என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெரி மெனோபாஸ் பருவத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை
    X

    பெரி மெனோபாஸ் பருவத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை

    • 40 வயது என்பது, பெண்களின் உடலில், மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வயதாகும்.
    • பலவித உறுப்புகளும் செயல் இழக்கும் நிலை ஏற்படும்.

    40 வயதை தாண்டிய பெண்கள் பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு கடந்து செல்வது எப்படி? அதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்...

    40 வயது என்பது, பெண்களின் உடலில், மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வயதாகும். இந்த மாற்றங்கள் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஏற்படுகிறது. பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் நீங்கள் முக்கியமாக உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் சென்று உங்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    நிறைய பெண்களுக்கு பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் படபடப்பாக இருக்கிறது, அதிகம் வியர்க்கிறது என்பார்கள். அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். உடல் ரீதியான மாற்றங்களும் வயதான காலகட்டத்தில் வரக்கூடிய பிரச்சனைகளும் இந்த காலகட்டத்தில் வரும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் 40 வயதை கடக்கும் போது ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

    குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோனும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் ஒன்றோடொன்று சேர்ந்து வருகிற ஹார்மோன்கள். எனவே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் சிறுநீரகம், கல்லீரல், கொழுப்பு சத்து ஆகிய பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது. 40 வயதில் இந்த பரிசோதனைகளை செய்தால் நமது உடல் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அடுத்து வரும் காலங்களில் உடல் நலனில் எந்த வித மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    40 வயதுக்கு மேல் உணவு பழக்க வழக்கங்களை சீராக வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே சாப்பிடுவதைவிட குறைவாக சாப்பிட்டாலும் உங்களின் உடல் பருமன் அதிகமாகும். சரியாக தூக்கம் வராது. எனவே உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான உணவு பழக்க வழக்கங்கள், உடற்ப யிற்சிகள் மற்றும் தேவைக்கேற்ப சில மருந்துகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் புற்று நோய்க்கான மாற்றங்களும் இந்த காலகட்டத்தில் தான் ஏற்படுகிறது. இதற்கான அறிகுறிகள் நமக்கு தெரியாது. அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் நமக்கு தெரிய வரும். எனவே இதற்காக சில பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

    ஜெயராணி

    பெண்களுக்கு முக்கியமாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகிய 3 வித புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றை எளிமையான பரிசோதனையில் கண்டறியலாம். மார்பக பரிசோதனை, மெமொகிராம், சோனோ மெமோகிராம் செய்ய வேண்டும். இதில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை ஆரம்ப நிலையில் பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்து கர்ப்பப்பை ஸ்கேன், கருப்பை அளவுகள் ஆகியவை அந்தந்த வயதுக்கு ஏற்ப நார்மலாக இருக்கிறதா என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.

    இவை அனைத்துமே பெண்களுக்கு பிற்காலத்தில் வரப்போகிற புற்றுநோய்க்கான நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்தும். இந்த பரிசோதனைகளை 2 வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ள வேண்டும்.

    சில புற்றுநோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோய் காரணமில்லாமல் வருவதால் தான் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது முக்கியமான விஷயம். அதன் மூலம் பிற்காலத்தில் வரப்போகிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

    மேலும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது எலும்பு தாது அடர்த்தி குறைவாகி, எலும்புகள் பலவீனமாகி எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 80 சதவீத பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் முடிவு காலத்தை முடிவு செய்வதே இந்த எலும்பு முறிவு பிரச்சனைகள் தான். இதனால் பெண்கள் நிலை குலைந்து படுக்கையில் வாழ்க்கை யை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் பலவித உறுப்புகளும் செயல் இழக்கும் நிலை ஏற்படும். எனவே இதற்காக வைட்டமின் டி3 மற்றும் கால்சியம் பரிசோதனைகளை செய்து அதன் நிலையை அறிந்து கொண்டு அதற்கான துணை உணவுகளையும், அதற்கான பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டால் வயதாகும் போது வருகிற பிரச்சனைகளை ஓரளவு தடுக்க முடியும்.


    இந்த பரிசோதனைகளில் எல்லாமே நார்மலாக இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வயதாகும் போது ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது என்று பலரும் கேட்பதுண்டு. இதற்கு முக்கியமான சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் முதல் முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. நாம் உடற்பயிற்சி செய்யும்போது மனதும், உடலும் ஆரோக்கியம் அடைகிறது. ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சியின் போது உடலை வலுவாக்குவதற்கான பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அதனால் உங்களின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். மேலும் யோகா மூலம் உங்களின் தசைகளை வலிமையாக்கும் போது வயதாகும் போது ஏற்படுகிற தசை பலகீனத்தை தடுக்க முடியும். இந்த காலகட்டத்தில் உங்கள் உணவில் புரதச்சத்து, வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிற பழ வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களுடைய உடலுக்கும், குடலுக்கும் நல்லது. இந்த உணவு முறைகளை நீங்கள் சரியாக கடைபிடிக்கும் போது உடல் ரீதியான ஆரோக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.

    தினசரி உணவுகளில் கீரை ஒரு கப், ஒரு முட்டை, ஒரு பழம், ஒரு காய், கொஞ்சம் சுண்டல், பயறு வகைகள் மற்றும் தேவைக்கேற்ற மாமிச உணவுகள், பால் 2 டம்ளர் ஆகியவற்றை சரிவிகிதமாக எடுத்துக்கொண்டால் தேவையான அனைத்து சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கிறது. இது பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள், மெனோபாஸ் நிலையை அடையும் போது ஆரோக்கியமாக அதை எதிர்நோக்க உங்களை தயார் படுத்திக்கொள்ள உதவும்.

    மேலும் இதனுடன் மன ரீதியான விஷயங்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் இந்த காலகட்டத்தில் ஏற்படும் கோபம், மனநிலை மாற்றம், மன அழுத்தம் ஆகியவை உறவு முறைகளில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் துணையோடு நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய விஷயங்களை பேசுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

    இதுபோன்ற நேரங்களில் பாலியல் உறவு பிரச்சனைகளுக்கு சில மருந்துகளை உங்கள் மருத்துவரிடம் கேட்டால் அதற்கான லூப்ரிகன்ஸ், மெனோபாசில் ஹார்மோன் தெரபி மற்றும் தேவையான மருந்துகள் கொடுப்பார்கள். இதனால் பெண் உறுப்பு உலர்வு, அதனால் ஏற்படும் வலிகள், சிறுநீர் தொற்று ஆகியவற்றை முழுமையாக சீராக்க முடியும். இந்த காலகட்டத்தில் 1000 மில்லிகிராம் கால்சியம் உடலுக்கு தேவைப்படுகிறது. இதனை நாம் சாப்பிடும் உணவில் உள்ள கீரைகள், பழங்கள், பால் ஆகியவை கொடுக்க முடியாது. எனவே நல்ல கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் பலமடையும்.

    அதேபோல் புரதம் நன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு ஓய்வெடுங்கள். தோழிகளுடன் நிறைய விஷயங்களை பேசுங்கள். நல்ல சிந்தனைகளை வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். மெனோபாஸ் வந்து விட்டது என்று கவலைப்படாதீர்கள். இது பெண்களுக்கு அருமையான வாழ்க்கை மாற்றம். இதை ஆரோக்கியத்துடனும், விழிப்புணர்வோடும் எதிர்கொண்டால் இந்த காலகட்டத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும்.

    செல்: 72999 74701

    Next Story
    ×