என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மெல்லிசை மன்னர்கள் இசையில் பி.சுசீலாவின் 'ஹிட்' பாடல்கள்
- 1969-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது சுசீலாவிற்கு கிடைத்தது.
- இசை கர்நாடக இசை ராகங்களின் அடிப்படையில் இருந்தாலும் எல்லாராலும் பாடமுடிந்தது.
ஆரம்பகாலம் தொட்டே சி.ஆர்.சுப்பாராமனிடத்தில் வயலினிஸ்டாக இருந்த டி.கே. ராமமூர்த்தியும், அவரிடம் முக்கிய உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனும் ஜூன் 1952 ல் சி.ஆர்.சுப்பாராமன் இறந்த நிலையில் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மீதி படங்களை முடித்துக் கொடுத்து தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.
'தேவதாஸ்' பட ஒளிப்பதிவாளர் பி.எஸ். ரங்கா, தனது ஐந்து படங்களிலும், மார்டன் தியேட்டர்ஸ் மூன்று படங்களிலும், கண்ணதாசன் தயாரித்த மற்றும் கதை வசனம் எழுதிய படங்களில் ஆறு எனத்தொடர்ந்து வரவேற்றுக் கொடுத்த வாய்ப்பில் இரட்டையர்கள் அப்போதைய இசையமைப்பு பாணியில் இருந்து முற்றிலும் புதிதாக கர்நாடக இசையுடன் மேற்கத்திய இசை முறையை அறிமுகப்படுத்தி இசையை மென்மைப்படுத்தினார்கள்.
இவர்களது இசை கர்நாடக இசை ராகங்களின் அடிப்படையில் இருந்தாலும் எல்லாராலும் பாடமுடிந்தது. எல்லோரிடத்திலும் போய் சேர்ந்தது.
1960-களில் வந்த படப்பாடல்கள் பொற்காலத் திரையிசைப் பாடல்கள் என்றே வர்ணிக்கப்படுகின்றன!!
வல்லிசையை மெல்லிசை ஆக்கிய எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இருவருக்கும் பட்டம் வழங்கி சிறப்பிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னிலையில் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி சார்பில் சென்னை என்.கே.டி. கலா மண்டபத்தில் பத்திரிக்கையாளர்கள், நடிகர் ஜெமினிகணேசன், கவியரசர் கண்ணதாசன், இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் சந்திரபாபு, நடிகை சாவித்திரி மற்றும் பலர் கலந்து கொண்டு பாராட்ட ஜூன் 1963ல் "மெல்லிசை மன்னர்"என்ற பட்டத்தை நடிகர் சிவாஜி கணேசன் வழங்கினார். பட்டத்திற்கான பெயரை தேர்ந்தெடுத்தவர் கவியரசர் கண்ணதாசன்!
பெரும்பாலும் பாடல் எழுதி இசையமைத்து ஒன்றாகவே பணி செய்யும் வாய்ப்பு கவியரசருக்கும் எம்.எஸ்.வி.க்கும் வாய்த்தாலும் வீட்டுக்கு வந்த பின்பு இரவு 10 மணிக்கு மேல் தினமும் இருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் பேசுவது வழக்கம். அப்படித்தான் மெல்லிசை மன்னர்கள் பட்டம் வாங்கும் முன் நாள் இரவு கவியரசர், எம்.எஸ்.வி.க்கு போன் செய்கிறார்.
"ஹலோ மெல்லிசை மன்னரே.."
"என்னது மெல்லிசை மன்னரா?"
"ஆமா விசு, உனக்கு நாளை மெல்லிசை மன்னர் பட்டம் தர போறாங்க."
"என்னது பட்டமா? அதெல்லாம் வேண்டாம் கவிஞரே, அப்புறம் நான் விழாவிற்கு வரமாட்டேன்."
"விசு, நாளைக்கு நீ வர்றே, உனக்கும் ராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர் பட்டம் தரப் போறாங்க. எல்லாம் தயார். நாளைக்கு கட்டாயம் நீ வந்து பட்டத்தை ஏத்துக்கணும்"
கவியரசர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது எம்.எஸ்.வி. யிடம்.
"சரி கவிஞரே"
மறுநாள், விழாவில் அறிவித்து வழங்கி பாராட்டப்பட்ட பட்டத்தை திரையரங்குகளில் பெயர் காட்டப்படும் டைட்டில் காட்சிகளில் மெல்லிசை மன்னர்கள் என்றோ, பின்னாளில் இருவரும் தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்த பிறகு மெல்லிசை மன்னர் என்று துவங்கி இரு இசை மேதைகள் பெயர் வந்தாலோ அரங்கமே அதிரும் விசிலாலும், கைத்தட்டல்களாலும்!!
இன்றுவரை இருவர் பெயருடன் "மெல்லிசை மன்னர்" என்ற அடைமொழி நிலைத்து வாழ்கிறது.
பாடல்களை இசையமைத்துப் பாடியவுடன், இந்தப் பாடலுக்கு "தேசிய விருது" கிடைக்கும் என்பதை எம்.எஸ்.வி சொல்லிவிடுவார். அவரது கணிப்பு மிகச் சரியாகவும் இருந்திருக்கிறது!
'உயர்ந்த மனிதன்' என்றத் திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த படம். அதில் "நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா"- என்ற பாடல். சுசீலா பாடியிருந்தார். காவியக் கவிஞர் வாலி எழுதியிருப்பார். வால்ட்ஸ் இசை 'ஹபானாரா' என்ற வகையில் அமைத்தப் பாடல் அது.
ஒவ்வொரு எழுத்துக்கும் பாவனைகளை மெட்டமைத்து பாடலை பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி! சுசிலாவின் குரலில் இழையோடும் ஏக்கம், சோகம், காதல் எல்லாம் இன்றும் நம்மை கேட்டுக் கொண்டே இருக்கச் செய்யும்! மிகவும் சிரமமாக இந்த பாடலை பாடி முடித்த போது, எம்.எஸ்.வி. சொன்னாராம், இந்த பாடலுக்கு உங்களுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று.
1969-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது சுசீலாவிற்கு கிடைத்தது. அது மட்டுமல்ல அதே ஆண்டு முதன்முதலாக தேசிய விருதுக்கு பின்னணி பாடகியர் பிரிவும் ஏற்படுத்தப்பட்டு அந்த பிரிவில் முதலில் "தேசிய விருது" பி.சுசீலாவிற்கு தான் வழங்கப்பட்டது.
இதே போல் இன்னொரு பாடலின் ஒலிப்பதிவு முடிந்தவுடன் ஒரு மிகச்சிறந்த பாடகியிடம் இந்த பாடலுக்கு உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார். அதை பற்றி பின்வரும் தொடரில் பார்ப்போம்.
சுசிலா 1953-ல் முதன் முதலாக பாட வந்தாலும் 1956-ல் தெனாலிராமன் என்ற படத்தில் ஜெயதேவர் அஷ்டபதி பாடல் ஒன்றை பாட அவருக்கு வாய்ப்பு தந்தார் எம்.எஸ்.வி.
கி. பானுமதி கிருஷ்ணகுமார்
பிறகு பக்த மார்க்கண்டேயாவில் ஒரு பாடல் பாடுகிறார். இவரது குரலின் தனித்தன்மை ஈர்க்க, 'பத்தினி தெய்வம்' படத்தில் டி.எம். சவுந்தரராஜனுடன் இரண்டு டூயட் பாட வைக்கிறார். 'புதையல்' படத்தில் ஐந்து பாடல்கள். ஒவ்வொன்றும் ஒருவகை. இரண்டு குழுவினருடன், ஒரு டூயட், ஒரு சோகம், ஒரு கிராமியம் என்று எல்லா வகை பாடலுக்கும் சுசீலாவின் குரல் பொருந்தி போகிறது. எவ்வளவு உச்சத்தோணியில் பாடினாலும் பிசிறடிக்காத அவரது குரல் எல்லோரையும் கட்டிப்போட்டது.
ஆரம்பத்தில் இவரது குரலில் இருந்த மிக மெலிதான கர்நாடகா பாணியிலான அதிர்வு இல்லாமல் முழுக்க முழுக்க குழைவான இனிய குரலில் 'மகாதேவி' படத்தில் வந்த "கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே" என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் பிறகு தமிழ் திரைப்பட உலகில் பி.சுசிலா பாடாத படமே இல்லை என்று சொல்லலாம். (போலீஸ்காரன் மகள் படத்தை தவிர) உச்சாணி கொம்பில் ஏறியது அவரது வளர்ச்சியும் புகழும்!
'அமுதவல்லி' என்ற படத்தில் ஒரு பாடல் 'ஆடைகட்டி வந்த நிலாவோ' டி.ஆர். மகாலிங்கம் பி.சுசீலா பாடியது. இது, சுசிலா குரல் எவ்வளவு தூரம் நெகிழ்த்தன்மையுடன் இழுக்க வரும் என்று சோதனை வைத்து பார்த்தது போன்ற பாடல்!
'ஆடைகட்டி வந்த நிலாவோ' என்ற பெரிய பல்லவியை டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருப்பார். அவர் எட்டுக்கட்டையில் பாடுபவர். மூச்சடக்கி இவ்வளவு பெரிய பல்லவியை பாடுவதில் வியப்பில்லை.
சரணத்தில் சுசீலா பாடும் போது "துள்ளித்துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணி இவள் நாகமங்கை" இந்த வரிகளை இரண்டு முறை பாடி தொடர்ந்து "எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள். தள்ளிவிட்டு போனபின் தேடி வந்தாள்" என்ற வரிகளையும் இரண்டு முறை பாடி,
கிளை தான் இழந்து,
கனியை சுமந்து,
தனியே கிடந்த கொடி நானே,
கண்ணாலனுடன் கலந்தானந்தமே பெற
காவினில் வாழும் வாடும் கிளி நானே
என்ற வரிகளையும் பாடி மீண்டும்
"துள்ளித்துள்ளி ஆடும்"- என்ற இரு வரிகளை எங்கும் இடைவெளி விடாமல் மூச்செடுக்காமல் பாடி நிறுத்துவார்!
பட்டுக்கோட்டையாரின் அழகான வரிகள்! என்ன ஒரு மெட்டமைப்பு! சுசீலா தொடர்ந்து 40 நொடிகள் பாடுகிறார்! சவாலாக எடுத்து பாடி இருக்கலாம்! இந்தப் பாடல் வந்த பிறகு எல்லோர் மனதிலும் கூடு கட்டி வாழும் குயிலானார் சுசிலா!!
'மன்னாதி மன்னன்' படத்தில் "கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?" என்ற கண்ணதாசன் வரிகளில் இருந்த சோகமும், ஆதங்கமும், ஏக்கமும் மெட்டமைப்பில் உணர்ச்சி பூர்வமான பாவனையையும் அப்படியே தனது குரலில் மொழிபெயர்த்தார் சுசிலா. கேட்போர் காதிலே நாளெல்லாம் ரீங்காரமிடும்!
தமிழ் திரையுலகில், குறிப்பாக மெல்லிசை மன்னர்கள் பாடலென்றால் அங்கே முடி சூடா அரசி ஆகிவிட்டார் பி.சுசிலா!
பொதுவாக கவிஞர்களின் வரிகளில் வரும் உணர்வுகளை அப்படியே தனது குரலில் அது துள்ளலோ, தொண்டை தழுதழுக்கும் துக்கமோ, பக்தியின் பாந்தமோ, தாலாட்டின் பாசமோ எதுவானாலும் அப்படியே தனது குரலில் தருபவர் அவர்.
ஒருமுறை, அவர் வீட்டில் நேரில் சந்தித்தபோது கேட்டேன், உங்களது குரலில் உணர்வுகள் அப்படியே பொங்கி வருகிறதே எப்படி? என்றேன்.
அதற்கு அவர், பாடல் எந்த சூழ்நிலையில் பாடப்படுகிறது என்று கேட்டு தெரிந்து கொள்வேன். அதைக் குரலில் கொண்டு வந்து விடுவேன் என சொன்னார். அதனால் தானோ என்னவோ வரிகளில் இருப்பதை பாடும் குரலிலேயே நடித்துவிடுவார்! அதை அப்படியே கதாநாயகிகள் காட்சியில் கொண்டு வந்துவிடலாம்.
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'கற்பகம்' படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்து பாடல்களையும் சுசீலாவை வைத்தே பாட வைத்திருந்தார்கள் இரட்டையர்கள். ஆண் குரலில் பாடலே இல்லாத படம் அது.
இதே இயக்குனர் ஒரு பாடலை சுசீலா தான் பாட வேண்டும் என்று காத்திருந்தார் என்றால் என்ன சொல்வது? 'சித்தி' என்று ஒரு படம். அதில் தாலாட்டு பாடிய குழந்தையை தூங்க வைக்கும் போது 'இப்போதே தூங்கு, இதை விட்டால் தூங்க நேரம் கிடைப்பது அரிது' என்று பாடல் எழுத வேண்டும் என்று கவியரசரிடம் சொன்னார்.
கவியரசரோ, குழந்தைப் பருவம் தவிர பெண்களுக்கான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை - பேரினப் பெண் என்ற தமிழ் சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கிற அத்தனை பருவங்களுக்கு ம் இரண்டிரண்டு வரிகளை வைத்து பிரமாதமாக எழுதிவிட்டார். இதை சுசீலா தான் பாட வேண்டும் என்கிறார் இயக்குனர். ஆனால் அப்போது அவருக்கு குழந்தை பேறு நேரம். அதனால் என்ன என்று சில மாதங்கள் ஆன பிறகு அவரே வந்து பாடிய பாடல் தான் "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்ற பாடல். ஆறு மாத குழந்தை முதல் 100 வயது மனிதர்களும் சொக்கிப் போகும் குரல். காட்சியிலும் அப்படித்தான், குழந்தையும் பாட்டியும் ஒரு சேர தூங்கிவிடுவார்கள். கவியரசரின் வைர வரிகள் மட்டுமா? சுசிலாம்மாவின் ஆரீ ராரீரீ ஆரீ ராரோ
ஆரீ ராரீ ராரோ....?
ஹலோ தூங்கிடாதீங்க, இன்னும் இது போல பல பாடல்கள் வருதே!
தொடர்ந்து புதையல் எடுப்போம்...






