என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆயில்யம் நட்சத்திர பலன்கள்
    X

    ஆயில்யம் நட்சத்திர பலன்கள்

    • ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்.
    • ஜோதிடத்தில் படமெடுத்த நாகத்தை குறிக்கும் நட்சத்திரம் ஆயில்யம்.

    27 நட்சத்திரங்களில் ஆயில்யம் ஒன்பதாவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் நீச்சம் அடையும் கிரகம் செவ்வாய். இதன் உருவம் அம்மி பாம்பு என்றும் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் தோற்றம் பாம்பு போல் காணப்படுவதால் சர்ப்ப நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. ஆயில்யம் என்ற வார்த்தையின் அர்த்தம் தழுவிக் கொள்ளுதல் என்பதாகும். இதன் தமிழ் பெயர் கட்செவி. அரவம். பெருமாள் பள்ளி கொண்டு இருக்கும் ஆதிசேஷ வடிவமாகும்.

    ஜோதிடத்தில் படமெடுத்த நாகத்தை குறிக்கும் நட்சத்திரம் ஆயில்யம். இதில் நீச்சமடையும் கிரகம் செவ்வாய் என்பதால் எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அவர்களை வீழ்த்த ஏற்ற நட்சத்திரம் ஆயில்யம் ஆகும்.

    ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்.

    தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை பிறர் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்கமாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகவுரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள் பழைய சாஸ்த்திரங்கள், பழைய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறினால் பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கவுரவத்தைக் காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும்அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாவம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

    இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக்காட்டுவார்கள். தேசப்பற்றும் நிறைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தயாராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள்.

    கல்வி

    இவர்கள் சராசரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கல்வியால் பெறும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு அதிகம்.

    கணிதம் சார்ந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் வங்கித் துறை, கணக்காளர், இன்சூரன்ஸ், எழுத்தாளர், பத்திரிகையாளர், யோகா ஆசிரியர் போன்ற துறைகளில் சிறப்பான பலனை பெறுவார்கள்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவார்கள். என்பதால் சித்த மருத்துவம், மூலிகை, பாரம்பரிய மருத்துவத்தில் சிறந்து விளங்குவதாய் உள்ளது. மருந்து தயாரிப்பு, அவசர கால சேவை, பங்கு வர்த்தகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

    தொழில்

    அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும். சட்டத் தொழில் செய்பவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், ஆன்மீகத் தலைவர்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற அரசு உத்தியோகங்களை அடையலாம். ஜோதிடம், ஆன்மீகம் மாந்திரிகம் போன்றவற்றில் ஈடுபாடு மிக உண்டு.

    கதை, கவிதை, எழுத்து, தகவல் தொழில் நுட்பம், சித்த மருத்துவம், கால்நடை மருத்துவம் இவை அனைத்தும் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும். இவர்கள் பேச்சாளர்கள், சிறந்த நுண்ணிய சாஸ்த்திர ஆராய்ச்சியாளர்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.

    பலர் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும், எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்கு அமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள் போன்ற தொழில்களும் சிறப்புத் தரும். அரசியல் ஈடுபாடும் ஏற்படும். சாணக்கிய தனம் நிறைந்தவர்கள்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    சிறந்த உழைப்பாளர்கள். தான் நினைத்த உச்சத்தை உழைப்பால் அடைவார்கள். தங்களது கலாசாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவதால் இவர்களுக்கு காதல் விவகாரங்கள் வெற்றியைத் தருவது இல்லை. நல்ல வாழ்க்கைத் துணை இயற்கையாகவே அமைந்து விடும். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமையில் வாழ்ந்தாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். நல்ல பணம் சம்பாதிக்கும் திறமைசாலிகள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்பாவிட்டாலும் தன்னை சார்ந்தவர்களுக்கு வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்வார்கள்.பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள்

    தசா புக்தி பலன்கள்

    புதன் தசா: இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். இதன் தசா வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன் தசா காலங்களை அறியலாம். கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். அறிவாளிகளாகவும் ஞானம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். தன்னுடைய முன்னேற்றத்திற்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தன் வலிமையை அறிந்து செயல்படுவார்கள். புதன் பலமிழந்திருந்தால் சிறு வயதில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி




    கேது தசா: தன தாரையின் நட்சத்திரமாகும். இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். புதன் தசாவை முழுமையாக கடந்தாலும் கல்லூரி வாழ்க்கையையில் கேது தசாவை சந்திப்பார்கள். சிலர் சிறு வயதிலேயே சம்பாதிக்க துவங்குவார்கள். அல்லது தாய், தந்தை நன்றாக சம்பாதிப்பார்கள். நல்ல வசதியான ஆடம்பர வாழ்க்கை உண்டு. ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள். பெற்றோர்கள், பெரியோர்களை மதித்து நடப்பார்கள். சிலர் இந்த காலகட்டங்களில் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள்.

    சுக்ர தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து திரையின் தசாவாகும். இதன் கால அளவு 20. எந்த வயதினராக இருந்தாலும் காதல் தொல்லை உண்டு. சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

    பழமையான விஷயங்களை ஒதுக்குவார்கள். பகட்டுக்காக ஆடம்பர செலவு செய்வார்கள். அதனால் ஏமாற்றத்தை சந்திப்பார்கள் அல்லது காதல் சோகத்தில் முழ்குவார்கள். பெற்றோரை பிரிந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். பலருக்கு இந்த காலகட்டத்தில் மறு விவாகம் நடக்கும்.

    சூரிய தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேம தாரையின் தசையாகும். சுக்ர தசாவில் சம்பாதிக்க தவறியவர்கள் இந்த காலத்தில் வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள். வீடு, வாகனம் என சுப விரயங்கள் மிகுதியாகும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

    மேன்மையான பலன்களை பெற முடியும். சில நேரத்தில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம் வெளுத்ததெல்லாம் பால் என நம்பக்கூடியவர்கள்.

    சந்திர தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 10 ஆண்டுகள். நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.

    கையில் உள்ள பொறுப்பை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு, எந்த ஒரு விஷயத்திலும் ஒதுங்கி இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

    செவ்வாய் தசா: இது சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 7. இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் 60 வயதை கடந்தவராக இருந்தாலும் உத்தியோக காலம் நீட்டிப்படையும். சிலர் ஓய்வு காலத்திற்கு பிறகும் சம்பாதிப்பார்கள். சிலருக்கு இந்த காலகட்டத்தில் சொத்து மற்றும் வாகன வசதி உண்டாகும். வாலிப வயதில் வாழாத வாழ்க்கையை வயோதிகத்தில் அனுபவிப்பார்கள்.

    ராகு தசா:ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு 7-வதாக வரக்கூடியது. ராகு தசா. இது வதை தாரையின் தசாவாகும்.இதன் தசா ஆண்டு 18. சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் நல்ல சொகுசு வாழ்க்கை உண்டு. நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    ஆயில்யம் நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய நற்காரியங்கள்

    நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

    ஆயில்யம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    சத்ரு உபாதை கடன் தொல்லைகளால் துன்பப்படுபவர்கள் தொடர்ந்து 6 மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் ராமேஸ்வரம் சென்று சேது சமுத்திரத்தில் நீராடி ராமேஸ்வரரை வழிபட சத்ரு பாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கொலை பாவம் செய்தவர்கள் இந்த நட்சத்திர நாளில் சேது சமுத்திரத்தில் நீராடி ராமேஸ்வரரை மனதாரப் பிராத்தித்தால் பிரம்மஹத்தி தோஷம் போன்ற கொடூரமான பாவத்திலிருந்து மீள முடியும். நவகிரக சாந்தி செய்ய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டினம் சென்று கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகங்களை வழிபட நவகிரகங்களால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும்.

    திருமணத் தடையை சந்திக்கும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று நவகிரக சாந்தி செய்தால் திருமண தடை அகலும். ஜாதகத்தில் நாக தோஷம் சர்ப தோஷம் உள்ளவர்கள் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று வரலாம். சந்திரனுடைய வீட்டில் அமர்ந்த நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் துர்கையை வழிபட மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கல்வியைக் குறிக்கும் கிரகம் புதன். கல்வியில் தடையை ஏற்படுத்தும் கிரகம் செவ்வாய். ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் நீச்சம் அடைவதால் கல்வியில் தடை ஏற்பட்டு மீண்டும் கல்வியை தொடர விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் துவங்கலாம்.

    நட்சத்திர பட்சி:கிச்சிலி

    யோகம்: சூலம்

    நவரத்தினம் : மரகதம்

    உடல் உறுப்பு: காதுகள்

    திசை: தெற்கு

    பஞ்சபூதம் : நீர்

    அதிதேவதை: ஆதிசேஷன்

    நட்சத்திர மிருகம்: ஆண் பூனை

    நட்சத்திர வடிவம்: பாம்பு

    நட்சத்திர விருட்சம் - புன்னை

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை: அஸ்வினி, மகம், மூலம்

    சேம தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    சாதக தாரை: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    பரம மிக்ர. தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரத்தின் தோற்றம் சர்ப்பம். இதில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இரண்டு சர்ப்பங்கள் பிணைந்த சர்ப்ப சிலைகளை வழிபட பெயர், புகழுடன் வாழலாம். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.

    6-வது தாரையான சாதக தாரை சித்திரை நட்சத்திர நாளில் சித்திர குப்தனையும், சக்ரத்தாழ்வாரையும் வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறுவார்கள்.

    Next Story
    ×