மாறும்... நம்ம பிளானை நாம வெற்றிகரமா செயல்படுத்த முடியும்..."

    இருவரும் கை குலுக்கினார்கள்.

    அன்று அவர்கள் போட்டத் திட்டம், இன்று எல்லோரையும் இந்தக் காட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. ராஜேஷ் கூறிய கதையை கேட்ட எல்லோருக்குமே இதை நம்ப முடியவில்லை.

    "தேவசகாயமா இப்படி?"

    டேவிட் நண்பர்கள், திவ்யா, ரங்கராஜன், ராஜேஸ்வரி, பெருமாள் என அனைவரும் அதிர்ச்சியில் சிலையாய் நிற்க, மேரி கண்ணீர் விட்டாள். "நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா... அவ மாதிரித்தானே திவ்யாவும்... ஏங்க இப்படி பண்ணினீங்க..." என ஓங்கி குரல் எடுத்து அழுதபடி, தேவசகாயத்தை சட்டையை பிடித்து உலுக்கினாள் லிசா. அமைதியாய் நின்றார் தேவசகாயம். படாரென்று அவரது காலில் விழுந்த மேரி, "அப்பான்னு உங்களை எப்படி கூப்பிடுவேன் இனிமே... மதம் எங்களுக்கும் பிடிக்கும்... ஆனா மதத்து மேல இருக்கிற வெறியில இப்படி ஒரு கேவலமான விஷயம் பண்ண முடிவு பண்ணிட்டீங்களே... சே..." விம்பி வெடித்தாள்.

    (தொடரும்)

    Next Story
    ×