என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஒலிம்பிக் நாயகி லரிசா லடிநினா
- நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
- ஒலிம்பிக் போட்டிகளில் 200 குழுக்கள் கலந்து கொள்கின்றன.
ஒரு பெண் நினைத்தால் எந்த சூழ்நிலையையும் சாதகமாக்கி கடுமையாக உழைத்து இமாலய வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்தவர் ரஷியப் பெண்மணியான லரிசா லடிநினா. மங்கையர் அனைவருக்கும் உத்வேகமும் ஊக்கமும் ஊட்டும் இவர் 18 ஒலிம்பிக் மெடல்களைப் பெற்று ஒலிம்பிக் நாயகியாக விளங்குகிறார். 90 வயதிலும் சுறுசுறுப்பாக அனைவருக்கும் வழிகாட்டும் இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா?
பிறப்பும் இளமையும்: ரஷியப் பெண்மணியான லரிசா செமியோனோவ்னா டிரியி உக்ரேனில் கெர்ஸன் என்ற இடத்தில் 1934-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி பிறந்தார். அவர் பதினோரு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரை விட்டு தந்தையார் பிரிந்து சென்றார். அவரை வளர்த்தவர் படிப்பறிவில்லாத அவரது தாயார் தான். அவர் பகல் நேரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இரவில் வாட்ச்மேன் வேலையைப் பார்த்தார். குழந்தையை வளர்த்தார்.
ஸ்டாலின்கிராட் போரில் லரிசாவின் தந்தை மெஷின் கன் ஆபரேட்டராக இருந்த போது கொல்லப்பட்டார்.
இளமையில் 'பாலட்' டான்ஸை பயிற்சி செய்த லரிஸா பின்னர் அவரது நடனப் பயிற்சியாளர் கெர்ஸனை விட்டுச் சென்று விடவே சீருடற்பயிற்சி என்னும் ஜிம்னாஸ்டிக்சில் தீவிரமாக ஈடுபட்டார்.
1953-ல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர் கியிவ் என்ற இடத்தில் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். 19 வயதே ஆன போது 1954-ல் ரோமில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு அவர் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் போட்டி பற்றிய சுவையான செய்திகள்:
கிரேக்க நாட்டில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீசில் நடந்த போட்டிகளால் உத்வேகம் பெறப்பட்டு ஒலிம்பிக் போட்டி துவங்கப்பட்டது.
1894-ல் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது.
1896-ல் முதன் முதலாக ஏதன்ஸ் நகரில் இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 1994 முதல் சம்மர் ஒலிம்பிக், விண்டர் ஒலிம்பிக் என்று இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
உடல் ஊனமுற்றோருக்காக பாராஒலிம்பிக் என்னும் போட்டிகள் தனியே தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது.
முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1916, 1940, 1944 ஆகிய வருடங்களில் போட்டி நடத்தப்படவில்லை.
ஒலிம்பிக் போட்டிகளில் 200 குழுக்கள் கலந்து கொள்கின்றன.
2020 சம்மர் ஒலிம்பிக்கிலும் 2022 விண்டர் ஒலிம்பிக்கிலும் 14000 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
40 வெவ்வேறு விளையாட்டுகளில் 448 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. போட்டியில் வென்ற முதல் மூவருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கம் வழங்கப்படுகிறது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்கள் பெற்ற முதல் மூன்று நாடுகள் பின் வருமாறு:
அமெரிக்கா 2259 மெடல்கள்
ரஷியா 2011 மெடல்கள்
ஜெர்மனி 1821 மெடல்கள்
சம்மர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 520 கோடி அமெரிக்க டாலர் ஆகும். விண்டர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 310 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறத்தில் ஐந்து ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கிறது. ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களைக் குறிக்கிறது. இந்த வளையங்களின் வண்ணங்கள் நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு.
இப்படிப்பட்ட வண்ணங்களின் தேர்வு ஏனெனில், உலகில் உள்ள அனைத்து தேசங்களின் கொடிகளிலும் இந்த ஐந்து வண்ணங்களில் ஏதோ ஒரு வண்ணம் இடம் பெறுகிறது, அதனால் தான்.
ஒலிம்பிக் உத்வேகமூட்டும் வாசகம்:
சிடியஸ், ஆல்டியஸ், பார்டியஸ் (வேகமாக, உயரமாக, வலிமையாக) என்பதாகும்.
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு: ஏதென்சில் 1896-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டதென்றாலும், 1900ல் தான் பெண்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ச. நாகராஜன்
2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக எல்லாப் போட்டிகளிலும் பெண்கள் பங்கேற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள 1928 முதல் அனுமதிக்கப்பட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் லரிஸாவின் வெற்றி: மிகத் திறனுடன் ஜிம்னாஸ்டிக்ஸில் தேர்ச்சி பெற்ற லரிஸா 1956இல் மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். 21 வயதான அவர் ஹங்கேரியைச் சேர்ந்த 35 வயதான அக்னஸ் கேலடியுடன் மோத வேண்டியதாக இருந்தது.
மிகக் கடுமையான போட்டியில் தனது திறமையைக் காண்பித்த அவர் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தன் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். பிளோர் ஜிம்னாஸ்டிக்சில் கேலடியுடனான போட்டி வெற்றி தோல்வி இன்றி 'டை'யில் முடிந்தது.
அடுத்து 1960-ல் ஒலிம்பிக் போட்டி ரோமில் நடந்தது. 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அவர் சோவியத் யூனியனைப் பெருமைப்பட வைத்தார். அடுத்து 1964-ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. அதில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார். இந்த மூன்று போட்டிகளிலும் அவர் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். ஆக 1956 மெல்போர்ன், 1960 ரோம், 1964 டோக்கியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் 'டை'யில் முடிந்த தங்கப் பதக்கத்தையும் சேர்த்து அவர் 18 பதக்கங்களை வென்றார்.
நீண்ட நெடுங்காலம் அதாவது 1964-ல் இருந்து 2012-ம் ஆண்டு முடிய இவரே அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை இவருக்கு இருந்தது.
2012-ல் தான் அமெரிக்கரான நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்களை வென்று இவரது சாதனையை முறியடித்தார். என்றாலும் கூட மங்கையரில் அதிக மெடல்களைப் பெற்ற பெண்மணி என்ற இவரது சாதனையை முறியடிக்க இதுவரை பெண்மணிகளில் ஒருவரும் இல்லை. அமெரிக்கப் பெண்மணியான ஷெனான் மில்லர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு மெடல்களை வென்றுள்ளார்.
மைக்கேல் பெல்ப்ஸ் இவரது சாதனையை முறியடித்த போது, "ஒரு பெண்மணி நெடுங்காலத்திற்கு முன்னர் செய்த சாதனையை ஒரு ஆண் முறியடிக்க இப்போதாவது காலம் வந்ததே" என்று அவர் கூறியதை உலகமே ரசித்தது.
அவர் 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்களையும் 14 யூரோபியன் சாம்பியன்ஷிப் மெடல்களையும் வென்றதால் உலகின் அதிசயமான ஜிம்னாஸ்டிக் பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.
தான் பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை தனது பயிற்சியாளரான (கோச்)
சோட்னிசென்கோவிற்குத் தந்தார் லரிசா. இறக்கும் வரை அவர் தன்னிடம் அதை வைத்திருந்தார். அவரது இறப்பிற்குப் பின் அவரது மனைவி அந்தத் தங்கப் பதக்கத்தை லரிசாவுக்குத் திருப்பித் தந்தார்.
அனைவரிடமும் அவர் காட்டும் மரியாதைக்கு இது ஒரு சான்றாகும்.
பழைய காலத்தைப் பற்றி அவர் கூறுவது இது: "1964-ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட எங்களுக்கு ராணுவ கூடாரங்களில் தான் தங்க இடம் தந்தனர்; பொதுக் கழிப்பறைகளையே தான் நாங்கள் உபயோகித்தோம். ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழுவினரோ சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சோவியத் யூனியன் சார்பில் போட்டியிட்ட எங்களுக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் நிறைய இருந்தது. என்றாலும் அதிகாரிகள் எங்களை கண்ணியத்துடன் நடத்தினர். எங்களுக்கு தேசத்தின் கவுரவத்தை உயர்த்த வேண்டும் என்ற அடங்காத ஆசையும் இருந்தது. எங்கள் நாட்டின் கொடி ஏற்றப்படும் போதும் தேசீய கீதம் இசைக்கப்படும்போதும் நாங்கள் ஓவென்று ஆர்ப்பரிப்போம்." என்கிறார் அவர்.
பயிற்சியாளர்: 1966-ம் ஆண்டு அவர் போட்டிகளில் ஈடுபடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.
சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக் குழுவிற்கு பயிற்சியாளராக ஆனார். இவரது நேரடிப் பயிற்சியால் சோவியத் யூனியன் விளையாட்டு வீராங்கனைகள் பல பதக்கங்களைப் பெற்றனர்.
தினமும் ஏராளமான கடிதங்கள் ரஷியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவருக்கு வரும். அனைத்தையும் இரவு நேரத்தில் ஒவ்வொன்றாகப் படிப்பார். "எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். என்ன செய்வது?, இப்படி ஒரு கடிதம்; எனக்கு திறமையே இல்லையோ என்று ஒரு கடிதம் – அனைத்திற்கும் ஊக்கமூட்டும் பதிலை அனுப்பி உற்சாகத்தை அளிப்பது இவரது பழக்கம்.
குடும்பம்: லரிசா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் டாட்யானா இவாநோவா லாடிநினா நாட்டுப்புற நடனத்தில் நிபுணர். அவருக்கு ஒரு மகனும் உண்டு.
மாஸ்கோவில் இப்போது வாழ்ந்து வரும் அவர் ரஷிய - உக்ரேன் போரினால் ரஷிய விளையாட்டு வீரர்கள் நடுநிலைமைக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதை தேசப்பற்று இல்லாத செய்கை என்று விமர்சித்தார்.
சமூக சேவை: கியவ் நகரில் சமூக சேவைக் குழுவைச் சேர்ந்த வயதான ஒருவர் அவரைப் பார்த்து உங்களை அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கிறது, எனக்கு இந்த சமூக சேவையில் உதவி புரிய வர முடியுமா என்றார்.
புன்னகை புரிந்த லாரிசா, "ஓகே" என்றார்.
தினமும் அவரிடம் உதவி நாடி ஏராளமானோர் வருவர். உடல் பிரச்சனை ஒருவருக்கு இருக்கும், இன்னொரு வயதானவருக்கு தரை அடுக்கில் இல்லாமல் நான்காம் மாடியில் குடியிருப்பு வீடு ஒதுக்கப்பட்ட குறை இருக்கும், – ஒவ்வொன்றாக அவர் தீர்த்து வைப்பார்.
ஒரு நாள் ஒரு பெண்மணி வேகமாக அவரிடம் வந்து ஒரு பேப்பரை ஆட்டி ஆட்டிப் பேசினார். "இடம் இல்லையாம். இடமே இல்லையாம்" என்று அவர் கோபத்துடன் கத்தினார். லாரிசா பொறுமையுடன் உங்கள் வீட்டிற்குப் போகலாமா? என்றார்.
அவர் வீட்டிற்குச் சென்று டீயை அருந்தியவாறே அவரது குறையைக் கேட்டார். தனிப் பெண்மணியாக குழந்தையை வளர்க்கும் சிங்கிள் மதரான அவரது குழந்தைக்கு நர்சரியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவர் என்ன செய்வார், பாவம்! உடனே நர்சரி மானேஜருடன் லரிஸா பேசினார்: உங்களுக்குக் குழந்தை இருக்கிறதல்லவா என்ற அவரது மென்மையான குரலைக் கேட்ட மானேஜர் உடனடியாக அந்தக் குழந்தைக்கு நர்சரியில் இடம் கொடுத்தார். இப்படி தினமும் விதம் விதமாக ஒரு பிரச்சனை வரும்.
89 வயதான இவர் இன்னும் இந்த சேவையில் ஈடுபடுவது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
உற்சாகமூட்டும் பெண்மணி: அனைத்துப் பெண்மணிகளையும் உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்கேற்குமாறு அறைகூவல் விடும் லரிசா தன்னைப் பற்றிக் கூறுவது இது: "ஒரு சாதனையை 48 ஆண்டுகள் முறியடிக்காமல் தக்க வைத்திருப்பது போதுமான காலம் தானே!"






