என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்... சிக்கிய சேரன்..
    X

    மீனா மலரும் நினைவுகள்... சிக்கிய சேரன்..

    • சேரன் படம் எடுக்கும்போது காட்சியோடு ஒன்றி விடுவார்.
    • மறுநாள் வழக்கம் போல் நான் சரியான நேரத்துக்கு சென்று விட்டேன்.

    கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...

    'டபாய்க்குறாடா கண்ணம்மா டபாய்க்கு றாடா...' - என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் வெற்றி கொடி கட்டியது. 2000-வது ஆண்டில் 'வெற்றி கொடி கட்டு' படமும் வெற்றி கொடி கட்டியது. டைரக்டர் சேரன். அவரது படத்தை பொறுத்த வரை படங்கள் சாதாரணமாக தெரிந்தாலும் கதாபாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும். அதே போல்தான் சொல்ல வரும் கருத்துகளும் ஆழமாக இருக்கும்.

    அந்த படத்தில் வள்ளி என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தேன். என்னோடு மாளவிகாவும் உண்டு. முரளி, பார்த்திபன் ஆகிய இரு ஹீரோக்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான்.

    சேரன் படம் எடுக்கும்போது காட்சியோடு ஒன்றி விடுவார். தனக்கு பிடித்த காட்சி. அது எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் அதை நிறைவேற்றுவதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆனால் என்ன...? கொஞ்சம் முன்னே பின்னே என்று நேரம் ஆகலாம். அதனாலேயே சேரன் என்னிடம் சிக்கி கொண்ட சம்பவமும் உண்டு.

    படப்பிடிப்புக்கு சரியாக 7 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பார். அதற்காகவே நான் காலையில் நாலு மணிக்கே எழுந்து குளித்து ரெடியாகி 7 மணிக்கு முன்னதாகவே செட்டுக்கு சென்று விடுவேன். மணி 7 தாண்டியிருக்கும். ஆனால் டைரக்டர் வந்திருக்க மாட்டார். நாங்கள் காத்திருந்து காத்திருந்து வெறுத்து போவோம்.


    ஒரு வழியாக எட்டு மணியளவில் வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் எங்களுக்கு கோபம் வரும். அப்படித்தான் முதல் நாள் ஷூட்டிங்குக்கு 7 மணிக்கே நாங்கள் ரெடியாகி சென்று விட்டோம். ஆனால் சேரன் வரவில்லை. சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் 'என்ன சார் இப்படி? இனி நானும் காலையில் 6 மணிக்குதான் எழும்புவேன். அப்புறம் குளித்து ரெடியாகி வருகிறேன்' என்றேன்.

    நான் அப்படி சொன்னதும், 'சாரிம்மா... இன்னக்கி ஒரு நாள்தான் இப்படி லேட் ஆகிவிட்டது. நாளை சரியாக வந்து விடுவேன்' என்றார். அதற்கு நானும் சம்மதித்தேன். நாளை ஒரு நாள்தான் பார்ப்பேன்... அதன்பிறகு நானும் லேட்டா கத்தான் வருவேன் என்று சொன்னேன். அவரும் 'டேய்.. தம்பிங்களா நாளைக்கு சொதப்பிடாதீங்க' என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டார்.


    மறுநாள் வழக்கம் போல் நான் சரியான நேரத்துக்கு சென்று விட்டேன். அங்கு படப்பிடிப்பு வாகனங்களும் வந்திருந்தன. ஆனால் டிராலி, கேமரா எதுவும் தயராக இல்லை. அதை பார்த்ததும் பள்ளி மாணவி போல் 'கடவுளே நான்தான் ஜெயிக்க வேண்டும். எப்படியாவது 7 மணிக்கு தயாராகிவிடக்கூடாது' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். நேரம் ஆகிறது என்பதை உணர்ந்த சேரன் அவசர அவசரமாக கேமராவில் என்னை மட்டும் குளோஸ் அப்பில் ஒரு போட்டோ எடுத்தார். அது காட்சிக்கு உகந்தது போல் தெரியவில்லை. உடனே நான் இது போலிசார் இதை நான் நம்ப மாட்டேன் என்றதும், 'சரிம்மா... சரிம்மா... இப்ப என்ன...? நீ தான் ஜெயித்தாய்' போதுமா? என்றார்.

    அதில்லை சார். அதிகாலையிலேயே எழுந்து ரெடியாகி வரவேண்டி இருக்கிறது. நீங்கள் லேட்டாக வருவதாக இருந்தால் நானும் ஒரு அரை மணி நேரம் லேட்டாக வருவேன் என்றேன். சரிம்மா என்றார். அதன் பிறகு தினமும் 7.30 மணிக்குத்தான் செல்வேன். இந்த படத்தில் தான் சினிமாத்தனம் என்ற செயற்கையை இயற்கை வென்றது...!

    அது எப்படி என்பதை அடுத்த வாரம் சொல்கி றேன். (தொடரும்...)

    Next Story
    ×