search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பழைய தவறுகளையே நினைக்காதீர்கள்!
    X

    பழைய தவறுகளையே நினைக்காதீர்கள்!

    • நீங்கள் நினைப்பது மட்டுமே எப்போதுமே சரியானது என்று நீங்கள் நினைப்பது தவறு என்று புரியும்.
    • உங்களுக்கென்று ஒரு எல்லை, வேலி அமைத்துக் கொள்வது நல்லது.

    துறு துறு வென்று செயல்படுவது தவறல்ல. அதற்காக அவசரமாக செயல்படுவது தவறாக அமைந்து விடும். கொஞ்சம் நம்மை நாமே அமைதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எளிதானதுதான். இதை எந்த நேரத்திலும் செய்யலாம். வசதியாக சில நிமிடங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாய் உங்கள் மூச்சை கவனியுங்கள். அவ்வளவுதான். ஒரு சில நிமிடங்களிலேயே அமைதி ஆகி விடுவீர்கள். மேலும் ஒரு சில நிமிடங்கள் தொடரலாம். இப்போது உங்களுக்கு எல்லாம் புரிந்து விடும்.

    * உங்களை மற்றவர்களுக்காக நாறாய் பிய்த்துக் கொள்வது கருணை ஆகாது என்று அறிவு சொல்லும்.

    * நீங்கள் நினைப்பது மட்டுமே எப்போதுமே சரியானது என்று நீங்கள் நினைப்பது தவறு என்று புரியும்.

    * நான் இப்படித்தான் என்ற வீர வசனமோ, பிடிவாதமோ உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்களை பிறருக்குக் கொடுக்காது என்பதை உணர முடியும்.

    * உங்களுக்கென்று ஒரு எல்லை, வேலி அமைத்துக் கொள்வது நல்லது.


    * பிறர் உங்கள் கருத்துக்களை ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் உங்கள் எதிரி அல்ல என்பதை உணருங்கள்.

    * நீங்கள் நியாயமாய் இருக்கும் வரை பிறரின் தவறான கருத்துகளுக்கு காது கொடுக்க வேண்டாம்.

    சில பழக்கங்கள் அவரை அறியாமலேயே

    அவரை பலவீனப்படுத்தி விடும்.

    * அளவுக்கு அதிகமாக குடிப்பதால் காலப் போக்கில் ஒருவரின் உடல் நலம், மன நலம் இரண்டுமே வீணாகி விடும். முன்னுக்குப்பின் முரணாக பேசுவார்கள். தான் சொன்னதையே இல்லை என்பர். இவரது பேச்சை நம்பி அடுத்தவர் எந்த செயலிலும் இறங்க முடியாது. மது பழக்கத்திற்கு ஒருவர் ஆளாகாமல் இருப்பது நல்லது.

    * இதே அளவு பாதிப்பினை தருவது ஒருவரின் இந்த குணம் ஆகும். அது என்ன? எப்போதும் தன்னை பிறரோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு தன்னை குறைவாக மதிப்பிட்டு சங்கடப்படுவர்களைப் பற்றி தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களால் தானும் நிம்மதியாக வாழ முடியாது. இவரால் இவரைச் சார்ந்தவர்களும் நிம்மதியாக வாழ முடியாது. இந்த குணம் ஒருவருக்கு இருந்தால் அவரது குடும்பத்தினர் நல்ல மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.

    * நம்மை சுற்றியோ அல்லது நாம் இருக்கும் இடத்தை சுற்றியோ ஆக்கப் பூர்வமான சிந்தனை, செயல்கள் கொண்ட மனிதர்களாக இருக்க வேண்டும். அழிவுப்பூர்வ சிந்தனை, செயல்கள், கொண்டவர்கள்-விஷ வாயு போன்றவர்கள், அந்த பக்கம் திரும்பி கூடப்பார்க்கக் கூடாது.

    * சுய ஒழுக்கம் என்பது ஒருவருக்கு அவசியமான ஆடை. இது இல்லாமல் இருப்பது ஆடை இல்லாமல் இருப்பது போன்றது. சொல், சிந்தனை, செயல் இந்த மூன்றிலும் சுய ஒழுக்கம் வேண்டும்.

    கமலி ஸ்ரீபால்

    * எப்போதுமே சிலர் 'அவர்கள் இப்படி நினைப்பார்களோ', 'இப்படி பேசுவார்களோ' என்று நினைத்து பயந்து பயந்தே வாழ்வினை துணிந்து நாம் வாழ முற்பட்டால் அவர்களும் நம்மைப் போல் மாற முற்படுவார்கள், குறைந்தபட்சம் நம்மைப் பற்றி 'ஊர் வம்பு' பேசாமலாவது இருப்பார்கள். * பிறரைப் பற்றி எப்போதுமே குற்றம், குறை கூறி வாழும் மனிதர்களையும் அழிவுப்பூர்வ சிந்தனை கொண்டவர்கள் பட்டியலில் கொண்டு வரலாம்.

    * ஒரு வேலை, செயலினை செய்து முடித்த அடுத்த நொடியே ஊதியம் கிடைக்கலாம். விருதுகள் கிடைக்க சற்று கூடுதல் காலம் பிடிக்கும்.

    * தன்னை தானே இகழ்ந்து, மட்டம் தட்டி பேசிக் கொள்வது அடக்கம் என்று பொருள்படாது. இதுவும் எண்ணத்தின் கோணலே, குளறுபடியே ஆகும்.

    * தோல்வியை சந்திக்காத மனிதன் இருப்பது அரிது. அதனை வெற்றியாக்குவது தான் மனித வாழ்க்கை.

    * ரொம்பவும் ஆழ்ந்து, ஆழ்ந்து அணு, அணுவாக ஒரு விஷயத்தினைப் பற்றி யோசித்தால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. உரிய கவனம் கொடுக்கலாம். பிரபஞ்சம் மற்றதனை கவனித்துக் கொள்ளும்.

    * பழைய தவறுகளையே நினைத்து, நினைத்து அதில் மூழ்கக் கூடாது. அது ஒருவரின் வாழ்க்கையினை உருக்கிவிடும். * பிறர் மேல் பழிகளை சுமத்தியே வாழ்பவர் தன் திறன் இன்மையை நன்கு வெளிப்படுத்துவார்.

    * எந்த ஒரு வேலையினையும், முயற்சியினையும் தேவையின்றி நாளை செய்யலாம், நாளை செய்யலாம் என தள்ளிப் போடக் கூடாது. அது மனதில் ஒரு சுமையினைக் கொடுத்து விடும்.

    உங்களுக்கு அடிக்கடி மனச்சோகம் ஏற்படுகின்றதா? தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றதா? ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பற்றிய இந்த உண்மை நிகழ்வுகளை அடிக்கடி படியுங்கள்.

    * ஐன்ஸ்டின் அவர்கள் பிறக்கும் போது அவரது தலை அமைப்பு சற்று மாறுபட்டதாக இருந்ததாம். அவரது குடும்பத்தினர் இது பிறவி கோளாறு என கவலைப்பட்டனராம்.

    * சுமார் 10 வயது வரை அவர் முழுமையான வாக்கியம் பேச போராடுவாராம். பேச்சும் ரொம்பவும் மெதுவாக இருக்குமாம்.

    * கணிதம், விஞ்ஞானம் பரிட்சையில் தேர்வு பெறும் இவரால் மறற பிரிவுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அவரால் பல்கலைக்கழக படிப்பினைத் தொடர முடியவில்லை.

    * விஞ்ஞானத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது.

    * மிகுந்த அமைதிவாதி அமைதி விரும்பி. ஆயினும் அமெரிக்காவினை பல விஞ்ஞான ஆய்வுகளுக்குத் தூண்டியவர்.

    * மூன்று நாடுகளின் தேச உரிமை பெற்றவர்.

    * மிக நன்கு வயலின் வாசிப்பவர்.

    * இவரது மூளையினை இன்று வரை பத்திரப்படுத்தி ஆய்வு செய்கின்றனர்.

    அத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இவரால் நிகழ்ந்துள்ளன. இதனை அடிக்கடி படித்தால் மனதில் கண்டிப்பாய் புத்துணர்ச்சி எழும்.

    ஆக நாம்தான் நம் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக் கொள்வதில் முழு முனைப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் சாக்குபோக்கு சொல்லும் வழியில் மட்டுமே செல்ல முடியும்.

    இயற்கையில் செலவில்லாமல் கிடைக்கும். இந்த மருந்துகளை பயன்படுத்தினாலே உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * சுறுசுறுப்பாய் இருத்தல், நிதானமான ஆழ்ந்த மூச்சு பயிற்சி, தியானம், உடற்பயிற்சி, 8 மணி நேர தூக்கம்.

    * சூரிய ஒளி உடலில் படுதல் போன்றவற்றினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாமே.

    * இந்த மூன்றும் ஒருவரை கட்டுப்படுத்தக் கூடாது. பணம், கடந்த கால வாழ்க்கை இவற்றுள் ஒருவன் சிக்கி விட்டால் மீள்வது கடினம். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    * கர்மாவுக்கென்று ஒரு தனி ஸ்டைல் உண்டு. ஒரு தனி வழி உண்டு. நம் வாழ்வின் கூடவே, பக்கத்திலேயே தொடரும் தொடர் கதை அது. அதனை யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் விதவிதமான பிரச்சனைகள். தீர்க்க முடியாத பிரச்சனைகள் உள்ளன. அமைதியாய் நாம் நகர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும். இதுதான் வாழ்வின் நிலை.

    * உண்மையான சுதந்திரம் என்பது இந்த பிறப்பு, இறப்பு இவற்றில் இருந்து விடுபடுவதுதான்.

    * நேற்று என்பது வரலாறு

    * நாளை என்பது புரியாத புதிர்.

    * இன்று என்பதே இயற்கையின் பரிசு.

    * நீங்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்ய நினைக்கலாம்.

    * ஆனால் சிலவை நடக்கும். சிலவை நடக்காது. இது புரியாமலே மனிதன் வாழ்ந்து வருகின்றான்.

    ஒருவர் தன் வாழ்வில் எளிதாய் மற்றவர்களின் முன்னால் உயர்ந்து நிற்க முடியுமாம். எப்படி என்று பார்ப்போமோ?

    * நேரம், காலத்தினை சரியாக கையாள வேண்டும்.

    * நாம்தான் எதிலும் மிகச் சரியானவர் என்பது போல் காட்டிக் கொள்ளக் கூடாது.

    * குறைவாக பேசினாலே போதும். மிகவும் மதிக்கப்படுவோம்.

    * அளவுக்கு அதிகமாக யாரையும் நம்ப வேண்டாமே * பகைவர்களை கூட பயன்படுத்திக் கொள்ள தெரிய வேண்டும். அதுதான் திறமை.

    * நம்மை சுற்றி பாதுகாப்பு கோட்டை கட்டி உலகில் இருந்து நம்மை மறைத்து வாழ்வது. சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு இயலாத காரியம்.

    * வாய் சண்டையால் வெற்றி பெறுவதனை விட நம் செயல்களின் மூலம் வெற்றி பெறுவதே சிறந்தது.

    * கவனம்... கவனம்... கவனம்... எதிலும் கவனம் என்பதே சிறந்தது.

    * ரொம்ப கவலையா இருக்கா? 10 முறை ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.

    * சக்தி குறைவா தெரியுமா? கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாமே,

    * குற்ற உணர்வால் தவிக்கின்றீர்களா? உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள்.

    * படபடப்பாக இருக்கின்றதா? ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள்.

    மேலே கூறப்பட்ட கருத்துக்கள் நான் படித்தவை. சேகரித்தவை. பகிர்ந்துக் கொள்கிறேன். பயன் பெறுவோமே.

    Next Story
    ×