என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அருள் மழை பொழியும் ஆடி மாதம்
    X

    அருள் மழை பொழியும் ஆடி மாதம்

    • தேவர்களுக்கு மாலைப் பொழுது வழிபாட்டு நேரமாக உள்ள காலம் இது.
    • ஆடி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளைப் பார்ப்போம்.

    அம்பிகையின் வழிபாட்டை சிறப்பாக கொண்டாடும் மாதங்களில் ஆடியும் ஒன்று. இந்த மாதம் அம்பாளுக்கு மட்டும் அல்லாது சிவபெருமானின் வழிபாடு, நாராயணரின் வழிபாடு, முருக வழிபாடு என அனைத்து விதமான தெய்வங்களின் அருளையும் மழை எனப் பொழிய செய்யும் மாதம் ஆடி.

    தேவர்களுக்கு மாலைப் பொழுது வழிபாட்டு நேரமாக உள்ள காலம் இது. இதைக் கற்கடக மாதம் என்பார்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். காலத்தோடு ஒப்பிட்டு விழா நடத்துவது, வழிபாடு செய்வது என்பது நம் முன்னோர்கள் வகுத்த நியதி. ஆடி மாதத்தில் விவசாயிகள் தங்களது வேலைகளை மிகவும் வேகமாகத் துவங்குவார்கள். காற்று இதமாக வீச, லேசான மழைச் சாரலோடு இறைவனின் அருள் மழையில் நனையும் காலமாக அமையும்.


    இந்த ஆடி மாதம் பலருக்கும் பண்டிகை மாதமே! ஒரு காலத்தில் மக்கள் ஆடி மாதத்தில்தான் புதுத் துணிகள் எடுத்து ஊர் திருவிழாவினை தங்களது உற்றார், உறவு, நட்பு, சுற்றத்தினரோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று சில பழக்கங்கள் மாறிப் போனாலும் இறை வழிபாட்டின் தன்மை மட்டும் மாறாமல் நிலைத்து நிற்கின்றது. காலம் காலமாக பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், தீ மிதித் திருவிழா, பால் குடம் இதுபோன்ற விழாக்களை இன்றளவும் நாம் கொண்டாடும் மாதமாக இந்த ஆடி மாதம் அமைந்துள்ளது.

    இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, பௌர்ணமி, அமாவாசை, பூரம், தபசு, கிருத்திகை, ஆடி 18, வரலட்சுமி விரதம் என அளவில்லாப் பண்டிகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலகைக் காக்கும் அன்னை பராசக்தி; மாரியம்மன், மகா காளி, ரேணுகா பரமேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அங்காள பரமேஸ்வரி என பலத் திருக்கோலங்களில் நமக்கு காட்சி தந்து நம்மை ஆட்கொள்ளும் அன்னையாக அருள் ஆட்சி செய்து வருகிறாள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளைப் பார்ப்போம்.

    அம்பாளின் சர்வ சக்திகளையும் தரும் ஓர் உன்னத நாள். இந்நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சர்வ மங்களமும் உண்டாகும். வெள்ளிக்கிழமை அம்பிகையின் வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அன்னை பராசக்தியை துர்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவரின் ரூபமாக வெள்ளிகிழமை அன்று வழிபாடு செய்யும்போது முப்பெரும் தேவியர்களின் அருளும் நமக்கு கிடைக்கும்.


    பலரும் அவதிப்படும் ஓர் தோஷம் செவ்வாய் தோஷம். இதனால் திருமணத் தடை, காரியத் தடை மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தையின்மை என பலப்பல பிரச்சனைகளால் துன்பப்படுகின்றோம். இதில் இருந்து விடுபட அம்பாள் வழிபாட்டோடு முருக வழிபாடும் இணையும் நாள்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அதை செய்ய சிறந்த நாள் ஆடி ஞாயிறு. எனவேதான் இந்த நாளில் கூழ் காய்ச்சி வார்த்தார்கள். ஆடியில் சூடு குறைய, உடல் குளிர உதவும் தானியம் கேழ்வரகு. அதை ஒரு காலத்தில் தர்மமாக செய்தார்கள்.

    திருமண வரம், குழந்தை வரம் தரும் நாள். அனைத்து அம்பாள் கோவில்களிலும் பால் குடம், பூச்சொறிதல், திருமணம், வளைகாப்பு, ஊஞ்சல் என கன்னியர்களும், மங்கையர்களும் கொண்டாடிப் பலன் பெறும் நாள்.

    மனிதர்களே தவம் செய்யுங்கள், உங்கள் குறிக்கோளை அடைய தேவையற்ற செயல்களை விட்டு, தேவையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, தவம் செய்தால் நினைத்தது நடக்கும் என்ற கோட்பாட்டை அம்பாளே தானே தவம் செய்து நிரூபித்த நாளே ஆடித் தபசு. அவளின் தவத்தைப் போற்ற சங்கரனும், நாராயணரும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி தந்த நாளே ஆடித் தபசு.

    தேச மங்கையர்க்கரசி

    முன்னோர்களை மதித்தல் தாய், தந்தையர்கள் வாழும் காலத்தில் அவர்களை மதித்து, பேணிப் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களைப் போற்றி வணங்கும் வழக்கத்தை அமாவாசை என்ற நாளில் செய்தார்கள் நமது முன்னோர்கள். மாதம்தோறும் வரும் அமாவாசையை விட சில முக்கியமான மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனி சக்தி உண்டு. அதில் ஒன்றே இந்த ஆடி அமாவாசை ஆகும்.

    பவுர்ணமி நாள் எப்படி முழுமை பெற்ற நாளாக விளங்குகின்றதோ அப்படி ஒரு மனிதன் முழுமை பெற ஞானம் அவசியமானது. அந்த ஞானத்தை நமக்கு உபதேசித்து நம்மை நல்வழிப் படுத்துபவர் எவரோ அவரே நமக்கு ஞான குரு ஆவார். குரு என்பவர் இறைவனுக்கு சமமானவர். அந்த குருவின் அடிச்சுவட்டை சிறிதும் மாறாமல் அப்படியே பின்பற்றுவது மாணவனின் தலையாய கடமை. யார் நமக்கு குரு? அப்படி ஒருவர் எங்களுக்கு இல்லையே என நீங்கள் யோசிக்கலாம். யார் நம் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்தவும், நமது ஆன்மாவிற்கான பயணத்தை செவ்வனே நடத்தவும் வழி காட்டுகிறாரோ அவரே நம் குரு. சிலருக்கு உலகியல் வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களை கற்றுத் தந்திருப்பார்கள். அந்த நபரும் நமக்கு குருவே. பள்ளி, கல்லூரி மற்றும் பல கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களும் நமக்கு குருவே. அவர்கள் அனைவரையும் வணங்க வேண்டிய நாள் குரு பூர்ணிமா. இந்நாளில் ஹயக்கிரீவர் வழிபாடும் சிறப்புக்குரியது.

    நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஓர் உன்னதமான நாள். காவிரித் தாயை கொண்டாடி மகிழும் புனிதமான நாள். பெண்கள் மங்கள நாண் மாற்றி பொங்கி வரும் புதுப் புனலாம் காவிரித் தாயிடம் உன்போல் என் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி கரை புரள வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உயர்வும், பெருக்கும் ஏற்படும் என்பதே ஆடி 18-ன் சிறப்பு.

    நம் சொந்தக் கடவுளாம் கந்தக் கடவுளை வழிபாடு செய்யும் சிறப்பான நாள் இது. அம்பிகையின் அருள் பாலனாக விளங்கும் முருகப்பெருமான் நமக்கு அருளை வாரி வழங்கும் நாள். ஆறு குழந்தையாக ஆயிரத்து எட்டு இதழ் அடுக்குத் தாமரையில் அவதரித்த குமரனை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் வண்ணமாக முருகனை வழிபடும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு பெற்று விளங்குகிறது. ஞான வேலை சக்தி வேலாக மாற்றி முருகன் கையில் அதை வெற்றி வேலாகத் தந்தாள் அம்பிகை. அந்த அம்பிகைக்கு உரிய மாதத்தில் வேலவனை வணங்க வெற்றி நிச்சயம்.

    ஆண்டுதோறும் பல விரத நாட்கள் நமக்கு உண்டு. அதில் பெண்கள் தனது பரம்பரை வழக்கத்தைக் கடைப்பிடித்து விரதம் இருந்து கணவரின் நலனுக்காகவும், குடும்பத்தின் செழிப்புக்காகவும் அன்னை மகாலட்சுமிக்கு நோன்பு நோற்று வணங்கும் நாள். பெண்கள் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து இறை வழிபாடு செய்து அம்பிகையின் அருளை பெறும் இந்த நாளில் அஷ்ட லட்சுமிகளும் வர லட்சுமியாக நம் இல்லம் வந்து நமக்கு வரம் தருவாள்.

    இப்படி ஆடி மாதத்தில் வரும் எல்லா நாட்களும் ஒரு சிறப்பு பெற்ற நாளாகவே உள்ளது. மாதம் முழுவதும் நம்மால் இப்படி கொண்டாட முடியுமா? என்பது சிலருக்கு கேள்வியாக இருக்கலாம். இதில் அவரவருக்கு எந்த நாள் ஏற்றதாகவும், வழக்கத்தில் உள்ளதாகவும் உள்ளதோ அதைக் கடைப்பிடித்து அன்னையின் அருளைப் பெறலாம். உயிர்களுக்கு அளவற்ற கருணையை மழையென பொழியும் கருணாம்பிகை ஆதி சக்தி அன்னையை அன்போடு வழிபடுவோம். அன்னையின் அருள் மழையில் நனைந்து செழிப்போடு வாழ்வோம்.

    Next Story
    ×