என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெண்கள் சந்திக்கும் பாலியல் உறவு பிரச்சனைகள்
    X

    பெண்கள் சந்திக்கும் பாலியல் உறவு பிரச்சனைகள்

    • மூன்றாவது முக்கியமான விஷயம், நரம்பு மண்டலங்களின் செயல்பாடு ஆகும்.
    • பல நேரங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கலாம்.

    பெரும்பாலான பெண்கள் இன்று பொதுவாக எதிர்நோக்குவது பாலியல் உறவு சம்பந்தமான பிரச்சனையாகும். பாலியல் உறவு என்பது பெண்களை பொருத்த வரைக்கும் ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இன்றும் உலக அளவில் 40 முதல் 50 சதவீதம் பெண்கள் பாலியல் உறவு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    கேள்வி:- பெண்களுக்கு பாலியல் உறவு பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது?

    பதில்:- பாலியல் உறவு பிரச்சனை என்பது பெண்களை பொருத்தவரைக்கும் பல்வேறு விஷயங்களை சார்ந்தது. இதில் முதல் பிரச்சனை உடல்ரீதியாக பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனையாகும். குறிப்பாக பெண்ணுறுப்பின் வெஜைனா, கிளைட்டோடஸ், வல்வா ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். அவை சீரான முறையில் செயல்பட்டால் பாலியல் உறவும் சீராக இருக்கும்.

    அதேபோல் பெண்ணுறுப்பு பகுதிக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் சீரான நிலையில் இருக்க வேண்டும். பல நேரங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் கூட பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் மூன்றாவது முக்கியமான விஷயம், நரம்பு மண்டலங்களின் செயல்பாடு ஆகும். இந்த 3 விஷயங்களுமே பாலியல் உறவுக்கு மிக முக்கியமானதாகும். இவை அனைத்தும் சீராக இருந்து, மனரீதியாக ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ரீதியான பாலியல் உறவு என்பது சீராக நடைபெறும்.

    கேள்வி:- பாலியல் உறவு பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கிறதா?

    பதில்:- பொதுவாக பாலியல் உறவில் ஒரு பெண்ணின் உச்சகட்டமான ஆர்கஸம் என்பது பெண்கள் பலரும் அறியாத விசயமாக உள்ளது. இன்றும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இதுபற்றி பெண்கள் மற்றவர்களிடமோ, குறிப்பாக பெண் மருத்துவர்களிடம் கூட ஆலோசனை கேட்பதில்லை. நான் குழந்தையின்மை சிகிச்சை நிபுணராக இருக்கிறேன். குழந்தை பேறு தொடர்பாக உறுப்புகளின் செயல்பாடுகளை கவனிக்கின்ற மருத்துவராக இருந்தாலும் கூட எங்களை போன்ற மருத்துவர்களிடம் பாலியல் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கேட்கின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    உலக அளவில் பார்த்தோமென்றால் இரண்டில் ஒரு பெண்ணுக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் ஒரு மருத்துவரை அணுகி முறையாக இந்த பிரச்சனை பற்றி ஆலோசிப்பது என்பது பல நேரங்களில் நடைபெறாத விஷயமாகவே இருக்கிறது. அந்த வகையில் பாலியல் உறவு பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாகவே இருக்கிறது.

    கேள்வி:- பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் என்னென்ன?

    பதில்:- பாலியல் சார்ந்த விஷயங்களில் பெண்கள் அதிகமாக எதிர்நோக்கும் பிரச்சனைகள்:

    1. பெண் உறுப்பில் ஏற்படும் உலர்வு தன்மை (Lubrication):

    பொதுவாக பாலியல் உறவுமுறைகள் சீராக நடப்பதற்கு முதலாவது பெண் உறுப்பில் லூப்ரிகேஷன், அதாவது நீர் சுரப்பு சீராக இருக்க வேண்டும். இன்று 40 சதவீதம் பெண்கள் பாலியல் பிரச்சனைகளில் முதல் பிரச்சனையாக எதிர்நோக்குவது பெண்ணுறுப்பில் லூப்ரிகேஷன் குறைவு தான். இந்த லூப்ரிகேஷன் குறைவாவதால் பெண்களுக்கு பாலியல் உறவு கொள்ளும் போது வலிகள் ஏற்பட்டு அதுவும் ஒரு பிரச்சனையாக மாறுகிறது.

    2. பாலியல் உறவுகளில் வலிகள்

    (Painful sex)

    பாலியல் உறவு கொள்ளும் போது உலர்வு தன்மை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வலிகள் ஏற்படும். இந்த வலிகள் 2 விதமான வலிகள். ஒன்று, பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு செலுத்தும்போது ஏற்படுகின்ற வலி. இரண்டாவது பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படுகிற சில பிரச்சனைகள். முக்கியமாக தொற்றுக்கள், புண்கள், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படுகிற நரம்புகள் சம்பந்தமான வலி பிரச்சனைகள் (Vulvo dynia). இவை தான் வலி சார்ந்த பாலியல் பிரச்சனைகள் ஆகும்.

    3. பெண்களுக்கு பாலியல் உறவுகளில் ஆர்வம் குறைவாக இருப்பது (Low desire, Low libido):

    பொதுவாக பெண்களுக்கு பாலியல் ஆர்வக்குறைவு என்பது வாழ்நாளில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சனைகள் ஆகும். இதற்கு முக்கியமான காரணம் மனம் சார்ந்த பல விஷயங்கள் ஆகும். உடல் சார்ந்த விஷயங்கள் இருக்குமானால் அதுவும் மன ஆர்வக் குறைபாடுகளை ஏற்படுத்தும். பல நேரங்களில் கணவருக்கு ஏற்படும் சில பாலியல் பிரச்சனைகளாலும் கூட உறவு கொள்ள முடியாத நிலையில், பெண்களுக்கும் இந்த ஆர்வக் குறைவு ஏற்படலாம்.

    இவை தவிர பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் பாலியல் உறவுகளில் ஆர்வக் குறைபாடுகள் ஏற்படலாம்.

    கேள்வி:- பாலியல் பிரச்சனைக்கு மனரீதியான காரணம் ஏதும் உள்ளதா?

    பதில்:- என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களில், பாலியல் உறவில் ஆர்வம் இல்லை என்று சொல்லும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவர்களின் வயது 30 முதல் 45 வயதுக்குள் இருக்கும். இவர்களுக்கு மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் தான் பாலியல் பிரச்சனைக்கு முக்கியமான அடிப்படை காரணமாக அமைகிறது.

    மேலும் பல உளவியல் ரீதியான பிரச்சனைகளும் பாலியல் பிரச்சனைகளுக்கு காரணமாகும். பல நேரங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கலாம். அந்த பிரச்சனைகளால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். அல்லது குடும்ப உறவுகளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் பாலியல் உறவில் ஆர்வம் இருக்காது.

    பல நேரங்களில் குடும்ப சூழ்நிலைகள், உறவுகளுக்குள் ஏற்படுகிற பிரச்சனைகள், சண்டைகள், மன ரீதியான பிரச்சனைகள் ஆகிய அனைத்துமே முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது. எனவே ஒரு பெண் பாலியல் ஆர்வம் குறைவு என்று சிகிச்சைக்காக வந்தால் முதல் முக்கியமான காரணம் மனரீதியான பிரச்சனைகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறோம். கணவன், மனைவி இடையேயான உறவுகள், அவர்களின் குடும்ப சூழல்கள், பொருளாதார நிலைமை ஆகிய அனைத்துமே இதற்கு ஒரு முக்கியமான அடிப்படை காரணமாக அமைகிறது. இந்த வகையில் ஒரு பெண்ணை பொருத்த வரைக்கும் பாலியல் ஆர்வ மில்லாமைக்கு முக்கியமான அடிப்படையான விஷயமே மனதளவில் ஏற்படுகிற பிரச்சனைகளாக இருக்கலாம்.

    கேள்வி:- பாலியல் பிரச்சனைக்கு உடல் ரீதியாக ஏற்படும் காரணங்கள் என்ன?

    பதில்:- உடல் ரீதியான பிரச்சனைகள், குறிப்பாக இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, சர்க்கரை வியாதி இவை அனைத்தும் பாலியல் பிரச்சனைகளோடு உள்ளடங்கும்.

    நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள்:

    அதாவது பாலியல் உறவு ஈடுபாட்டுக்கு தேவையான நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள். குறிப்பாக மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்படுகிற பிரச்சனைகளால் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படும். ஏனென்றால், பாலியல் உறவுக்கான அடிப்படையான ஹார்மோன் டோபமைன் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர். பாலியல் உறவு நன்றாக இருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு சீராக இருக்க வேண்டும். இந்த டோபமைன் ஹார்மோன் குறைவாக இருப்பவர்களுக்கு பாலியல் பிரச்சனைகள் ஏற்படும்.

    ரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்சனைகள்:

    பெண் உறுப்பில் ஏற்படுகிற ரத்த ஓட்டம் பாலியல் உறவுக்கு முக்கியமான அடிப்படையாக அமைகிறது. ரத்த ஓட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம் (வாஸ்குலர் காரணங்கள்).

    பெண்கள் 40 வயதை தொடும்போது அவர்களுக்கு சில நேரங்களில் ரத்த ஓட்டம் குறைவு, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெண்ணுறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் குறைவாகும் போது பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

    கேள்வி:- வஜினிஸ்மஸ் பிரச்சனை என்றால் என்ன?

    பதில்:- வஜினிஸ்மஸ் என்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் பய உணர்வாகும். பெண்ணுறுப்பில் எந்தவொரு பொருட்களையும் உள் செலுத்தும் போது இந்த பய உணர்வு ஏற்படுகிறது. பெண்கள் பயன்படுத்துகிற டேம்போன், ஆணுறுப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகள் உள் செல்வதில் இந்த பெண்களுக்கு பயம் ஏற்பட்டு அதனால் ஏற்படுகிற பிரச்சனைதான் வஜினிஸ்மஸ். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமண உறவில் ஈடுபட முடியாது. குழந்தை பேறு பிரச்சனைகளும் ஏற்படலாம். இதை முறையாக பரிசோதித்து நல்ல சிகிச்சை முறையில் சரி செய்ய முடியும். இவை அனைத்தும் பெண்களை பொதுவாக பாதிக்கிற பாலியல் பிரச்சனைகள் ஆகும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் உறவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

    செல்: 72999 74701

    Next Story
    ×