என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
வளம் தரும் வாராகி வழிபாடு
- அம்பாளுக்கு உகந்ததாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி.
- வாராகி என்ற தெய்வம் சப்த மாதர்களில் ஒருவர்.
அண்டம் முழுவதும் பரவி உள்ள இறைவனின் அருட்தன்மையை மானுடர்கள் உணர்ந்து கொள்ள ரூப வடிவமாக இறைவன் எழுந்தருளுவது உண்டு. அதனால்தான் அருவமான இறைவனும், இறைவியும் பற்பல உருவம் தாங்கி வருகின்றனர்.
கருணையின் பிறப்பிடமான அம்பாள் எண்ணற்ற உருவம் கொண்டு நமக்கு அருள் தருகிறாள். அந்த அம்பாளின் கருணையைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் பல விரதங்கள், வழிபடும் நாட்கள் என இருந்தாலும், அவை அனைத்தையும் விட அம்பாளுக்கு உகந்ததாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி.
நான்கு வகையான நவராத்திரிகள் அம்பாளுக்கு சிறப்பானது:
1. பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி
2. ஆனி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி
3. புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்தி
4. தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி
இவற்றில் ஆனி மாதத்தில் வருவது வாராகி நவராத்திரி என்று சொல்லப்படும் ஆஷாட நவராத்திரி.
ஆடிப் பட்டம் தேடி விதை என விவசாயிகள் தங்களது விவசாய வேலையைத் துவங்கும் முன்பு ஆனி மாதத்தில் வாராகியை வழிபடும் காலம் இது.
வாராகி என்ற தெய்வம் சப்த மாதர்களில் ஒருவர். பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என்னும் சப்த கன்னியர்களான இந்த ஏழு தெய்வங்களும் இல்லாத கிராமங்களே இல்லை.
விவசாயிகள் அன்றாடம் தங்களது விவசாய வேலைகளை கவனிக்கச் செல்லும் முன் இந்த சப்த மாதர்களை வணங்கி செல்வது வழக்கம்.
இப்படி ஏழு பேரில் ஒருவராக இருந்த வாராகியின் வழிபாடு இன்று எல்லாருக்கும் தெரிந்து, தனியே வணங்கும் அளவிற்கு அன்னையின் அருள் பரவி உள்ளது. முன்பு அபூர்வமாக ஒரு சில இடங்களில் மட்டுமே அம்பிகையின் திருக்கோயில் இருந்தது. ஆனால் இன்று பல கோவில்களைக் காண முடிகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராகி பிரசித்தி பெற்ற அம்பாள். "சோழ நாடு சோறுடைத்து" என்பதற்கு ஏற்ப விவசாய மக்களுக்கு கண்கண்ட தெய்வம் இந்த வாராகி.
விவசாயம் மட்டும் அல்லாது, மனித வாழ்வில் ஏற்படும் பலவித பிரச்சனைகளை வேரோடு அகழ்ந்து எடுப்பதில் இவள் வல்லவள். இவளின் ரூபமே வராக முகம், அதாவது காட்டுப் பன்றியின் முகம். கொம்பால் எப்படி பூமியை அகழ்ந்து வேரோடு உள்ள கிழங்குகளை உண்ணும் குணம் காட்டுப் பன்றிக்கு உண்டோ, அதுபோல நமது ஆழ்ந்த வினை களைக் கூட வேரோடு நீக்கி, நமக்கு நலம் தரும் நாயகி வாராகி.
அன்னை ராஜ ராஜேஸ்வரியின் படைத் தளபதியும் இவளே. ஒரு படையைக் காக்க எத்தனை வலிமை அதன் தலைவிக்குத் தேவை. படையை நோக்கி எதிரி, தாக்க வரும் முன்னரே தன் படைகளை எச்சரித்து, எதிரியைத் தடுத்து, அழிக்கும் ஆற்றல் பெற்றவள் அன்னை வாராகி.
நம்பிக்கையோடு இவளின் பாதம் பற்றி நம் கண்ணீரை இவளுக்கு காணிக்கை யாக்கி வழிபட்டால் வாழ்வில் எதிரிகளே இன்றி பீடுநடை போடச் செய்பவள் வாராகித் தாய்.
இந்த அம்பாளின் நவராத்திரி காலம் இந்த ஆண்டு 2024 ஜூலை 6-ந் தேதி முதல் 15-ம்தேதி வரை நடைபெறுகிறது. அம்பாளுக்கு இந்த காலத்தில் செய்யும் வழிபாடு மிகவும் புனிதமாக கருதப்படுவது உண்டு. பொதுவாக, வாராகியின் வழிபாட்டினை மேற்கொள்ளும் போது கடைபிடிக்கும் முறைகளை இந்த நவராத்திரி காலத்திலும் கடைப்பிடிக்கலாம்.
வாராகி அம்பிகையின் திருவுருவப் படமோ, சிலையோ இருந்தால் அதை வைத்து வழிபடலாம். சிலையோ, படமோ இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அன்னையின் மந்திரங்களை ஓதி வாராகி அம்பிகையை வழிபாடு செய்யலாம். மந்திரங்கள் மிகவும் எளிமையானதே.
வாராகி மூல மந்திரம்:
"ஓம் க்லீம் வாராக முகி கிரீம் சித்தி
சொரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா:"
வாராகி காயத்ரி மந்திரம்:
"ஓம் மகிஸத்வஜாயை வித்மகே
தந்தஹஸ்தாயை தீமகி
தன்னோ வாராகீப் பிரசோதயாத்"
வாராகி மஹா மந்திரம்:
"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லெளம்
ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராகி வாராகி வராகமுகி வராகமுகி
அந்தே அந்திணி நம:
ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம:
மோகே மோகினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
சர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
சீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்"
மேற்கூறிய மந்திரங்களைப் பாராயணம் செய்வதற்கு சிரமமாக இருந்தால், "ஓம் வாராகி தாயே போற்றி" என்று சொல்லி வழிபடலாம். சிவப்பு மற்றும் நீல நிற மலர்கள் வாராகியை வழிபட சிறப்பானது. இல்லையேல் கிடைக்கும் மலர்களை கொண்டும் வழிபாடு செய்யலாம் தவறில்லை.
மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, நிலக்கடலை, மாதுளம் பழம், வாழைப்பழம், கருப்பு உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், புளி சாதம் போன்ற நைய்வேத்தியங்கள் அம்பிகைக்கு பிரியமானவைகள். இவற்றில் உங்களால் என்ன முடிகிறதோ அதைப் படைக்கலாம்.
இந்த நவராத்திரி காலத்தில் காலையும், மாலையும் வழிபடலாம். கோவில் அருகே இருந்தால் அங்கு சென்று அன்னையின் அபிஷேக, அலங்காரத்தைக் கண்டு வழிபடலாம்.
தினமும் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் பஞ்சமி (10.07.2024) அன்றும், அஷ்டமி (13.7.2024) அன்று மாலையிலும், 14.7.2024 அன்று காலையிலும் அஷ்டமி நேரத்தில் வாராகியை சிறப்பாக வழிபடலாம். காரியம் ஆகும் வரை ஒருவருடன் பழகுவது, காரியம் ஆன பிறகு அவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சிலரது வழக்கம். பக்தியில் கூட இன்று சிலர், தேவைக்கு இந்தக் கடவுள்.. இல்லையென்றால் இன்னொரு கடவுள் என மாறும் நிலையைப் பார்க்கிறோம். அப்படி அல்லாமல் உண்மையான அன்பும், பக்தியும், நம்பிக்கையும் கொண்டு வழிபடும் அன்பருக்கு வாராகி பேசும் தெய்வமாகவே விளங்குகிறாள். இந்த ஆஷாட நவராத்திரியில் அம்பிகையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்