என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சிறுநீரகத்தை பாதிக்கும் மது
    X

    சிறுநீரகத்தை பாதிக்கும் மது

    • ரத்தத்தில் இருக்கும் கார்ட்டிசால் 2 வகைப்படும்.
    • ஆல்கஹால் பாதிப்புகள் மனிதனை அதிகமாகவே தாக்கும்.

    குடிமகன்கள் மட்டுமல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் அத்தனை பேரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

    மதுவுக்கு அடிமை, மதுவால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மையம் ஆராய்ந்து சில முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

    இடைவிடாது குடிப்பவர்களுக்கும் சரி, குடியை விட்டவர்களுக்கும் சரி, அவர்கள் ரத்தத்தில் கார்ட்டிசால் அளவு உயர்ந்தே காணப்படும். இந்த கார்ட்டிசால்தான் ஒருவரது உணர்ச்சிகளை முறைப்படுத்தல், பாகுபாடு செய்யும் திறமை, நோய் எதிர்க்கும் இயல்பு, உடலின் சக்தி ஆகிய எல்லாவற்றுக்குமே மூலகாரணம்.

    பல மாதங்களுக்குத் தொடர்ந்து மது அருந்துபவர் உடலில் இந்த கார்டிசால் அளவு அதிகமாக இருக்கிறது. அத்தோடு மட்டுமல்ல, அவர் குடிப்பதை நிறுத்தினாலும் இந்த கார்டிசாலின் அளவு இன்னும் அதிகமாகி விடுகிறது.

    அந்த நிலையில் காணப்படும் கார்ட்டிசாலின் அளவு சாதாரணமாக இருக்கும் நிலையை விட 2 அல்லது 3 மடங்கு அதிகம். ஆல்கஹால் நேரடியாக மூளையின் ரசாயனக் கூறுகளையும் அட்ரினல் சுரப்பிகளையும் பாதித்து கார்ட்டிசாலை உற்பத்தி செய்கிறது.

    நெடு நாளைக்கு அதிக அளவில் குடித்து விட்டுப் பின் திடீரென்று நிறுத்தினாலும், இந்த கார்ட்டிசாலின் உற்பத்தி அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை. ரத்தப் பரிசோதனை மூலம் கார்ட்டிசாலின் அளவைத் தீர்மானிக்கிறார்கள். உமிழ் நீரைச் சோதித்துக் கண்டு பிடிக்கிறார்கள்.

    ரத்தத்தில் இருக்கும் கார்ட்டிசால் 2 வகைப்படும். கட்டுப்பட்ட கார்ட்டிசால், கட்டுப்படாத கார்ட்டிசால் என்று இருவகை உள்ளது. இவற்றில் கட்டுப்பட்ட கார்ட்டிசால் புரோட்டீனுடன் பிணைக்கப் பட்டிருப்பதால் அது செயல்படாது.

    ஆனால் கட்டுப்பாடில்லாத கார்ட்டிசால்தான் செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள பெரும்பாலான கார்ட்டிசால் கட்டுப்பட்டவைதான்.

    ஆனால் உமிழ்நீரில் உள்ளது சுதந்திரப்பறவை. அது தான் ஜம்மென்று செயல்படுகிறது. அதனால் ரத்தத்தைபரிசோதிப்பதை விட உமிழ் நீர் சோதனையே சிறந்தது.

    ஆல்கஹால் பாதிப்புகள் மனிதனை அதிகமாகவே தாக்கும். ஆல்கஹாலால் ரத்தத்தில் அதிகமாகிற கார்ட்டிசால் என்சைம்தான் மனித உடலுக்கு மிகப் பெரிய வில்லன். வேறு எந்த நோயையும் விட கொடூரமானதும் கூட. பல்வேறு நோய்களை உருவாக்கக் கூடிய தன்மை ஆல்கஹாலுக்கு உண்டு.


    கார்ட்டிசாலின் கைங்கரியத்தை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் மதுபானக் கடை முன்பு நிற்கக் கூட பயப்படுவார்கள். அந்த அளவிற்கு உடலைச் செயலிழக்கச் செய்துவிடும்.

    ஆல்கஹாலின் அளவு ரத்தத்தில் அதிகமானால் உடல் விபரீதத்தை நோக்கி போக ஆரம்பித்து விடும். சிறுநீரகக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், இருதய அதிர்ச்சி என எல்லா நோய்களுமே வர வாய்ப்பிருக்கிறது.

    மதுபான பழக்கம் உள்ளவர்களின் ரத்தத்தில் கார்டிசால் என்கிற என்சைம் அளவு அதிகமாக ஆகிறது. அதனால் மூளையின் செயல்படும் தன்மையில் மாற்றமும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கோபம் வருவது. மன அழுத்தம் போன்றவையும் ஏற்படுகின்றன.

    முதல் கார்ட்டிசால் சிறுநீரகத்தைத் தாக்கி அதனுடைய செயல்பாட்டைக் குறைத்து விடுவதுடன் பாதிப்பு தொடரும் போது சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் அல்கலைன் பாஸ்பேட் யூரியா கிரியேடிரைன்னான், சோடியம், பொட்டாசியம் போன்றவற்றின் அளவுகளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

    கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

    மேற்கண்டவை ரத்தத்தில் அதிகரிப்பதால் ஏற்படக் கூடியவையே மேற்சொன்ன பாதிப்புகள்.

    இப்பாதிப்பானது மூளையில் உள்ள கட்டுப்பாட்டு இயக்க அமைப்புகளையும், அட்ரினல் சுரப்பியையும் உசுப்பி விட்டு கார்ட்டிசாலின் உற்பத்தியை அதிகரித்து விடுகிறது. இதனால் ஞாபக சக்தி குறைய ஆரம்பிக்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். உடலில் வியர்வை அதிகமாக சுரக்கும். கோபம் அதிகரிக்கும்.

    கால்வலி, உடலில் உள்ள தசைகளில் சுழற்சி போன்று வலி ஏற்படும். உடலில் பதற்றம் அதிகரிக்கும். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். உமிழ் நீர் தன்னிச்சையாக வெளியில் ஒழுகக் கூட செய்யும்.

    உடலில் ஏற்படும் இயற்கை உபாதைகளான மலம், சிறுநீர் போன்றவை மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக வெளியேறக்கூட வாய்ப்பு இருக்கிறது. மன ரீதியான பாதிப்பும் உண்டு.

    குடிபழக்கம் உள்ளவர்களிடையே வேலையில் கவனம் இருக்காது. குடிக்கிற நேரம் வரும் போது எந்த விஷயத்திலும் கவனம் போகாது.

    எரிச்சல் காரணமாக குடும்பத்தினரிடையே அன்றாடம் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.

    அடுத்து இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள். கார்ட்டில் என்சைம் அதிகரிப்பதால் கொழுப்பு அதிகமாகி ரத்தக் குழாய்களில் தங்கி விடும். இதனால் இதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு கொண்டு செல்லப்படும் ரத்தத்தின் வேகம் குறைந்து ஒவ்வொரு செயல்பாடும் மந்தமடையும் அல்லது பாதிக்கப்படும். இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை சரி செய்ய பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியது இருக்கும்.

    மூளை பாதிப்படைவதால் கண்ணின் பார்வை குறைய ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட மனிதரின் பேச்சுத் திறன் குறைந்து குரல் பிசிறடிக்கும். நாள் ஆக ஆக பேசும் போது வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத அளவிற்குப் போய்விடும்.

    மேற்கண்ட பாதிப்புகளின் தன்மை அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கோமா நிலைக்குக்கூட தள்ளப்படுவார். அதுபோல உடலின் வெளிப்புற தோலின் நிறம் மாறும், தோல் அரிப்பு ஏற்படும்.

    மொத்தத்தில் மனித உடலுக்கு அத்தியாவசியத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்து போய் மற்ற நோய்கள் உடலைத் தாக்கும் நிலைக்கு ஆல்கஹால் ஆட்பட்டு விடும். மதுபானம் அருந்தும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றால் டாக்டரிடம் சென்று அதற்கான ஆலோசனையைப் பெற்று படிப்படியாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது நல்லது.

    பின் விளைவுகளுக்கு பயந்து அவசர அவசரமாக குடிப்பதை நிறுத்தினால் படபடப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, எரிந்து விழுவது போன்ற மனரீதியான பிரச்சனைகள் உங்களை வாட்டி எடுக்கும். இந்த எச்சரிக்கையை குடிமகன்கள் ஏற்றுக் கொண்டால் உடலுக்கும் நல்லது, குடும்பத்திற்கும் நல்லது.

    போன்- 9994932121

    Next Story
    ×