என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சனிப் பெயர்ச்சி யாருக்கு நன்மை தரும்
- சனிப் பகவான் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.
- கோட்சாரத்தில் சனிபகவான் தரும் பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
2025-ம் ஆண்டு துவங்கியதில் இருந்து அனைவரின் வாழ்க்கையும் சற்று பிரமிப்பாகவே உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு வருட கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி யாகிறார்கள். அதாவது சனி, குரு, ராகு, கேது என வருட கோள்கள் இடம் பெயறுவதால்
சற்று பய உணர்வுடன் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். மக்களின் மன நிலை இவ்வாறு இருக்க சனிப்பெயர்ச்சியே இந்த ஆண்டு கிடையாது என்ற புரளியை ஒரு பிரிவினர் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். அவரவரின் அனுபவ அறிவுக்கு எட்டியதை சிலர் கூறுகிறார்கள். ஆனால் விண்வெளியில் உலா வரும் கிரகங்களிடம் "சனி பகவானே வாக்கியப் பஞ்சாங்கப்படி தாங்கள் அடுத்த ஆண்டு தான் நகர வேண்டும் " என்று கூற முடியுமா?
இது ஒரு புறம் இருக்கட்டும். தற்போது சனிப் பகவான் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15-ம் நாள், சனிக்கிழமை
29-3-2025 அன்று இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3-ம் பாதத்திலிருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
தனது 3-ம் பார்வையால் கால புருஷ 2-ம்மிடமான ரிஷப ராசியையும், 7-ம் பார்வையால் கால புருஷ 6-ம்மிடமான கன்னி ராசியையும்,10-ம் பார்வையால் கால புருஷ 9-ம்மிடமான தனுசு ராசியையும் பார்க்கிறார். வருட கிரகங்களின் பெயர்ச்சி பலன்கள் எல்லோருக்கும் குறைந்தது 3 மாதத்திற்கு முன்பே தெரியத்துவங்கிவிடும். அந்த வகையில் உங்களுக்கு கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்தை சில வாழ்வியல் நிகழ்வுகள் மூலம் நீங்களே உணர முடியும்.
சனி பகவானுக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. விதிப்படி, வினைப்படி அவரவர் அனுபவிக்க வேண்டிய சுப, அசுப பலன்களை கோட்சாரத்தில் தனது நியாயத் தீர்ப்புகளை தயங்காமல் வழங்குவார். கோட்சாரத்தில் சனிபகவான் தரும் பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம். ஏழரை சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி.
ஏழரை ஆண்டுகளில் ஒரு மனிதனை பிடிக்கும் போது ஏற்படுத்தும் கஷ்ட நஷ்டங்களை இரண்டரை ஆண்டுகளில் நிகழ்த்துவார் என்பதால் ஏழரைச் சனியினால் ஏற்படும் பாதிப்பை விட அஷ்டமச் சனியினால் ஏற்படும் பாதிப்பு அதிகம். 3 சுற்று அஷ்டமச் சனி, ஏழரைச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார்? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனிவராக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடுபவர்களும் இருக்கிறார்கள்.
சனிப்பெயர்ச்சியால் நன்மை யாருக்கு
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை வைத்துக் கொண்டுதான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது கெட்டது செய்யும் என்பதை முடிவு செய்ய வேண்டும். தற்போது சனி பகவான் மீன ராசிக்கு செல்வதால் ஒருவரின் சுய ஜாதகத்தில் மீனத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி கிரகங்கள் இருந்தால் அவருக்கு சனிப் பெயர்ச்சியால் பாதிப்பு உண்டு. அவர்களுக்கு நல்ல யோக தசாவாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும். ஒருவரின் சுய ஜாதகத்தில் மீனத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த சனிப்பெயர்ச்சி அவர்களை பாதிக்காது. சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான ஏழரை, அஷ்டமத்துச் சனியாக நடக்கும்.
ஐ.ஆனந்தி
மீனத்திற்கு செல்லக் கூடிய சனிபகவானால் கீழ்கண்ட நல்ல பலன்கள் நடந்தால் அவர்களுக்கு ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி பாதிக்கவில்லை என பொருள்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
இவர்களது திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியும் படியாக புகழ், அந்தஸ்துடன் இருப்பார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட லாபகரமான தொழில் வாய்ப்புகள் தேடிவரும்.
தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும்.
நிலையான, நிரந்தரமான லாபம் நிறைந்திருக்கும்.
அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு.
அதிகார கவுரவ பதவிகள் தேடி வரும்.
அரசியல் ஆதாயம் உண்டு.
அரசாங்கத்திடம் பாராட்டும் புகழும் பெறுவார்கள்.
புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள்.
குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.
பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள்.
பிள்ளைகள் அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள்.
புத்திரர்களால் நிம்மதி, சந்தோஷம் அடைவார்கள்.
குல தெய்வ அருள் உண்டு.
முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள்.
பூர்வீகச் சொத்தை பல தலைமுறையாக பயன் படுத்துவார்கள்.
சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.
அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி உண்டு.
குலப் பெருமை, கவுரவம் உண்டு.
சொத்துக்கள் குவிந்து கொண்டே இருக்கும்.
சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் உண்டு.
பல அடுக்குமாடி வீடு கட்டுவார்கள்,
வீடு, வாகன வசதி உண்டு. உற்றார், உறவினர்களால் போற்றப்படுவார்கள்.
பூர்வீகச் சொத்தில் வசிப்பார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன் நம்பிக்கையுடனும் இருக்கும்.
தைரியம், தன்னம்பிக்கை, திடகாத்திரம், ஆரோக்கியம், இன்பம், மகிழ்ச்சி உண்டு.
தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. இன்பம், செல்வம் அறிவு நிரம்ப பெற்றவர். தாய் வழி ஆதரவு உண்டு.
தன்னை சார்ந்தவர்களும் உயர உதவுபவர்.
ஜாதகரிடம் பொது நல சிந்தனை மிகுதியாக இருக்கும்.
இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வார். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவருபவர்.
தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும்.
எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக் கொண்டே இருப்பார்.
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.
இக்காலகட்டத்தில் அவர்கள் பணம் பொருளாதாரம் அதிகரிக்கும். வீடு வாகனம் தொழில் என அபிவிருத்தி அடையும்.
கீழ்கண்டவற்றில் ஏதேனும் சில விசயங்கள் நடந்தால் உங்களுக்கு சனி பகவானின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். எதை செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்.
வாழ்வில் உழைத்து உயர்வான நிலைக்கு சென்றவர்கள் கூட பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள்.
தொழிலில் எட்ட முடியாத பிரமாண்ட வளர்ச்சியை கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பு ஏற்படலாம்.
சொந்த ஊரில் பூர்வீக ஊரில் பூர்வீக சொத்தில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
தொழில், உத்தியோக ரீதியாக விரும்பத்தகாத இடத்தில் சென்று வாழ நேரிடும்.
வேற்று மொழி பேசுபவர்கள் மத்தியில் வாழும் நிலை. அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு.
கொடுக்கல் வாங்கலில் தடை, தாமதம் ஏற்படும்.
செல்வாக்கு, புகழ் அந்தஸ்து கெடும்.
உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு எதிராளிக்கு கிடைக்கும்.
உழைப்பது நீங்களாக இருக்கும், உழைத்த கூலியை பெறுவது வேறு நபராக இருப்பர்.
குல தெய்வ அனுகிரகம் குறைவது. சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்து குறைந்த ஊதியத்தை பெறுதல்.
சனி அசுப வலிமை பெற்றால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை உண்டாகும்.
குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை ஏற்படும்.
பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும்.
கண் தொடர்பான பிரச்சனை இருக்கும்.
பூர்வீகத்திற்கும் குல தெய்வ கோவிலுக்கும் சென்று வர முடியாது.
நிம்மதியை குலைக்கும் குழந்தைகளே பிறக்கும். பிள்ளைகளால் புகழ், அந்தஸ்து கவுரவம் குறையும்.
தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஆனால் இவை அனைத்தையும் இளைய மனைவிக்கு அதிக செலவு, விரயம் செய்ய நேரும்.
கடன் தொல்லை உண்டு.
எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் இருக்கும். தொழிலுக்காக கடன் பட நேரும் அல்லது. தொழில் கடனை அடைக்க முடியாது.
சிலர் கடனுக்கு பயந்து தலைமறைவாக வாழ நேரும்.
அதிர்ஷ்டம் . புத்திக்கூர்மை குறைவுபடும்.
புத்திர தோஷத்தால் சிலருக்கு வம்சம் தலைக்காது. குல தெய்வ அருள் கிடைக்காது.
வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்ப மாட்டார்கள். ஞாபகசக்தி குறையும்.
திறமையை வெளிப்படுத்த முடியாது
எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காது.
நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும்.
சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த தொழில், வேலை கிடைக்காது.
பரம்பரையாக அடிமையாக கஷ்டமான வேலையில் சொற்பமான பணம் சம்பாதிப்பார்கள்.
நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்..
சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை தொழில் செய்ய நேரும். வம்பு வழக்கு செய்யாத குற்றத்திற்கு தண்டனை. கடனால், நோயால், ஜாமீன் பிரச்சனையால் நிம்மதி இழக்கிறார்கள்
ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்.
சிலருக்கு எலும்பு மூட்டு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம்.
பய உணர்வால் மன உளைச்சல் ஏற்படும்.
யாரையும் மதிக்காமல் சுதந்திரமாக செயல்பட கூடியவராக இருப்பார்.
ஒரு பிரச்சனை தீருவதற்குள் அடுத்த பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கும்.
பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல்,
கணவன், மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சனைகள், சந்தேகங்கள். உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். உணவை பார்த்தால் வெறுப்பு.
சாப்பிட பிடிக்காமல் போவது.
எல்லோரிடமும் எரிந்து விழுவது.
கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. விதிக்கு கட்டுப்பட்டு கிரகங்கள் செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை. உரிய பரிகார வழிபாட்டு முறையை கடைபிடிக்க இன்னல்கள் குறையும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.
சனிக்கிழமை அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. உண்ணாவிரதம், மவுன விரதம் இருப்பது மேலும் சிறப்பு.
செல்: 98652 20406






