என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சமத்துவ சங்கம் கண்ட வைகுண்டர்
    X

    சமத்துவ சங்கம் கண்ட வைகுண்டர்

    • சமத்துவத்தை நிலை நாட்டிட முயற்சி செய்தது.
    • சமூக நீதியை நிலைநாட்டப் பணியாற்றியது.

    19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வைகுண்ட சுவாமிகள் தென் திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஓர் அமைதியான சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார். அவரது இயக்கம் எதேச்சதிகார உயர்சாதி வர்க்கத்தினை இடித்துரைத்தது. காலத்திற்கு ஒவ்வாத மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி கிடந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினரை நன்னெறிப் பாதையில் சிந்தித்துச் செயல்பட தூண்டியது. பிறப்பின் வழி நின்று ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி, சமதர்ம சமுதாயத்திற்கு ஒரு பெரிய தடைக்கல்லாக நின்ற சாதிப் பேயைக் கண்டனம் செய்தது. நாடி வந்த மக்கள் எல்லோரிடமும், சாதி சமயப் பேதம் காட்டாது, சமத்துவத்தை நிலை நாட்டிட முயற்சி செய்தது. சமுதாயத்தை பல்வேறு சாதிகளாக பிரித்து ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியை கடுமையாக தாக்கி, சாதிப் பிரிவினைக்குக் காரணமாக இருந்தவர்களை 'நீசன்' எனப் பழித்துரைத்தது.' தாழ்த்தப்பட்டுக் கிடந்த சமூகத்தவர்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை காத்திட தன்மானத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டியது. சமூக நீதியை நிலைநாட்டப் பணியாற்றியது. சுவாமிகளின் சீர்திருத்த இயக்கம் தனது குறிக்கோளை அடைந்திடுவதற்காக பல்வேறு வழிகளில் செயலாற்றியது.

    சமுதாயம் பல பிரிவுகளாக பிளவு பட்டுக் கிடந்த வேளையில், எல்லாப் பிரிவு மக்களும் 'சமத்துவம்' என்ற போதிமரத்தின் கீழ் ஒன்றுபட்டு இளைப்பாறிடச் சங்கம் ஒன்றினை வைகுண்ட சுவாமிகள் ஏற்படுத்தினார். சமத்துவமே அதன் உயிர் மூச்சு எனத் திகழ்ந்ததால் சமத்துவச் சங்கம் எனப் பெயர் பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். தேர்ந்தெடுத்த தவசீலர்களுள் மாமணிகளாக சுவாமிகள் ஐவரை தேர்ந்தெடுத்து, பஞ்ச பாண்டவர்களை நினைவு கூறும் விதமாக அவர்கள் பெயரில் அழைக்கலானார்.

    "பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தன் வழியில்

    தெரிந்துந்தன் மக்களிலே சீசரெனத் தெரிந்து

    கூர்ந்து என்கைக்குள் கொள்ளுகிறேன் வேலையது"

    என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

    மயிலாடியை சார்ந்த சிவனாண்டி என்ற தர்ம சீடரும், கைலாசபுரத்தைச் சார்ந்த பண்டாரம் என்ற வீமன் சீடரும், பிள்ளையார் குடியிருப்பைச் சார்ந்த அர்ச்சுனன் சீடரும், குளச்சலை சார்ந்த சுப்பையா என்ற நகுலன் சீடரும், தாமரைக் குளத்தை சார்ந்த அரிகோபாலன் என்ற சகாதேவன் சீடரும், வைகுண்ட சுவாமிகளின் தலைமைச் சீடர்களாவர். ஆடவர்கள் மட்டுமின்றி, சமத்துவ சங்கத்தில் மகளிரும் பங்கு கொண்டனர். சுவாமிகள், தன் சீடர்களுக்கு தக்க பயிற்சியளித்து சமத்துவ நெறியினை கிராமம்தோறும் சென்று பரப்பிடுமாறு பணித்தார்.

    விருப்பமில்லா மாந்தர்களிடம் தனது கொள்கைகளை கட்டாயப்படுத்தி புகுத்திட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். 'உலகமே அழிந்திடினும் சத்தியம் தவறக்கூடாது' என கட்டளையிட்டு உண்மை ஊழியர்களாகவும் சமுதாயத்தின் நலம் பேணுபவர்களாகவும் பணிபுரிந்திடுமாறு செய்தார். சங்கத்தின் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, சமத்துவ நெறிகளையும் தர்மநெறி முறைகளையும் மக்களிடையே சுவாமிகளும் மக்கள் யாவரும் ஏற்ற தாழ்வுகள் பாராட்டாமல் ஒன்றாய் வாழ்ந்திடவும், அனைத்து மக்களும் போதிக்கலாயினர். சமவுரிமை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டியும் ஏராளமான கிராமங்களுக்கு வருகைபுரிந்து, சங்கத்தின் நெறிகளை பரப்பினார். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கிடையே இருந்த பிணக்குகளை மறந்து வைகுண்டரின் அறிவுரைகளை செவிமடுத்து ஒன்றாய் வாழ்ந்திடத் தொடங்கினர்.

    சமத்துவக் கொள்கையினை பேச்சளவில் மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சுவாமிகள் முனைந்து செயலாற்றினார். தீண்டாமை நோயின் பிடியில் சமுதாயம் சிக்கித் தவித்த காலச் சூழ்நிலையில், 'எல்லோரும் ஓர் குலம்' என்ற உயரிய கண்ணோட்டத்துடன் சமபந்தி விருந்து நடத்தினார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினருடன் சேர்ந்து உணவு உட்கொள்வதென்பது அக்காலத்தில் நடைமுறையில் காணற்கரிய செயலாகும். குறிப்பாக ஓங்கு சாதியினர் தங்களுக்குள்ளேயும் கூட ஒன்றாக அமர்ந்து உணவுண்ணும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர். பிஷப் மேற்றீர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், "ஒரு வீட்டிலுள்ள ஆடவரோ அல்லது பெண்டிரோ வேறு வீட்டார் சமைத்த உணவினைத் தொடக்கூட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் ஒரே வரிசையில் உட்கார்ந்து உணவு உண்ணவும் மாட்டார்கள்" எனக் கூறுகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் தான் வைகுண்ட சுவாமிகள் எல்லாச் சாதி மக்களும் தங்களிடையே நிலவிய ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்படியான ஒரு நிலையை உருவாக்கினார். பதிணெண் சாதி மக்களும் தத்தம் வீடுகளில் இருந்து உணவுப் பொருள்களை எடுத்துச்சென்று, முத்திரி கிணற்று நீரினை கொணர்ந்து, சுவாமிகள் முன்னிலையில் சமைத்து, அவருடன் அமர்ந்து சமபந்தி விருந்துண்டனர். சுவாமிகள் நடத்திய விருந்து இதயத்தின் அடித்தளத்தில் இருந்தெழுந்த ஒற்றுமையுணர்வும், சமதர்ம உணர்வும் ஒன்றி நடந்தேறியதாகும். விளம்பரம் கருதியோ, குறிப்பிட்ட சில நாட்களில் அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்திற்காகவோ நடந்தது அன்று 'எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஒரு நிறை' என்னும் உயரிய குறிக்கோளுடன் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வந்தனவாகும். இன்றும் அன்புக்குடி மக்களின் பதிகள் தோறும் காணக்கூடிய அன்றாட நிகழ்ச்சியாகவும் இது இருக்கின்றது.

    வைகுண்ட சுவாமிகள் தன் சீடர்களைப் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளில் உணவருந்துமாறு பணித்தார். சமபந்தி விருந்தோடு தொடர்புடைய செவிவழிச் செய்தி ஒன்று குமரி மாவட்ட மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. ஒரு சமயம் வைகுண்ட சுவாமிகள் தன்னுடைய சீடர்களில் இருவரை பிச்சம்மாள் என்ற சலவைத் தொழிலாளியின் வீட்டில் உணவருந்தி வருமாறு அனுப்பினார் எனவும், அங்குச்சென்ற இருவரும் விருப்பமில்லாதபடியால் உணவருந்தாது திரும்பி விடவே, அதனை அறிந்த சுவாமிகள் இருவரையும் அழைத்துக் கடுமையாக கண்டித்து, திரும்பிச்சென்று உணவருந்தி வருமாறு பணித்தார் எனவும், சீடர்கள் பிச்சம்மாள் இட்ட உணவினை அகமகிழ்ந்து உண்டு திரும்பினர் எனவும் மக்களிடையே ஒரு செய்தி அறியக்கிடக்கின்றது.

    சாதி ஆதிக்கம் செலுத்திய சமுதாயத்தில் நடை உடை பாவனைகளில் கூட ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது. அப்பாவி அவர்ணர்கள் இடுப்புக்கு மேலோ முட்டுக்குக் கீழோ ஆடை அணிய உரிமையின்றி அரை நிர்வாணப் பக்கிரிகளாக நடமாடினர். தட்டிக்கேட்க நாதியின்றி, ரத்தக்கண்ணீர் வடித்த ஒடுக்கப்பட்ட பிரிவினரின் இருள் மாய்க்க, வந்துதித்த அருளாளர் அய்யாவின் சீர்திருத்தப்பணிகளில் மணி முடியாகத் திகழ்வதும், புரட்சிமயமானதும், புதுமையானதுமாக விளங்குவது அவர்தம் தலைப்பாகைப் புரட்சியாகும்.

    ஓங்கு சாதியினரிடம் ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்த அச்சத்தினைத் தவிர்த்து, நலிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மக்களும் சுதந்திரமான வாழ்வினை கொண்டிட வேண்டும் என்பதில் சுவாமிகள் உறுதி கொண்டிருந்தார். எனவே, ஓங்கு சாதியாரும், அரசாங்கமும் ஆடை அணிகலன்கள் அணிவதில் ஒடுக்கப்பட்டோர் மீது திணித்திருந்த அவமானச் செயல் முறைகளை நீக்கிட முனைந்து நின்றார். பண்டுதொட்டே நாடார் சமூகத்தவர்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. ஒரு நாடார் சமூக இளைஞன் தனது பதினாறாவது அகவையில் தலையில் தலைப்பாகை அணிந்து, பாதுகாப்பிற்காகப் பிச்சுவா கத்தியையும் கொண்டு விளங்குவான். இப்பழக்கத்தினை 'உறுமால் கட்டு' என்றழைப்பர். இவ்வுறுமால் கட்டு நிகழ்ச்சியை சடங்கு சம்பிரதாயங்களுடன் இச்சமூகத்தவர்கள் நடத்தி வந்தனர். மேல்சாதியாரின் ஆதிக்கப்பிடியில் இவ்வுறுமால் கட்டுப்பழக்கம் தடைப்படுத்திடப்பட்டது. சுமை தூக்கிச் செல்வதற்குக்கூட தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படவில்லை.

    பனையோலையையும், வைக்கோலையும் தலைப்பாகைக்குப் பதிலாக 'சும்மாடு' என்ற பெயரில் பயன்படுத்திடும் படியான அவலநிலைக்கு ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தள்ளப்பட்டிருந்தனர். இந்த அவலமிக்க சூழ்நிலையில் தான் வைகுண்ட சுவாமிகள் ஓங்கு சாதியாரின் அடக்கு முறையிலிருந்து எளியப் பிரிவினரை விடுவிக்கும் விதமாக அவர்களின் அச்சம் அகற்ற முயற்சித்தார். அவர்களை தட்டி எழுப்பி தன்மான உணர்வை ஊட்டும் வகையில் பண்டைய பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைத்தார்.

    "கூலிக்காரர் மக்களில்லை

    கோடி வரிசை பெற்ற மக்கள்"

    என்று பழம் பெருமையுரைத்து துணிச்சலும், வீரமும் ஊட்டினார். 'நெய் நிதிய சான்றோர்கள்,' 'தெய்வச் சான்றோர்கள்,' 'திசை வென்றச் சான்றோர்கள்' என்று, அரசாண்ட மரபுரைத்து ஆண்மை பெறச் செய்தார்.

    "குகையாளப் பிறந்தவனே

    என் குழந்தாய் எழுந்திருடா

    அதிகமுள்ள நீசனும் தான்

    மற்பிடித்து அடிக்கிறானே

    படையெடுக்க வா மகனே

    பாருலகம் சுட்டழிக்க

    வரிசை பெற்ற நீ மகனே

    மானமறுக்கம் பொறுக்கலையோ"

    என்று ஆளும் மன்னனுக்கு எதிராக வெகுண்டெழுந்து பகையழிக்க போர்க்கோலம் கொள்ளுமாறு தைரியப்படுத்தினார்.

    "எவன் எவனுக்கும் பதறி

    இனி மலைய வேண்டாமே"

    என சுவாமிகள் போர்ப்பரணி பாடியது, அச்சமிலா சமுதாயம் காண அவர் விரும்பி யதாலாகும். மேலும் தங்கள் பூமியைக்கூட "அச்சமிலாப் பூமி" என்று வர்ணித்து பயம் அகற்றிட முனைந்து செயல்பட்டார். தன்னை காண வந்த அன்பர்களிடம் தலைப்பாகை அணிந்து வருமாறு பணித்தார். இடுப்புக்கு மேல் உடை உடுத்தவே உரிமை மறுக்கப்பட்ட காலச்சூழலில்-சவர்ணனை காணும் போதெல்லாம் ஆடையினை இறக்கி மரியாதை செலுத்திய வேளையில் திருவிதாங்கூர் பிராமணிய கோவில்களில் வழிபடுவோர்கள் மேலாடை அகற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு வழிபடும் வழக்கம் இருந்த நிலையில், தலையில் பாகைக் கட்டச் செய்தது ஒரு புரட்சியேயாகும். தலைப்பாகை மூலம் தன்மானத்தை நிலை நாட்டினார். அடிப்படை உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட உரக்கவே ஓங்காரம் இசைத்தார். தலைப்பாகையின் மூலமாக சாதிப்பேய்க்கு சமாதிகட்டி 'எல்லோரும் ஓர் நிறை' என்பதை உணர்த்திட ஒப்பற்ற புரட்சியினை நடத்தி முடித்தார். அடுத்து தூய்மை வாழ்க்கைக்கு துவையல் பந்தி கண்டார். அதனை காண்போம் வரும் தொடரில்.

    Next Story
    ×