என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே!... அத்தியாயம்- 12
    X

    உசுரே நீ தானே!... அத்தியாயம்- 12

    • ரங்கராஜன் மாப்பிள்ளை டேவிட் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தார்.
    • “போங்க… போயி எல்லாரும் ஏதாவது சாப்பிட்டு வாங்க.. திவ்யாவை பத்திரமா மீட்டு விடலாம்… பயப்படாதீங்க..”

    எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்ஸ்பெக்டரின் முகம் மட்டும் வினாடிக்கு வினாடி மாறியது. டேவிட் உட்பட அனைவரும் பதட்டத்துடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் அவரையே பார்த்தபடி நின்றனர். போனை பேசிய பின்பு, அதை வைத்து, இவர்களை பார்த்தார் இன்ஸ்பெக்டர் அழகர்.

    "என்ன சார் சொல்றான்.. அந்த மனோகர்.. அவன்தான் சார்.. என் திவ்யாவை மயக்கமாகி கடத்திட்டு போயிட்டான் சார்!" குரல் உடைந்து டேவிட் பேசினான்.

    "பேசுனது கிட்நாபர்தான்.. ஆனால், நீங்க சொல்ற மனோகர் இல்ல.."

    அனைவரும் 'ஷாக்காகி' பார்த்தனர். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.

    "அவன் தன் பேரு நல்லவன்னு சொல்றான்.. உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாதுன்னு உறுதியா சொல்றான்… வீணா என்ன தேடாதீங்க.. போலீஸ் என்கிட்ட நெருங்கினா, திவ்யா உயிருக்கு நான் பொறுப்பு இல்ல.. நான் திவ்யாவை பணத்துக்காக கடத்தல… எதுக்காக கடத்துனேன்னு நீங்களே கண்டுபுடிங்க… அதுவரைக்கும் இந்த விளையாட்டு தொடரும்னு போனை வச்சுட்டான்.."

    அவர் சொல்லி முடிக்கவும் அனைவரிடமும் குழப்பம். 'எதுக்கு கடத்தினான்… பணம் நோக்கம் இல்லன்னா வேற என்ன காரணமாயிருக்கும்…? யோசித்தபோது, இன்ஸ்பெக்டர் சொன்னார்.

    "நமக்கு எல்லாம் இப்ப அவன்தான் வில்லன். ஆனா, பேரு வச்சுருக்கான் பாரு நல்லவன்னு"

    இடைமறித்த செந்தில், "சார்.. அவன் நிஜப் பேரு வேறு ஏதாவது இருக்கும்.. சும்மா நம்மள ஏமாத்த அந்த பேர சொல்றான்.."

    குறுக்கிட்ட டேவிட்..

    "சார்… இப்போ பேர் முக்கியமில்ல. அந்த நல்லவன்கிறது யாரு..? அந்த கூலிங்கிளாஸ் டிரைவர் மனோகர் மூலமா எதுக்கு திவ்யாவை கடத்துனான்.. ஐயோ.. ஒண்ணுமே புரியமாட்டேங்குதே..!"

    கிட்டதட்ட டேவிட் கத்தினான்.

    "ஏன் இப்படி நடக்குது… யாருக்கும் கெடுதல் பண்ணலியே… என் பொண்ணுக்கு எதுவும் ஆயிடக் கூடாது.. ஈஸ்வரா.. " என தளர்ந்து போய் பெஞ்சில் அமர்ந்தாள், திவ்யாவின் அம்மா.

    "ஏன் சம்மந்தி… நமக்கோ… இல்ல தனிப்பட்ட முறையில திவ்யாவுக்கோ வேண்டாதவங்க யாரோதான் நம்மள தவிக்க விடணும்னு இப்படி பண்ணிருப்பாங்கன்னு தோணுது.."

    தேவசகாயம், திவ்யாவின் அப்பா ரங்கராஜிடம் சொல்லவும் "அப்படி யாருங்க நமக்கு எதிரி?" திருப்பி கேட்டார் அவர்,

    "சொன்னா தப்பா நினைக்க கூடாது.."

    "பரவாயில்லை சொல்லுங்க…" ரங்கராஜன் கேட்கவும், மேரி குறுக்கிட்டால்.

    "அங்கிள்… எங்க அப்பா யார சொல்லுவாருன்னு உங்களுக்கு புரியலை.."

    "புரியலேம்மா.. நீ சொல்லு.." ரங்கராஜன் கேட்டார்.


    "வேற யாரு உங்க பையன் பெருமாள்தான் இத பண்ணியிருக்கணும். ஆரம்பத்துல இருந்தே திவ்யா - டேவிட் கல்யாணத்துல இஷ்டமில்லாம இருந்தாரு. அன்னிக்கு சென்னையில போலீஸ் ஸ்டேஷன்ல நம்ம எல்லார் மேலயும் வன்மமா பேசிட்டு போனாரு.. அவருதான் கூலிப்படைங்க மாதிரி ஆளுங்கள வச்சு பண்ணி இருக்கணும்…"

    "இல்ல.. இருக்கவே இருக்காது.. இருக்கவும் முடியாது.." உறுதியாய் மறுத்தார் ரங்கராஜன்.

    "அங்கிள்.. உங்க பையன்னு கண்மூடித்தனமான சப்போர்ட் பண்ணாதீங்க… திவ்யாவுக்கும், டேவிட்டுக்கும் வேலை போனதுக்கு காரணமே அவராத்தான் இருக்கும்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்.."

    செந்தில் காட்டமாய் சொன்னான்,

    "ஆமாம் அங்கிள்… இப்போ சொந்தமா ஒரு தொழில் பண்ணலாம்னு முதல் கச்சேரி 'புக்' ஆகி கிளம்பினா இப்படி ஆயிடுச்சு... எனக்கும் பெருமாள் மேலதான் டவுட்.."

    நெல்சனும் ஆமோதித்தான்.

    "வரும்போது திருவிழா காரங்களுக்கு போன் பண்ணி கச்சேரி கேன்சல்னு சொல்றப்போ எனக்கு அழுகையே வந்திடுச்சு அங்கிள்… இதுக்கெல்லாம் காரணம் பெருமாள்தான்… பேசாம அவரு மேல டவுட்டுன்னு ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அங்கிள்..!"

    தியாகு கூறவும், டேவிட் அவனை தோளில் தட்டி, "டேய்.. நீங்க எல்லாம் என் பிரண்ட்ஸ், அதான் உணர்ச்சிவசப்பட்டு பேசுறீங்க.. ஆனா, எனக்கு பெருமாள் மேல சந்தேகம் இல்லடா..!"

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    "என்னடா.. இப்படி மடையன் மாதிரி பேசுற.. பொண்டாட்டிய அர்த்த ராத்திரியில பறிகொடுத்துட்டு பேசுறவன் பேச்சா இது!"

    டேவிட்டின் அப்பா தேவசகாயம் உடைந்த குரலில் கோபமாய் பேசினார்.

    "கோபப்படாதிங்கப்பா.. இந்த நேரத்துலதான் நிதானமா யோசிக்கணும். பெருமாள் முரடன்தான். ஆனா, ஆள் வச்சு தங்கச்சிய கடத்துற அளவுக்கு மோசமானவன் இல்ல…"

    ரங்கராஜன் மாப்பிள்ளை டேவிட் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தார்.

    "கொஞ்சம் வேற மாதிரி யோசிங்க.. நிச்சயமா பெருமாள் சம்மந்தப்பட்டிருந்தா, அந்த மனோகர் என்னை அடிச்சுபோட்டுத்தான் திவ்யாவை கடத்தியிருப்பான். ஆனா, ஒரு கிரிமினல் கேம் ஆடி, அந்த மனோகர் இப்படி பண்ணியிருக்கண்ணா… இதுல வேற யாரோ பின்னாடி இருக்கணும்.."

    "போடா… நீ என்ன சொன்னாலும் நாங்க நம்பத் தயாராக இல்லை. மொதல்ல பெருமாள் மேல ஒரு கம்ப்ளையின்ட் கொடுப்போம். போலீஸ் விசாரிச்சு முடிவு எடுக்கட்டும்.. பெருமாள் நல்லவனா.. இல்லையான்னு.."

    டேவிட் பதில் சொல்லும் முன், அவனைப் பற்றி கம்ப்ளையின்ட் எழுத ஆரம்பித்தனர்.

    "அட.. கத செம டுவிஸ்ட் அடிக்குதே.. பெருமாள் மேலயே கம்ப்ளையின்ட்டா.. சரி.. அவரையும் விசாரிச்சுடுவோம். யோவ் பெருமாள் சாருக்கு போனை போடுய்யா…"

    கம்ப்ளையின்டை வாங்கி படித்த அழகர், கான்ஸ்டபிளுக்கு உத்தரவு போட்டார்.

    அனைவரும் கான்ஸ்டபிள் பெருமாளிடம் பேச போவதை, கூர்ந்து கவனிக்க, டயல் செய்து போனை சிறிது நேரம் காதில் வைக்க, கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் இப்படி சொன்னார்.

    "சார்.. போன் சுவிட்ச் ஆப்னு வருது சார்!"

    அதிர்ச்சியடைந்த ரங்கராஜன், "அவன் போன் எப்பவும் சுவிட்ச் ஆப் ஆகாதே..!" என சொல்ல..

    "இருங்க சார்.. அவரு போன் சுவிட்ச் ஆப் ஆனா என்ன… அவரிடம் பேச எங்களுக்கு நிறைய ரூட்டுகள் இருக்கு சார்!"

    அழகர் சற்று எகத்தாளமாய் கூறினார்.

    கூட்டுரோட்டை விலகி மண் ரோட்டில் ஓடிய அந்த 'டிரக்', ஆள் அரவமற்ற அந்த காட்டுப்பகுதியில் நின்றது.

    இன்னும் மயக்க நிலையில்தான் இருந்தாள் திவ்யா. அவளையே, உற்றுப் பார்த்தான் மனோகர். சீரான மூச்சில் ஏறி இறங்கிய அவளது இளமை வனப்புகளும், ஒரு தெய்வச்சிலை போல இருந்த அவளது முக அழகும், அவள் காதில் போட்டிருந்த அந்த ஜிமிக்கி லேசாக ஆடியபடி அவனை 'தொடு.. தொடு...' என அழைத்தன.

    மெதுவாக திவ்யாவை தொட கையை கொண்டு சென்றான். அப்போது செல்போன் அலறி, பதறி கைகளை பின்னுக்கு எடுத்து, போனை எடுத்து பார்க்க 'தலைவர்' என ஸ்கிரீனில் மின்னியது. ஆன் செய்து, காதில் போனை வைத்து பவ்யமாய் 'தலைவரே!' என்றான்.

    "நல்லவன் பேசுறன்… வந்துட்டியா?" குரல் கேட்டது. "வந்துட்டேன் தலைவரே.. நீங்க நிக்க சொன்ன இடத்துலதான் நிக்கிறேன்…"

    "அங்கயே நில்லு… இப்ப ஒரு ஊதா கலர் இன்னோவா வரும். அதுல ரெண்டு பேரு இருப்பாங்க… அவங்களோட சேர்ந்து.. அவளை வண்டியில அள்ளிப்போட்டு.. நீயும் அதே வண்டியில வா.."

    "சரிங்க தலைவரே... அப்போ ட்ரக்?"

    "அது அங்கையே நிக்கட்டும்.. அத வச்சு எல்லாம் எவனும், எதுவும் புடுங்க முடியாது!"

    "சரிங்க தலைவரே… இன்னொவா வந்ததும்… கிளம்பி வந்துடுறேன்.."

    "சரி.. அப்புறம் முக்கியமான விஷயம்… அவளை இன்னொவாக்கு ஷிப்ட் பண்றப்ப மட்டும்தான் அவமேல உங்க கையி படனும். அதுதவிர, அவ மேல கையி பட்டுச்சு… தொட்டவன் கை துண்டிக்கப்படும்!"

    "சே.. சே.. அப்படியெல்லாம் தொட மாட்டோம் தலைவேரே…"

    "அதுதான் நல்லது… பேருதான் நல்லவன்… ஆனா, ரொம்ப கெட்டவன் தெரியும்ல?"

    "தெரியும்..!"

    எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட, மனோகர் தலைப்பாகை, கூலிங் கிளாஸை கழட்டினான். திருநீறு, குங்குமத்தை நெற்றியில் இருந்து அழித்தான். திவ்யாவை திரும்பிக்கூட பார்க்காமல் ஊதா நிற இன்னோவாவிற்காக காத்திருந்தான்.

    போலீஸ் ஸ்டேஷன்.

    "போங்க… போயி எல்லாரும் ஏதாவது சாப்பிட்டு வாங்க.. திவ்யாவை பத்திரமா மீட்டு விடலாம்… பயப்படாதீங்க.."

    இன்ஸ்பெக்டர் அழகர் அவர்களிடம் சொல்லவும்,

    "எப்படி சார் சாப்பிடறது… அவ எங்க இருக்கா.. என்ன நிலையில இருக்கானு தெரியாம.. சாப்பாடு எப்படி தொண்டையில இறங்கும்..?"

    திவ்யா அம்மா ராஜேஸ்வரி அழ…

    "சார்.. அவங்கள சமாதானப்படுத்துங்க.." ரங்கராஜனிடம் கூறிய இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிளை பார்த்து " எல்லாருக்கும் டீயாவது சொல்லுய்யா.." என்று சொல்லிவிட்டு தளர்வாய் சேரில் அமர்ந்தார். டேவிட்டை பார்த்து ,

    "என்ன சார்… பெருமாள் போன் சுவிட்ச் ஆப். எங்க இருக்கார்னு கண்டுபிடிக்க முடியல. அவனோட சுத்துற ரவுடிங்க யாருக்கும் அவரு எங்கன்னு தெரியல. எல்லோரும் சந்தேகப்படுற பெருமாள் எங்க இருக்கார்னு தெரிஞ்சாதான்… அடுத்த 'மூவ்' என்னன்னு நான் முடிவு எடுக்க முடியும்.."

    அவர் சொல்லி முடிக்கவும், போன் அடிக்கவும் சரியாய் இருந்தது. எடுத்து பேசின கான்ஸ்டபிள், பதட்டமாய் ரிசீவரை இன்ஸ்பெக்டர் அழகிரிடம் நீட்ட, அவர் பிடுங்காத குறையாய், போனை வாங்கி காதில் வைத்தார். "அப்படியா… குட்.. சரி.. இப்பவே கிளம்பி வரோம்.. நீங்க ஸ்பாட்டுக்கு போங்க.. நாங்க வந்துடுறோம்.. என போனை வைத்தார்.

    "என்ன ஆச்சு சார்..?" டேவிட் கேட்டான்.

    "மேலூர் கூட்டுரோட்ல இருந்து பிரிஞ்சு போற மண்ரோட்டுல டிரக் போன தடயம் இருந்துருக்கு... அதை லோக்கல் போலீஸ் பாலோ பண்ணி கண்டு புடுச்சுட்டாங்களாம். அந்த மண்ரோடு பிரிஞ்சு போன இடத்துல இருந்து 23 கிலோ மீட்டர் தள்ளிதான் டிரக் நிக்குதாம்.."

    "சார்.. திவ்யாவை கண்டுபுடுச்சுட்டாங்களா.."

    கிட்டத்தட்ட ஒருமித்த குரலில், எல்லோரும் கேட்க, இன்ஸ்பெக்டர் அழகர், அவர்களை ஒருவித பரிதாப பார்வை பார்த்தார்.

    "ஐயோ.. என்ன சார் எதுவும் சொல்லாம அப்படி பாக்குறீங்க. டிரக்கை கண்டுபிடுச்சா, திவ்யாவும் கிடைச்சுருப்பாளே சார்.. ஏன் சார் எதுவும் சொல்லாம அப்படி பார்க்குறீங்க.."

    திவ்யாவின் அப்பா ரங்கராஜன் மூச்சு வாங்க பேச பேச, இன்ஸ்பெக்டர் அவர் பேசுவதையே மவுனமாய் பார்த்தவர், டேவிட் பக்கம் திரும்பி, "டேவிட்… இப்படி வாங்க!"

    அவர் டேவிட்டை மட்டும் தனியே அழைத்துப்போக… எல்லோர் முகத்திலும் பயம் அப்பியது… (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

    Next Story
    ×