என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிகத்துடன் இலக்கியம் வளர்த்த துறவிகள்!
    X

    ஆன்மிகத்துடன் இலக்கியம் வளர்த்த துறவிகள்!

    • சகோதரத்துவத்தை உடன்பாட்டு முறையில் போதிக்கிறது ராமாயணம்.
    • `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!` என்ற அதன் உபதேசமே இந்திய மனங்களின் இணையற்ற லட்சியம்.

    இந்திய ஆன்மிக மரபில் பல துறவியர் தவ ஆற்றல் நிறைந்தவர்களாக இருந்ததோடு கூடவே, உயர்ந்த எழுத்தாற்றல் நிறைந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களால் இலக்கியம், ஆன்மிகம் இரண்டு துறைகளும் ஒருசேரத் தழைத்துச் செழித்திருக்கின்றன.

    தன் சொந்தக் குடும்பத்தைத் துறப்பது மட்டுமல்ல துறவு. மொத்த சமுதாயத்தையும் தன் சொந்தக் குடும்பமாக நினைத்துப் பாரபட்சமில்லாமல் அனைவர் மேலும் அன்பு செலுத்துவதும் துறவுதான். எனவே துறவியர் எழுதிய எழுத்துகள் மூலம் அனைத்து மக்களும் பயன் பெற்றனர்.

    தங்களுக்கென்று தனிப்பட்ட பொருள்தேவை எதுவும் இல்லாததால், துறவியர் பொருளுக்காக எழுதவேண்டிய அவசியம் இருப்பதில்லை. சுயநலத்தைத் தவிர்த்துப் பொதுநலனுக்காகவே வாழ்ந்த மகான்கள் அவர்கள்.

    எனவே அவர்கள் உயர்ந்த நோக்கங்களுக்காகவும் மேலான லட்சியங்களுக்காகவும் தனிமனிதனும் சமுதாயமும் மேன்மை அடைவதற்காகவும் எழுதினார்கள்.

    துறவியர் எழுத்தாளர்களாகவும் இயங்கி, சமுதாயத்தைத் தங்கள் எழுத்தால் நெறிப்படுத்திய மரபு பாரத தேசத்தில் மிகப் பழங்காலத்திலேயே தொடங்கி விட்டது.

    இரு துறவியர் எழுதிய இருபெரும் இதிகாசங்கள்தான் இன்றளவும் இந்திய மனங்களை அறத்தின் பாதையில் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஒருவர் ராமகாதையை இதிகாசமாக்கிய துறவியான மகரிஷி வால்மீகி. பிறப்பால் வேட்டுவ ஜாதியைச் சேர்ந்த அவர், எந்த ஜாதியினரும் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைய முடியும் என்பதற்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்.

    ராமாயணம் நடந்த காலத்திலேயே வாழ்ந்து ராமாயணக் கதையைச் சுடச்சுட எழுதிய துறவி அவர். சீதை அவரை அண்ணன்போல் கருதி அவரிடம் அடைக்கலம் புகுந்ததையும் சீதாராமனின் புதல்வர்களான லவனும் குசனும் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்ததையும் அவர்கள் வால்மீகி ராமாயணத்தை ராமன் முன்னிலையிலேயே பாடியதையும் ராமாயண உத்தரகாண்டம் உருக்கமாய்ப் பேசுகிறது.

    வேட்டுவரான வால்மீகி தன் இதிகாசத்தில் சித்தரித்த சீதை என்ற பெண்மணிதான் இந்தியப் பெண்களின் லட்சிய வடிவம் என வியந்து போற்றுகிறார் வீரத் துறவி விவேகானந்தர்.

    இன்னோர் இதிகாசமான மகாபாரதத்தை எழுதிய வியாசரும் ஒரு துறவியே. அவரது எழுத்தின் மேன்மை உணர்ந்து அவர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமானே தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு அந்த இதிகாசத்தை எழுதினார் என்கிறது புராணக் கதை. சகோதரத்துவத்தை உடன்பாட்டு முறையில் போதிக்கிறது ராமாயணம். அதன் நாயகனான ராமபிரான் செல்லுமிடமெல்லாம் குகன், சுக்கிரீவன், விபீஷணன் என்று புதிய புதிய சகோதரர்களை உருவாக்கிக் கொள்கிறான். அதனால் அவனுக்கு விளையும் நன்மைகளைச் சித்திரிக்கிறது அந்த இதிகாசம்.

    அதே சகோதரத்துவத்தை எதிர்மறை முறையில் பேசுகிறது வியாசரின் மகாபாரதம். அண்ணன் தம்பிச் சண்டை மகாபாரதப் போர் மூலம் எத்தகைய பேரழிவுக்கு வித்திடுகிறது என்பதை விவரித்து எச்சரிக்கிறது அது.

    மகாபாரதத்தின் ஒரு பகுதியாக வருவதும் அதில் வரும் ஒரு பாத்திரமான கண்ணன் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு போதித்ததுமான பகவத் கீதைதான் இன்றளவும் பாரத மனங்களைக் கோட்பாட்டு ரீதியாக ஆட்சி செய்யும் புனித நூல்.

    `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!` என்ற அதன் உபதேசமே இந்திய மனங்களின் இணையற்ற லட்சியம்.

    கீதையின் தத்துவங்களால் கவரப்படாத உயர்நிலைப் பிரமுகர்கள் இல்லை. மகாத்மா காந்தி, வினோபா பாவே, பால கங்காதர திலகர், மகான் அரவிந்தர், மகாகவி பாரதியார் என கீதைக்கு உரையெழுதியவர்கள் இன்னும் எத்தனையோ பேர்.

    ஆக வால்மீகி, வியாசர் என்ற இரு பெரும் துறவியரின் இதிகாச எழுத்துக்கு இந்தியக் கலாசாரமும் இந்தியப் பண்பாடும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றன.


    சம்ஸ்கிருத இலக்கியங்களைப் படைத்த துறவியர் இவ்விருவரைத் தவிர மேலும் பலர் உண்டு.

    காலடியில் பிறந்தவரும் தம் காலடியால் பாரத தேசம் முழுவதும் நடந்தவருமான ஆதிசங்கரர் அவர்களில் மிக முக்கியமானவர்.

    `கனகதாரா ஸ்தோத்திரம், லட்சுமீ நரசிம்ம ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம், மனீஷா பஞ்சகம், கணேச பஞ்ச ரத்தினம். நிர்வாணாஷ்டகம்` உள்ளிட்ட பல பக்திப் பனுவல்களப் படைத்த பெருமை பெரும் இலக்கியவாதியான துறவி ஆதிசங்கரருக்கு உண்டு. `பிபரே ராமரசம், சிந்தா நாஸ்திகிலா, காயதி வனமாலி` போன்ற உயர்ந்த பக்திக் கீர்த்தனைகளை எழுதிய சதாசிவப் பிரம்மேந்திரர் ஆன்மிகம், சங்கீதம், இலக்கியம் என்ற மூன்று துறைகளையும் செழுமைப் படுத்திய துறவி.

    இன்னும் ஏராளமான துறவியர் சம்ஸ்கிருத இலக்கியத்தைத் தங்கள் எழுத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மிக நீண்டது. தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றுப் பரப்பிலும் பல துறவியர் அதன் செழுமைக்குக் காலந்தோறும் வளம் சேர்த்திருக்கிறார்கள். `நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த` இளங்கோ அடிகள் ஒரு துறவியே. சேரன் செங்குட்டுவனின் தம்பியான இவர் இளவரசுப் பட்டத்தைத் துறந்து சமணத் துறவியானார் என்கிறது மரபுவழிக் கதை.

    சிலப்பதிகாரத்தில் வரும் `ஆய்ச்சியர் குரவை` போன்ற பகுதிகளில் திருமால் உள்ளிட்ட இந்துமதக் கடவுளர் மனமாரப் புகழப்படுவதைப் பார்க்கிறோம். இளங்கோ என்ற சமணத் துறவிக்குப் பிற மதக் காழ்ப்பு ஒருசிறிதும் இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்கிறோம்.

    சிலம்பைப் பயில்வோர் மனத்தில் தமிழர்களின் பாரம்பரிய மத நல்லிணக்க உணர்வை எண்ணிப் பெருமிதம் தோன்றுகிறது.

    அந்தக் காலம் தொட்டே ஆண்களைப் போல் பெண்களுக்கும் துறவு பூணும் உரிமை இருந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறார் சிலப்பதிகாரத்தில் பூம்புகாரிலிருந்து மதுரை வரும்வரை கோவலனுக்கும் கண்ணகிக்கும் வழித்துணையாக வரும் சமணத் துறவியான கவுந்தி அடிகள்.

    வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து `இவர்கள் யார்?` என வினவ, `இவர்கள் எம் மக்கள்!` என அன்போடு பதில் சொல்கிறார் கவுந்தி அடிகள்.

    `உம் மக்கள் என்றால் அவர்கள் ஒருவரையொருவர் மண முடிப்பரோ?` எனக் கேலி பேசுகிறார்கள் அவர்கள். சீற்றமடைந்த கவுந்தி அடிகள் அவர்களை முள்ளுடைக் காட்டில் முதுபெரும் நரிகளாகுமாறு சபித்தார் எனக் கூறி அந்தப் பெண் துறவியின் தவ ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது சிலம்பு. பின்னர் மாதரி என்ற பெண்ணின் வீட்டில் கோவலனையும் கண்ணகியையும் தங்க வைக்கிறார் அவர் எனவும் கதையைத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறது சிலப்பதிகாரம்.

    இரட்டைக் காப்பியங்களில் சிலம்போடு சேர்த்து எண்ணப்படும் இன்னொரு காப்பியம் மாதவியின் மகளைக் கதாநாயகியாகக் கொண்டு எழுதப்பட்ட மணிமேகலை. அதை இயற்றிய கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஒரு பெளத்தத் துறவியே. இளங்கோ அடிகளின் சமகாலத்தில் வாழ்ந்த அவர், அவரது நெருங்கிய நண்பராகவும் இருந்தார் என்கிறது வரலாறு. அவர் தாம் படைத்த காப்பியத்தில் கதாநாயகியான மணிமேகலையையே ஒரு துறவினியாகப் படைக்கிறார்.

    காப்பிய காலத்தில் மட்டுமல்லாமல் இடைக் காலத்திலும் பல துறவியர் இலக்கியம் படைத்துத் தமிழை வளப்படுத்தியதைத் தமிழ் இலக்கிய வரலாறு பதிவு செய்துள்ளது.

    `பிரபுலிங்க லீலை` போன்ற உன்னதமான செய்யுள் நூல்களை எழுதியவரும் கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப் படுபவருமான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் துறவு நிலையில் வாழ்ந்தவரே.

    `சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்` ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரைப் பற்றியும் `நால்வர் நான்மணிமாலை` என்ற செய்யுள் நூலைப் படைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

    இன்றளவும் தாய்ப்பாசத்திற்கு இலக்கணமாகத் திகழ்பவரும், அன்னையின் சடலத்தை எரிக்க நேர்ந்தபோது அற்புதமான வெண்பாக்களை உள்ளம் உருகும் வகையில் படைத்தவருமான பட்டினத்தார், துறவிதான்.

    தன் அக்கா உண்ணாமுலையின் மகளான தனக்கோடி அம்மையாரை வற்புறுத்தல் காரணமாக மணந்தாலும் மணமான அன்றே மணவாழ்வை விட்டு விலகித் துறவு வாழ்க்கை வாழ்ந்த ராமலிங்க வள்ளலாரை விட்டு விட்டு பக்தி இலக்கிய வரலாற்றை எப்படி எழுத இயலும்?

    வள்ளல் பெருமான எழுதிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டுத் தானே திருவருட்பா? தமிழ் பக்தி இலக்கிய வானில் ஒளிவீசும் நிரந்தர நட்சத்திரமல்லவா ராமலிங்க வள்ளலார்?

    `அட்சர மணமாலை` உள்ளிட்ட பல செய்யுள் நூல்களைப் படைத்த பகவான் ரமண மகரிஷி என்ற மாபெரும் துறவி குறித்து அறியாதார் யார்? ஆன்மிக எழுத்துலகில் அவர் பங்களிப்பும் கணிசமானது. தத்துவச் செழுமை நிறைந்து, பயில்பவர்களை நான் யார் என்ற விசாரத்தில் ஆழ்த்திச் சிந்திக்க வைப்பது. நூறாண்டு வாழ்ந்தவரும் அண்மைக் காலத்தில் தோன்றிய உண்மைத் துறவியுமான காஞ்சிப் பரமாச்சாரியார் ஏராளமான விஷயங்களைத் தம் அடியவர்களுக்கு உரையாடல்களிலும் சொற்பொழிவுகளிலும் எடுத்துரைத்து அவர்களை நெறிப்படுத்தினார்.

    அவை அனைத்தையும் தொகுத்து எழுதினார் அவரது அடியவரான ரா. கணபதி. அவ்விதம் எழுதப்பட்ட பரமாச்சாரியாரின் சிந்தனைகள் `தெய்வத்தின் குரல்` என்ற தலைப்பில் பல தொகுதிகளாக வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப் பட்டுள்ளன.

    மகாகவி பாரதியாரின் சம காலத்தவரும் பாரதியாரால் பெரிதும் மதிக்கப் பட்டவருமான மகான் ஸ்ரீஅரவிந்தர் புதுச்சேரியில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவரே. அவர் தமது சிந்தனைகளை ஆங்கிலத்தில் வடித்துத் தந்து, ஆங்கில இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளார்.

    மகான் ஸ்ரீஅரவிந்தரின் தத்துவச் செறிவு நிறைந்த ஆங்கிலச் செய்யுள் நூலான சாவித்திரி உலகம் போற்றும் உன்னத ஆன்மிகக் காப்பியமாகப் போற்றப் படுகிறது.

    பாரத தேசம் பற்பல துறவியரின் எழுத்தால் பயன்பெற்ற தேசம். அவ்விதம் சொல்வதும் சரியல்லதான். பாரதத் துறவியரின் தவ ஆற்றல் நிறைந்த தூய எழுத்துகளால் உலகம் முழுவதுமே பயன் பெற்றிருக்கிறது என்று சொல்வதே சரி.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×