என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அம்மன்குடிக்கு அழைக்கும் அஷ்டபுஜ துர்க்கை!
    X

    அம்மன்குடிக்கு அழைக்கும் அஷ்டபுஜ துர்க்கை!

    • ஈசனும் மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர்.
    • மகாசக்தியின் ஒளியையும் உருவமும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க ஆனந்தம் அடைந்தனர்.

    ஆடி மாதம் கும்பகோணம் பகுதி ஆலயங்களை தரிசனம் செய்ய செல்வதாக இருந்தால் மறக்காமல் அம்மன்குடிக்கு சென்று வாருங்கள். இந்த ஊர் கும்பகோணத்தில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

    இந்த ஊரில் இருக்கும் அஷ்டபுஜ துர்க்கை பல்வேறு சிறப்புகள் கொண்டவள். இதனால் இந்த தலத்தில் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும். அதுபோல ஆடி மாதமும் சிறப்பு பூஜைகள் உண்டு.

    இந்த தலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.....

    அசுர சகோதரர்களான கரம்பனும் ரம்பனும் தவம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விபட்டபோது தேவர்கள் மிரண்டு போனார்கள். கரம்பன், ஜலஸ்தம்பனம் என்றழைக்கப்படும் நீரின் சக்தியை தன் வசமாக்கும் வித்தையை வரமாகப் பெறும் தவத்தை மேற்கொண்டான். மூச்சை நிறுத்தி நீருக்குள் உயிர் ஜீவிக்கும் தன்மையை தன்வயமாக்கினான்.

    அவன் சகோதரன் ரம்பன் மேகம் முட்டும் உயரத்திற்கு அக்னியை மூட்டினான். ஒற்றைக் காலில் நின்று மனதை ஒருமையாக்கி தீக்கடவுளை சித்தத்தில் நிறுத்தினான். தீக்குள் தீயாகி மறையும் ஆற்றல் பெற்றான்.

    அசுரர்கள் மும்மூர்த்திகளையும் எப்படியாவது எதிரில் நிறுத்தி வரம் கோருவதில் கில்லாடிகள். எனவே அவர்களது தவத்தை தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அவர்கள் தலையை துண்டாக்க வேண்டும் என்று தேவர்கள் முடிவு செய்தனர்.


    இந்திரன் நீருக்குள் இருக்கும் கரம்பனை எவ்வாறு கவிழ்க்கலாம் என யோசித்தான். சத்தம் போடாது முதலை உருவில் நீரில் நழுவி வழுக்கிக் கொண்டு சென்றான். கரம்பனின் காலை முதலையாக மாறிய இந்திரன் கவ்வினான். கபளீ கரம் செய்தான்.

    ஐயாறுகளும் சங்கமிக்கும் அந்த இடம் ரத்தச் சிவப்பாகியது. அசுர சகோதரனின் ஓலத்தையும் பொங்கிவரும் ரத்த வெள்ளத்தையும் பார்த்து ரம்பன் புரண்டு புரண்டு அழுதான்.

    ரம்பனின் ரத்தம் கொதித்தது. சித்தம் முழுதும் தன் சந்ததியை - சக்தியை பெருக்க வேண்டும் என்று யோசித்தது. எருதாக வடிவெடுத்தான். எதிரே வந்த பெண் எருமையை இணையாக்கிக் கொண்டான்.

    பெண் எருமை பாய்ந்த வேகத்தில் அதற்குள்ளிருந்து கருப்பாக, எருமைத் தலையோடு மானுட உடம்போடு அதீத சக்தி தளும்ப, நான்கு கால் பாய்ச்சலாக வெளிவந்து ஒருவன் வீழ்ந்தான்.

    அசுரக் கூட்டம் புதியவனை ஆரத் தழுவிக் கொண்டது. அவனுக்கு 'மகிஷன்' என பெயர் சூட்டி மகிழ்ந்தது. தந்தை ரம்பனின் விருப்பத்தை மகிஷன் நிறைவேற்றத் துடித்தான். மேரு மலைக்கு ஓடினான். உக்கிரத் தவமியற்றினான். பிரம்மனும் அவன் முன் தோன்றி காட்சி அளித்தார்.

    தனக்கு மரணம் வராதிருக்க வேண்டும் என்று மகிஷன் வரம் கேட்டான். அதற்கு பிரம்மன், ''என் சக்திக்கு மீறியதை என்னால் கொடுக்க இயலாது'' என்றார்.

    ''பெண் ஒருத்தியைத் தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது'' என இறுதியாக மகிஷன் கேட்டான். அதை ஏற்று பிரம்மன் வரம் தந்தார். பிரம்மனின் வாக்கில் அவரறியாது பிரமாண்ட சக்தி உருவானது.


    மகிஷனின் முழுக் கூட்டமும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டது. தேவலோகத்தை அநாயாசமாக அசுரலோகமாக்கிக் கொண்டது. இந்திரன் பரிதாபமாக தளர்ந்துபோய் தனது குருவான பிரஹஸ்பதியின் பாதத்தில் சோர்வாகச் சரிந்தான்.

    தேவர்களின் நிலையை எண்ணி பிரகஸ்பதி வருந்தினார். பராசக்தியிடம் முறையிடுங்கள். பிரம்மன் அளித்த வரம் குறித்து திருமாலிடம் சொல். ஈசனின் தாள் பணிந்து உருகு. அதற்கு முன்பு ஒருமுறை தளராது போர்க்களம் சென்று போரிட்டுப் பார்'' என்று அறிவுரை கூறினார் பிரகஸ்பதி.

    இந்திரன் இப்போது தெய்வ நினைவோடு போரிடுவதை விட தெய்வத்தையே போருக்கு அழைக்கலாமே என்று ஆழமாக யோசித்தான். பரமேஸ்வரன், மகாவிஷ்ணுவின் பாதங்களில் சகல தேவர்களும் போய் வீழ்ந்தனர்.

    ஈசனும் மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர். மகா சக்தியான பராசக்தியை நாடும் மா தவம் அது. தேவர்களும் அவர்களோடு இணைந்தனர்.

    சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி சிவனுக்குள்ளும், மகா விஷ்ணுவுக்குள்ளும் ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுவதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் மகாலட்சுமி. அவளிடம் பிரம்மனின் செம்மை பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று.

    பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாகி மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார். கனலாகிச் சிவந்தாள் துர்க்கா. வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். சூரியனின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் மேல் உதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தன.

    மகாசக்தியின் ஒளியையும் உருவமும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க ஆனந்தம் அடைந்தனர். அவள் பாதம் பணிந்துத் துதித்த னர். 'ஜெய... ஜெய...' என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மகாளய அமாவாசைக்கு முந்தைய தினம். பிரளயத்தில் பார்வதி காளியாகி வந்தாள். இப்போது மகாலட்சுமியே துர்க்கையாக எழுந்தாள்.

    சகல ஆயுதங்களையும் அவள் முன் மலையாகப் பரப்பினர். ராஜராஜேஸ்வரியாக நின்றவளுக்கு ராஜசிம்மத்தையே கொடுத்தான் இமயத்து ராஜன் ஹிமவான். சிம்மம் பிடரியைச் சிலிர்த்து கம்பீரமாக நடந்து தேவியின் அருகில் நின்றது.

    மகிஷன் எங்கோ தொலைதூரத்தில் தேவர்களின் பிளிறல் கேட்டு முகம் சிவந்தான். அவன் திரும்புவதற்குள் சிம்மத்தின் கர்ஜனை அவன் காதை செவிடாக்கியது. மகாலட்சுமி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அதை புல்லாகக் கிள்ளி எறிந்தாள்.

    அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது.

    இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலட்சுமியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே 'மகிஷாசுர மர்த்தினி' எனப்படுபவள்.

    பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து அம்மன்குடி தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்த தால் இத்தலத்தை 'தேவி தபோவனம்' என அழைத்தனர்.

    இங்குள்ள கோவில் சிறியதும் அல்ல பெரியதும் அல்ல நடுத்தரமானதாக உள்ளது. ஆனால், கீர்த்தியில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஈசன் சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இணையாக தனிக் கருவறையில் துர்க்கா தேவி சிம்ம வாகனத்தில் எழில் கொஞ்சும் திருமுகத்தோடும் அருள் பூக்கும் கண்களோடும் இங்கு அருள்பாலிக்கிறாள்.

    கோவிலின் முகப்பு வாயிலில் உள்ள விநாயகப் பெருமானை தரிசித்து உள்ளே சென்றால் இடது புறத்தில் துர்க்கையின் சந்நதி இருப்பதை காணலாம். பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு இன்னொரு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.

    துர்க்கை சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்து எட்டு கரங்களோடு தோன்றும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகை பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும். இத்தேவியின் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள்.

    துர்க்கை சந்நதிக்கு அருகேயே பார்வதி தேவியின் சந்நதியும் கைலாசநாதரின் மூலக் கருவறையும் உள்ளன. துர்க்கை, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க இந்த தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அம்மனின் நுழைவாயிலில் மிக அபூர்வமான ஒரு சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுவதற்கு அரியதாகும். நவராத்திரியில் பிரதம நாயகியான லட்சுமி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது.

    நவகிரகங்களுக்கு அதிபதியான துர்க்கை இத்தலத்தில் உறைவதால் இக்கோயிலுக்குள் நவகிரகங்கள் இல்லை. ஏராளமான சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலின் கோஷ்டத்து மேல் பகுதியில் ராஜராஜசோழன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது.

    கும்பகோணம் செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய தலம். இந்த ஊருக்கு கும்பகோணம்- உப்பிலியப்பன் கோவில்-அய்யாவாடி வழியாக பஸ்கள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோவிலை அடையலாம்.

    Next Story
    ×