என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே!... அத்தியாயம்- 23
- திவ்யாவை துரத்தியபடி மற்ற ஆண்கள் வெறித்தனமாய் ஓடிக்கொண்டு இருந்தனர்.
- டேவிட் கோவக்காரன் என்பது அவளுக்கு தெரியும்.
அந்த காட்டின் ஓர் அடர்ந்தபகுதிக்கு வந்தார்கள் திவ்யாவும், கூட வந்த அந்த பெண்ணும்! அங்கிருந்து பார்த்தால், திவ்யாவை கடத்தி வந்த கார், ரோடு ஓரமாய் இன்ஜினை ஆப் செய்யாமல், உருமியபடி நின்றது. திவ்யாவின் தோளை தட்டிய அந்தபெண் "ஏய்... போயிட்டு வா..."- அங்கிருந்த ஒரு புதர் மறைவை காட்டினாள். திவ்யா தயங்கி நின்றாள்.
இவள் ஏன் தயங்கி நிற்கிறாள் - அந்தப் பெண் யோசிக்க, கட்டப்பட்ட கைகளை, தூக்கி காட்டினாள் திவ்யா."ஒ... புரியது. கட்ட அவிழ்த்துவிடுவேன்... ஒழுங்கா போயிட்டு வரணும்.. தப்பிக்க முயற்சி பண்ண, அப்புறம் நான் மனுஷியா இருக்கமாட்டன்.. – அவள் திவ்யா கைகளில் கட்டி இருந்த கட்டுகளை அவிழ்க்கும் போது, "ஆமா... நீங்க ஏன் இப்படி தப்பான வேலை செய்றீங்க..." திவ்யா கேட்டாள்.
என்ன அட்வைஸா... இவ பெரிய ராணி! மங்கையர் குலத்துக்கு அட்வைஸ் பண்றா.. ச்சீ... போயிட்டு வா! கட்டுகளை அவிழ்த்து, தோள் பிடித்து தள்ளினாள். அவ்வளவுதான்! திவ்யா சுதாரித்தாள். அவள் அடுத்த நிமிடம், தன் முஷ்டியை பிரயோகித்தாள். ஒரே குத்து. "அம்மா! "என அலறியபடி அந்தப் பெண் கீழே எகிறி விழுந்தாள்.
சத்தம் கேட்டு காரில் இருந்து, அத்தனை பேரும் இறங்கினர். திவ்யா அந்த காட்டுக்குள், எதிர் திசையில் மின்னலாய் ஓடிக்கொண்டிருந்தாள்.
"இவளோட இதே இழவா போச்சு... முடிஞ்சா பிடிங்க... இல்லேன்னா முடிச்சுடுங்க..." என கத்தியபடி, அவளை துரத்தியபடி, மற்றவர்கள் ஓடினர். கீழே திவ்யா தாக்குதலில் நிலைகுலைந்து கிடந்த பெண்ணை, இன்னொரு பெண் "அம்மா... அம்மா... " என தொட்டு எழுப்பி கொண்டு இருக்க... திவ்யாவை துரத்தியபடி மற்ற ஆண்கள் வெறித்தனமாய் ஓடிக்கொண்டு இருந்தனர்.
"டேய்.. அங்க பாரு திவ்யா!"
அதே ரோட்டில், வந்து கொண்டிருந்த, டேவிட்டின் காரில் இருந்த நெல்சன் கத்தினான். டேவிட் சட்டென்று பிரேக் அடிக்க, திவ்யா ஓடுவதும், அவளை முகமூடி அணிந்தவனும், மற்றவர்களும் துரத்துவது தெரிய, டேவிட் உள்பட அனைவரும் இறங்கி, காட்டுக்குள் ஓடினர். உயிரை கையில் பிடித்தபடி ஓடிவந்து எதிரே நின்ற திவ்யாவை, பிடித்து அணைத்தான் டேவிட். "திவ்யா... பயப்படாத!" திவ்யாவின் மூச்சு இரைப்பது, டேவிட்டின் மார்பில் சூடாக தெரிந்தது.
"டேவிட்.. டேவிட்., இவன்க யாரு... எதுக்கு... எதுக்கு... இப்படி பன்றான்க..." –திவ்யா மூச்சிரைக்க விம்மியபடி கேட்டாள். திவ்யாவை துரத்திவந்தவர்கள், அவர்கள் எதிரே வந்து நின்றனர்.
"ஏய்... மரியாதையா அவளை எங்ககிட்ட விட்டுட்டு போயிடுங்க... இல்ல... உயிரு... தங்காது...!"
சொன்னபடியே, தனது முகமூடியை கழட்டினான் அவன். அவன் முகத்தை பார்த்ததும் டேவிட்டுக்கு பிளாஷ் அடித்தது..
"நாங்க 'ரீஜெண்டா' இந்த தெருவுக்கு குடி வந்துருக்கோம்..."
இயக்குநர் A. ெவங்கடேஷ்
தன் வீட்டிற்கு வந்து, அப்பாவிடமும், தன்னிடமும் அறிமுகம் செய்து கொண்டவன். டேவிட் வசிக்கும் தெருவில், அந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த வீட்டில் வசிப்பவன். இவன் நம்ம வீட்டிற்கு வந்தபோது, தன் தங்கை மேரியை பார்க்க திவ்யா கூட அன்று வந்து இருந்தாளே! - யோசித்த டேவிட் திவ்யாவை பார்த்தான்.
"டேவிட், இவன் உங்க தெருவுல உள்ளவன்... இவன் எதுக்கு என்னைய...
"யேய்... இந்த காரண, காரியமெல்லாம் விளக்க நேரமில்லை. மரியாதையா அவளை விடு...'' அப்போது ரோட்டோரமாய், போலீஸ் ஜீப் வந்து நிற்க, தபதப வென்று அழகர் உள்பட போலீஸ் டீம் இறங்கி ஓடி வந்தது.
'அப்பாடா... போலீஸ் வந்துடுச்சு' என டேவிட், திவ்யா நிம்மதி பெருமூச்சு விட்டனர். போலீஸ் வருவதை பார்த்த ராஜேஷ், "வாங்க... அழகர் சார்... சரியான டைமுக்கு, என்ட்ரி தரிங்க..."-அழகர் கையில் ரிவால்வருடன் அவர்கள் அருகில் வந்து நின்றார்.
"என்ன டேவிட்... நான் ராஜேஷ் ஆளுன்னு எதிர்பார்க்கலை இல்லை... திவ்யா கடத்தப்பட்ட நிமிஷத்துல இருந்தே, நான் தேடுற மாதிரி டிராமாதான் பண்ணேன்... இன்னும் சொல்ல போனா, உங்க மேலே ரவுடிங்க 'அட்டாக்' பண்ணாங்களே... அதான் திவ்யாவ கடத்துறதுக்கு போட்ட ஸ்கெட்சுல முதல் சீன். அப்புறம் என் லிமிட்ல வேண்டாம்னு, பிளானை மாத்தி, ஹைவேஸ்ல கடத்தினோம்."
திவ்யா, டேவிட் ஷாக்காகி பார்க்க, டேவிட் நண்பர்கள் உறைந்து போய் நின்றனர். அவ்போது யாரும் எதிர்பாராதவிதமாய் காட்டுக்குள், யாரோ சிலபேர் நடந்து வரும் சத்தம் கேட்டு திரும்பினர். தனது ஆட்களுடன் பெருமாள் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான். "யோவ் அழகர்... நீ இப்படி பண்ணுவேன்னு எனக்கு ஆரம்பத்துலே இருந்து சந்தேகம் இருந்துச்சு. நீ எப்படி இந்த ராஜேஷ், மெசேஜ் அனுப்பி இங்க வந்தியோ, அப்படித்தான் மணி மெசேஜ் அனுப்பி நானும் இங்க வந்தேன்..." அழகர் திரும்பி கான்ஸ்டபிள் மணியை முறைக்க, மணி முகத்தை திருப்பி கொண்டான்.
"அழகர்... நாங்க 12 பேரு இருக்கோம்... இந்த ராஜேஷ் கூட சேர்ந்துகிட்டு ஒண்ணும் பண்ண முடியாது... பேசாம துப்பாக்கிய திருப்பி இடுப்புல சொருகிட்டு, இந்த ராஜேஷ் கோஷ்டிகளை அரெஸ்ட் பண்ணினா நல்லது. எங்களுக்கு இல்ல. உனக்கு உன் வேலை போகாம இருக்கும்..." பெருமாள் சொல்லவும், அவனை நோக்கி, துப்பாக்கியை திருப்பினார் அழகர்.
"பெருமாள்... உங்கள்ல யார உசுரோட விட்டாலும்... இனி எனக்கு மட்டுமல்ல.. இவங்க எல்லாருக்குமே ஆபத்துதான்..." - ரிவால்வரின் ட்ரிக்கரை அழகர் அழுத்தப்போக, டேவிட் காலால் எகிறி உதைக்க, ரிவால்வர் காற்றில் பறந்து, அந்த காட்டின் ஒரு பகுதியில் விழுந்து, சருகுகளுக்குள் மறைந்தது. இதுதான் சமயம் என டேவிட்டின் நண்பர்கள் பாய, பெருமாளும், அவனது ஆட்களும் உதவிக்கு வர அந்த இடத்தில் ஒரு சிறு கலவரமே மூண்டது. திவ்யா ஒரு மரம் பின்னாடி பதுங்கினாள்.
நிஜமான ஓர் சண்டையை தன் கண் முன்னாள் அவள் பார்ப்பது இதுவே முதல் முறை.
டேவிட் கோவக்காரன் என்பது அவளுக்கு தெரியும். ஆனால், இப்படி ஆக்ரோஷமாய் அவன் தன்னை கடத்தின ராஜேஷை அடிப்பான் என எதிர்பார்க்கவில்லை. அப்போது தன் கணவன் தன்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை உணர்ந்தாள். அப்படி அவள் உணர்ந்த அந்த வினாடியின் முடிவில், அவள் கழுத்தில் ஒரு கத்தி வைக்கப்பட்டது. கூடவே, "நிறுத்துங்க சண்டையை... இல்ல இவ கழுத்த அறுத்துடுவேன்..." என்ற குரல் கேட்டு, அனைவரும் அதிர்ச்சியடைந்து நின்றனர்.
திவ்யாவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தது ஸ்டீபன். மற்றொருவனான பாண்டி டேவிட், திவ்யா இருவரின் அப்பா, அம்மாக்களையும், கைகளை கட்டி அவர்களை தன் பிடியில் வைத்திருந்தான்.
"பாண்டி... அவங்களை இறுக்கமா பிடிச்சுக்கோ...!" ஸ்டீபன் குரல் தர, பாண்டி தலையாட்டினான். பலமாய் கைகளை தட்டிய ராஜேஷ் "வெரிகுட் பசங்களா... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இவங்களை கூட்டிட்டு குறுக்குத்துறை கோவிலுக்கு வர சொன்னேன். ஆனா சரியான நேரத்துல இங்க வந்திட்டீங்கடா..." அவர்களை பாராட்டினான்.
"இல்ல தலைவரே... போற வழியில ரோட்டுல உங்க வண்டியும், போலீஸ் ஜீப்பும் நின்னுச்சு.. சந்தேகம் வந்து, இவங்களை இறக்கி, கைகளை கட்டி காட்டுக்குள்ள வந்தா... இங்க இவ்வளவு கலவரம். என்னாச்சு தலைவரே.."
"இல்லடா... பிளான்ல ஒரு சின்ன 'சிலிப்' ஆயிடுச்சு... அதனால என்ன... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்..." - என கூறியவன், டக்கென்று பாய்ந்து இன்ஸ்பெக்டர் அழகரின் பிஸ்டலை கையில் எடுத்தான்.
அனைவரையும், ரிவால்வரால் குறிவைத்தான். டேவிட் அருகில் வந்து, அவனது நெற்றிப்பொட்டில் ரிவால்வரை வைத்தவன், எல்லோருக்கும் கேட்கும்படியா கத்தினான்.
"உங்களுக்கு எல்லாம் ஒரு குட்டிக்கதை சொல்லட்டா?"
அதே சமயம் போலீஸ் ஸ்டேசனில் இருந்து ரங்கராஜன், தேவசகாயம், ராஜேஸ்வரி, லிசா இவர்களை கூட்டி வந்த காரின் பின்சீட்டில் இருந்து, மேரி இறங்கினாள்.
சுற்றிலும் பார்த்து சூழ்நிலையை அனுமானித்த அவள் கண்களில் காடும்... காட்டுக்குள் கத்திய ராகேஷ் குரலும் சன்னமாய் கேட்டது. மெதுவாய் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள்.
காட்டுக்குள் ராஜேஷ் தொடர்ந்தான்.
"இந்தக்கதையில நான் வில்லன் இல்ல. நிஜமா நான்தான் ஹீரோ!" –அனைவரும் அவனையே பார்த்தனர். நேராக திவ்யா அருகில் வந்தவன் அவளை பார்த்தான். "இந்த அழகு தேவதையை நான்தான் கட்டியிருக்கணும். பாளையங்கோட்டையில் என்னத்தான் இவங்கப்பா... இந்த ரங்கராஜன், திவ்யாவுக்கு மாப்பிள்ளையாக்க எங்கப்பா கிட்ட பேசினார். ஆனால் திவ்யா.. இந்த டேவிட்டை விரும்புறா அப்படின்னு தெரிஞ்சவுடனே, மனசு மாறிட்டார், இந்த ரங்கராஜன்... அம் ஐ கரெக்ட் மிஸ்டர் ரங்கராஜன்?"
இப்போதுதான் ரங்கராஜனுக்கு இவன் ஏற்கனவே தான் பாளையங்கோட்டையில் திவ்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை என்பது புரியுது.
"அதுக்கா... கல்யாணம் முடிஞ்ச பொண்ணை கடத்திட்டு, போயி அவ கட்டியிருந்த தாலிய கட் பண்ணிட்டு, அவளுக்கு நீ வேறு தாலி கட்ட முடிவு செய்வியா..? அசிங்கமாயில்ல...!" ரங்கராஜன் கத்தினார்.
"ஹலோ.. ரங்கராஜன்... ஏன் கத்துற...
பி.பி எகிறிடபோகுது., இந்த காட்டுக்குள்ள டாக்டர் கூட வர லேட்டாகும்... பொட்டுனு போயிடப்போற... ரங்கராஜன் முறைத்தார். ராஜேஷ் தொடர்ந்தான். "அதான் திவ்யா காதலிச்ச அவ லவ் பண்ண டேவிட் இருக்கிற தெருவுக்கு 'ஷிப்ட்' ஆனேன்... அன்னியில இருந்து உங்களை அங்குல அங்குலமா 'வாட்ச்' பண்ணினேன்... என் நேரம் கச்சேரிக்கு கார்ல தனியா போனீங்க... நான் 'ஸ்கெட்ச்' போட்டு என் தேவதையை தூக்கிட்டேன்..."
"ச்சீ... வாய மூடுடா! திரும்ப திரும்ப என்னை உன் தேவதைன்னு சொன்ன செருப்பு பிஞ்சுடும்...! "திவ்யா கத்தினாள்.
"உசுரே நீதானே...!" –ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவது போல் உச்சஸ்தாயில் பாடினான் ராஜேஷ். பின் திவ்யாவிடம் திரும்பி, "இந்தப்பாட்ட நான் உன்னை நெனைச்சு நெனைச்சு பாடுவேன்... இப்ப சொல்லு நான் ஹீரோவா. வில்லனா?"
சடாரென்று மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த மேரி... ராஜேஷின் கையில் இருந்த பிஸ்டலை தட்டி விட... இதுதான் சமயம் என்று, டேவிட்டின் நண்பர்கள் பாய்ந்து ராஜேஷை பிடித்துக்கொண்டனர். ராஜேஷிடம் இருந்து பறந்து வந்த, பிஸ்டலை சரியாக கேட்ச் பிடித்தான் டேவிட். இப்போது பிஸ்டல் ராஜேஷை குறி வைத்திருந்தது...
(தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353






